அமெரிக்காவில் வால்மார்ட் ஸ்டோரில் துப்பாக்கிச் சூடு - 10 பேர் பலி

புதன், 23 நவம்பர் 2022 (15:06 IST)
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் செசாபீக் என்ற நகரத்தில் உள்ள வால்மார்ட் சூப்பர் ஸ்டோரில் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் சுட்டத்தில் 10 பேர் வரை கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் ஒரு கடை மேலாளர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயினும் அவர் அதே கடையில் பணியாற்றினாரா என்பது பற்றிய விவரம் இல்லை.

பிறரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட பிறகு தன்னைத்தானே சுட்டு அவரும் இறந்துவிட்டார்.

இது தொடர்பாக செசாபீக் நகர நிர்வாகம் பதிவிட்ட ட்விட்டர் செய்தியில், “வால்மார்ட்டில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டன” என்று உறுதிப்படுத்துகிறது. எனினும் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விவரம் அதில் கூறப்படவில்லை.

"10க்கும் குறைவானவர்கள்" கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் காவல் அதிகாரி ஒருவர் கூறினார். அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் செசாபீக் உள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் நோக்கம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் தாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், சட்ட அமலாக்க அமைப்புகளுடன் நெருக்கமாக செயல்பட்டு வருவதாகவும் வால்மார்ட் தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர்தான் இன்னொரு அமெரிக்க மாகாணமான கொலோராடோவில் உள்ள ஒரு தன்பால் ஈர்ப்பாளர்கள் மன்றத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்; 17 பேர் காயமடைந்தனர். 2019ஆம் ஆண்டு டெக்சாஸ் மாகாணம் எல் பாசோ நகரில் உள்ள ஒரு வால்மார்ட் அங்காடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் கொல்லப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்