இலங்கை அரசியல்: கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமராக்க முயற்சியா? ரஞ்சன் அருண் பிரசாத்
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (21:37 IST)
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில், நாட்டை விட்டுச் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, முதலில் மாலத்தீவிலும் பிறகு அங்கிருந்து சிங்கப்பூரில் சில வாரங்களும் தற்போது தாய்லாந்திலும் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், கோட்டாபய மீண்டும் தாயகம் திரும்பும் நோக்கத்துடன் இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 24ஆம் தேதி நாடு திரும்பவிருந்த நிலையில், அந்த திட்டம் தள்ளிப்போனது.
ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவரும், ராஜபக்ஷவின் உறவினருமான உதயங்க வீரதுங்க, இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
''கோட்டாபய ராஜபக்ஷ 100 வீதம் 24ஆம் தேதி வருகை தரவிருந்தார். அவர் வருகின்றமையை அன்றைய தினம் நான் அவசரப்பட்டு கூறி விட்டேன். அதன் பின்னர் சில மாற்று கருத்துக்கள் வெளியாகியிருந்தன. அதனால், அந்த பயணத்தை அவர் செப்டம்பர் மாதம் 3ஆம் தேதிக்கு பிற்போட்டுள்ளார்" என உதயங்க வீரதுங்க தெரிவிக்கின்றார்.
இதேவேளை, மிரிஹான பகுதியிலுள்ள அவரது வீட்டில் தங்குவதற்கு கோட்டாபய ராஜபக்ஷவின் மனைவி விருப்பத்துடன் உள்ள போதிலும், இலங்கை அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி என்ற விதத்தில் அவருக்கு அதிகாரபூர்வ இல்லமொன்றை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
கோட்டாபயவை பிரதமராக்க முயற்சி
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முயற்சி செய்து வருகின்றது.
கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியவுடன், அவரை தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்கும் கோட்டாபய ராஜபக்ஷவை, பிரதமராக நியமிக்க திட்டமிடப்பட்டு வருகின்றமை குறித்த தகவல் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அந்த கட்சியுடன் தொடர்புடையவர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
உதயங்க வீரதுங்க வெளியிட்ட கருத்து
கோட்டாபய ராஜபக்ஷவை மீண்டும் அரசியலுக்குள் கொண்டு வருவதற்கு அவருடைய நெருங்கிய சகாக்கள் செயற்பட்டு வருவதாக ராஜபக்ஷவின் உறவினரும், ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவிக்கின்றார்.
''அவரை மீண்டும் அரசியலுக்குள் கொண்டு வருவதற்கு அவருடன் தொடர்புடையவர்கள் எதிர்பார்த்துள்ளனர். தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்தில் அழைத்து வருவதற்கும், பிரதமர் ஆசனம் அல்லது ஏதோ ஒரு ஆசனத்தை வழங்க முயற்சிக்கின்றார்கள். ஆனாலும், பொதுஜன பெரமுன அல்லது அரசாங்கத்தில் உள்ளவர்கள் அதற்கு இணங்குவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. எனினும், அவருடன் இருந்தவர்கள் அதனை எதிர்பார்க்கின்றனர். அவரது ஆழ் மனதிலும் அந்த எண்ணம் இருக்கின்றது" என உதயங்க வீரதுங்க குறிப்பிடுகின்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப் உந்துகொட, ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய சந்தர்ப்பத்தில், கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமர் ஆசனத்தில் அமர்த்துகின்றமை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பிரதமர் பதவியை வழங்க தாம் ஆதரவு தெரிவிப்பதாக உதயங்க வீரதுங்க தெரிவிக்கின்றார்.
''எனது தனி விருப்பத்திற்காக அவரை பிரதமர் பதவிக்கு நியமிக்க முடியாது. நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை விருப்பத்திற்கு அமையவே, பிரதமரை நியமிக்கலாம். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை வெற்றிக் கொள்ள முடியுமாக இருந்தால், அவர் பிரதமராவார். அவர் நாடாளுமன்றத்திற்கு ஏதோ ஒரு வகையில் வருகைத் தந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்றுக்கொள்ள முடியுமானால், அவர் பிரதமராவார். அவர் பிரதமர் பதவியை ஏற்பதற்கு தாம் எதிர்ப்பு கிடையாது. 69 லட்சம் மக்கள் வாக்களித்து, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர், எந்தவொரு ஊழல், மோசடியுடன் தொடர்புப்படாத அரசியல் தலைவர், பிரதமர் பதவிக்கு நியமிக்க எதிர்ப்பு கிடையாது. நாம் எதிர்ப்பு கிடையாது" என பிரதீப் உந்துகொட தெரிவிக்கின்றார்.
தாய்லாந்தில் வசித்து வரும் கோட்டாபய
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஏற்பட்ட பொருட்கள் தட்டுப்பாடு, வாழ்க்கை செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ராஜபக்ஷ குடும்பமே காரணம் என தெரிவித்து, மக்கள் எதிர்ப்புக்களில் ஈடுபட்டனர்.
மார்ச் மாதம் 31ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை பின்னரான காலத்தில் தொடர் தன்னெழுச்சி போராட்டமாக மாற்றம் பெற்றது.
காலி முகத்திடலில் ஏப்ரல் மாதம் 09ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட தன்னெழுச்சி போராட்டம் சுமார் 4 மாத காலம் இடம்பெற்றது.
இதன்படி, ஜுலை மாதம் 09ம் தேதி கொழும்பில் கூடிய லட்சக்கணக்கான மக்கள், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை கைப்பற்றியிருந்தனர்.
பிரதீப் உந்துகொட, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்
இதையடுத்து, தலைமறைவான அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜுலை மாதம் 13ம் தேதி மாலைத்தீவு சென்று, அங்கிருந்து 14ஆம் தேதி சிங்கப்பூர் சென்று வசித்து வந்தார்.
இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவிற்கான விஸா காலத்தை நீடிக்க சிங்கப்பூர் அரசாங்கம் அனுமதி வழங்காத நிலையில், அவர் தனது மனைவியுடன் தாய்லாந்து நோக்கி ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி சென்றார்.
தற்போது தாய்லாந்தில் வசித்து வரும் கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது ஆட்சி காலத்தை நிறைவு செய்ததன் பின்னராக காலத்தில், இலங்கையின் பிரதமராக கடமையாற்றியிருந்தார்.
அதேபோன்று, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவி காலத்தை நிறைவு செய்ததன் பின்னர், அவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தற்போது பதவி வகித்து வருகின்றார்.முன்னாள் ஜனாதிபதிகளாக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் 9வது நாடாளுமன்றத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தற்போது செயல்பட்டு வருகின்றனர்.