இறுதிச் சடங்குக்கான அழைப்பிதழ்கள் சென்ற வார இறுதியில் பல தரப்பினருக்கும் சென்றுள்ள நிலையில், சுமார் 500 அரசு தலைவர்கள் மற்றும் முக்கியப் வெளிநாட்டு பிரமுகர்கள் நிகழ்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பான்மையான தலைவர்கள் வணிக விமானங்களில் வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் மேற்கு லண்டனில் உள்ள ஓரிடத்தில் இருந்து பேருந்துகள் மூலம் மொத்தமாக அழைத்துச் செல்லப்படுவார்கள். இறுதிச்சடங்கு நடைபெறவுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே-யில், சுமார் 2,200 பேர் அமரும் வகையிலான இடவசதி உள்ளது. இறுதிச்சடங்கில் யாரெல்லாம் பங்கேற்பார்கள், யாரெல்லாம் பங்கேற்க மாட்டார்கள் என்பது குறித்து இதுவரை நாம் அறிந்துள்ள தகவல்கள்:
ஐரோப்பியஅரசகுடும்பத்தினர்
ஐரோப்பா முழுவதிலும் உள்ள அரச குடும்ப உறுப்பினர்கள், அவர்களில் பெரும்பாலானோர் ராணியின் ரத்த சொந்தங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பெல்ஜியம் அரசர் பிலிப் மற்றும் ராணி மதில்டே தங்கள் வருகையை உறுதிப்படுத்தியுள்ளனர். அதேபோன்று, அரசர் வில்லியம்-அலெக்சாண்டர் மற்றும் அவருடைய மனைவி ராணி மக்ஸிமா, அரசரின் தாயும் முன்னாள் டச்சு ராணி இளவரசியுமான பியட்ரிக்ஸ் ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர். நார்வே, ஸ்வீடன் மற்றும் டென்மார்க் அரச குடும்பங்களைப் போலவே, ஸ்பெயின் அரசர் ஃபெலிப்பே மற்றும் ராணி லடீஸியா ஆகியோரும் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர், முன்னாள் அதிபர்கள்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன் மனைவி ஜில் பைடனுடன் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வார் என்பதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் அவர்கள் இருவரும் பேருந்தில் பயணம் செய்யமாட்டார்கள். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவின் ஒரு பகுதியாக அதிபர் பைடன் அழைப்பாரா என்ற விவாதம் எழுந்துள்ளது, ஆனால் பிரதிநிதித்துவக் குழுவுக்கான அளவில் சில வரம்புகள் இருப்பதால், முன்னாள் அதிபர்கள் அவசியம் கலந்துகொள்ள முடியாது எனத் தெரிகிறது.
அமெரிக்க முன்னாள் அதிபர்கள் மற்றும் அவர்களின் மனைவிகள் குறிப்பாக, ஒபாமா மற்றும் அவரின் மனைவி இருவருக்கும் தனிப்பட்ட அழைப்புகள் விடுக்கப்பட்டிருக்கலாம் என்ற யூகங்கள் உள்ளன. அமெரிக்க அதிபராக 1977 முதல் 1981 வரை இருந்த ஜிம்மி கார்ட்டர், இறுதிச்சடங்குக்கான அழைப்பை பெறவில்லை என, அவருடைய அலுவலகம் 'பொலிட்டிக்கோ' ஊடகத்திடம் தெரிவித்துள்ளது.
காமன்வெல்த்தலைவர்கள்
தன்னுடைய ஆளுகை முழுவதும் ராணி தலைவராக செயல்பட்ட காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனேசே, நியூஸிலாந்து பிரதமர் ஜெஸிண்டா ஆர்டர்ன் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
காமன்வெல்த் பிராந்தியத்தில் பிரிட்டன் அரசரை தங்கள் அரச தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள நாடுகளில், அரசரின் பிரதிநிதியாக பணியாற்றும் ஆளுநர் ஜெனரல்கள் தங்கள் நாடுகளின் தலைவர்களுடன் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேசத்தை நீண்டகாலமாக ஆட்சி செய்யும் ஷேக் ஹசீனா, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் அழைப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இருக்கிறார். செப்டம்பர் 17-ஆம் தேதி அவர் லண்டன் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்பாரா என்பது பற்றி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
மற்றஉலகநாடுகளின்தலைவர்கள்
அயர்லாந்தின் டீஷா மைக்கேல் மார்டின், ஜெர்மன் அதிபர் ஃப்ரங்க்-வால்டர் ஸ்டெய்மைர், இத்தாலி அதிபர் செர்ஜோ மட்டரேல், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயன் உள்ளிட்ட மற்ற உலக தலைவர்களும் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர். தென்கொரிய அதிபர் யூன் சூக்-யோல் மற்றும் பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ ஆகியோரும் தங்கள் வருகையை உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஜப்பானிய பேரரசர் நருஹிட்டோ, துருக்கி அதிபர் ரிசெப் தாயீப் எர்துவான், பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மக்ரோங் ஆகியோரும் இறுதிச்சடங்கில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தொற்று காலத்திற்கு பிறகு முதன்முறையாக சீனாவுக்கு வெளியே கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தானுக்கு இந்த வாரம் பயணம் மேற்கொண்டுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் இறுதிச்சடங்குக்கான அழைப்பை பெற்றாரா அல்லது அழைப்பை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பது குறித்து தெரியவரவில்லை.
தனது அணுசக்தித் திட்டங்களுக்கு நீண்டகாலமாக சர்வதேச தடைகளை எதிர்கொண்டுள்ள ஈரான் இஸ்லாமிய குடியரசு, தூதுவர் மட்டத்திலேயே இறுதிச்சடங்கில் பிரதிநிதித்துவம் செய்வார்கள் என, ஒயிட்ஹால் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அழைப்புவிடுக்கப்படாதவர்கள்
ரஷ்யா, பெலாரூஸ், மியான்மர் ஆகியவற்றிலிருந்து யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என, பிபிசியின் ஜேம்ஸ் லேண்டேல் தெரிவிக்கிறார். யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்புக்குப் பின் பிரிட்டன் மற்றும் ரஷ்யாவின் ராஜரீதியிலான உறவுகள் தகர்ந்த நிலையில், "இறுதிச்சடங்கில் பங்கேற்பது குறித்து பரிசீலிக்கவில்லை" என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் செய்தித் தொடர்பாளர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
ரஷ்ய படையெடுப்பு பெலாரூஸ் பிரதேசத்தில் இருந்து பகுதியளவு தொடங்கப்பட்டது, பெலாரூஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, புதினின் நெருங்கிய கூட்டாளி. மியான்மரில் பிப்ரவரி 2021 இல் நடந்த ராணுவ புரட்சிக்குப் பிறகு பிரிட்டன் அதன் ராஜரீக உறவை அந்நாட்டுடன் கணிசமாகக் குறைத்துள்ளது.