மூன்றாம் சார்ல்ஸ் அரச தலைவராக இருப்பது குறித்து வாக்கெடுப்பு - ஆன்டிகுவா மற்றும் பார்புடா திட்டம்

திங்கள், 12 செப்டம்பர் 2022 (13:18 IST)
இரண்டாம் எலிசபெத் ராணியின் மறைவைத் தொடர்ந்து, ஆன்டிகுவா மற்றும் பார்புடா குடியரசாக மாறுவது குறித்து மக்கள் கருத்தறியும் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த வாக்கெடுப்பு மூன்று ஆண்டுகளுக்குள் நடத்தப்படலாம் என்று பிரதமர் கேஸ்டன் பிரவுன் கூறினார். ஆனால் இந்த நடவடிக்கை 'பகைமையை உருவாக்கும் செயல் அல்ல' என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசர் மூன்றாம் சார்ல்ஸ் இந்தக் கரீபியன் நாட்டின் அரசராகவும், அரசின் தலைவராகவும் உள்ளார் என்பதை உறுதிசெய்த பின்னர், அவர் இந்தக் கருத்துகளை தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் மீண்டும் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்த வாக்கெடுப்பை நடத்த இருப்பதாக பிரவுன் கூறினார்.

அவர் அந்தத் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நாட்டு மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு எந்தக் கோரிக்கையும் பெரிதாக இல்லை என்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். அவரது கட்சி பிரதிநிதிகள் அவையில் உள்ள 17 இடங்களில் 15 இடங்களைக் கொண்டுள்ளது

ALSO READ: ராணி எலிசபெத் எழுதிய ரகசிய கடிதம்; 2085ல் தான் பிரிக்கணுமாம்! – அப்படி என்ன இருக்கும்?

"பெரும்பாலான மக்கள் இதைப் பற்றி சிந்திக்கக் கூட இல்லை என்று நான் நினைக்கிறேன்," என ஐடிவி நியூஸ் என்ற செய்தி ஊடகத்தில் பிரவுன் கூறினார்.

முன்னதாக, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இதேபோன்ற வாக்கெடுப்பை ஆஸ்திரேலியாவில் நடத்தாது என்று அந்நாட்டு தெரிவித்துள்ளது.

ராணியின் மறைவு ஆஸ்திரேலியாவின் முடியாட்சி குறித்த விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது. மே மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஆண்டனி அல்பானீசி குடியரசுக்கு ஆதரவாளர்.


ஆனால் அவர் தனது முதல் பதவிக் காலத்தில், இத்தகைய வாக்கெடுப்பை நிராகரித்தார். இது குறித்து ஸ்கை நியூஸ் என்ற ஊடகத்திடம் அவர் பேசுகையில், "தற்போதைய காலகட்டத்தில், நமது அரசமைப்பைப் பற்றிய மிகப்பெரிய கேள்விக்கு இது சரியான நேரம் இல்லை," என்று கூறினார்.

"இந்த நேரத்தில் பல ஆஸ்திரேலியர்கள் அனுபவிக்கும் துக்கத்தை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். இது ஆஸ்திரேலியாவிற்கு ராணி அளித்த பங்களிப்புக்கு எங்கள் ஆழ்ந்த மரியாதையும், போற்றுதலையும் காட்டுகிறது," என்று அல்பானீசி கூறினார்.

ALSO READ: ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வல பாதையும் இறுதிச்சடங்கு திட்டமும்!

பிரிட்டனைத் தவிர, ஆன்டிகுவா மற்றும் பார்புடா, ஆஸ்திரேலியா, பஹாமாஸ், பெலிஸ், கனடா, கிரெனடா, ஜமைக்கா, நியூசிலாந்து, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனாடைன்ஸ், சாலமன் தீவுகள் மற்றும் துவாலு, பப்புவா நியூ கினி, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயிண்ட் லூசியா, ஆகிய 14 நாடுகளில் அரசர் மூன்றாம் சார்லஸ் அரசின் தலைவராகப் பதவி வகிக்கிறார்.

ஆனால் பல நாடுகள் முடியாட்சியின் இருப்பை மறுபரிசீலனை செய்கின்றன. குடியரசாக மாறுவது "உண்மையான இறையாண்மை கொண்ட நாடாக மாறுவதற்கான சுதந்திர வட்டத்தை நிறைவு செய்வதற்கான இறுதிப் படி," என்று பிரவுன் கூறினார்.

கடந்த ஆண்டு, நாட்டின் நாடாளுமன்றத்தால் அரசின் தலைவர் பதவியில் இருந்து ராணி நீக்கப்பட்ட பின்னர், பார்படாஸில் அதன் முதல் அதிபர் பதவியேற்றுக்கொண்டார்.

2018ஆம் ஆண்டு முதல் தீவின் கவர்னர் ஜெனரலாக இருந்த 72 வயதான டேம் சாண்ட்ரா மேசன், நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பைத் தொடர்ந்து நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் ஜமைக்காவில், குடியரசாக மாறுவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்துவதே தனது இலக்கு என்று ஆளும் லேபர் கட்சி தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்