மலேசியா அரசியல்: எதிர்க்கட்சிகளை அடக்குகிறது அரசு - மகாதீர் குற்றச்சாட்டு

சனி, 6 ஜூன் 2020 (00:02 IST)
மலேசியாவின் தற்போதைய அரசு மிரட்டல் தந்திரங்களைப் பயன்படுத்துவதாக முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் குற்றம்சாட்டி உள்ளார்.

இதற்கு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் உள்ளிட்ட அரசாங்க முகமைகளை அரசு தனது கருவிகளாகப் பயன்படுத்துகிறது என அவர் கூறியுள்ளார். ஆளும் பெர்சாத்து கட்சியில் உள்ள தமது ஆதரவாளர்களும் மிரட்டப்படுவதாக அவர் பகிரங்கமாகச் சாடினார்.

மலேசிய அரசியல் களத்தில் மீண்டும் ஆட்சி மாற்றம் குறித்த பேச்சுக்கள் எழத் துவங்கி உள்ளன. மகாதீரும், மூன்று மாதங்களுக்கு முன்பு வரை, அடுத்த பிரதமர் ஆவார் என்று கருதப்பட்ட அன்வார் இப்ராகிமும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வியூகம் அமைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாம் நிறுவிய பெர்சாத்து கட்சியில் இருந்தே அண்மையில் நீக்கப்பட்டார் மகாதீர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், புதிதாகப் பொறுப்பேற்று மூன்று மாதங்களே ஆன மொகிதின் யாசின் தலைமையிலான அரசும், முன்னாள் பிரதமர் நஜீப்பின் ஆட்சிக் காலத்தில் பின்பற்றப்பட்ட அதே பாணியிலான மிரட்டல் தந்திரங்களைப் பின்பற்றுவதாக விமர்சித்தார்.

பெர்சாத்து கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரது பெருந்தொகை மாயமானதை அடுத்து அக்கட்சியின் இளைஞர் பிரிவைச் சேர்ந்த சிலர் கைதானதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைச் சுட்டிக்காட்டியே மகாதீர் தனது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
 
"பதவிகள், பொறுப்புகள் தருவதாக ஆசை காட்டுகிறார்கள்"
 
தமது ஆதரவாளர்களை தொடர்பு கொண்டு உயர் பதவிகளும் பொறுப்புகளும் தருவதாக ஒரு தரப்பு ஆசை காட்டுவதாகவும், பலரும் இதனால் அடிபணிந்து போவதாகவும் மகாதீர் சாடினார்.

"பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசில் நான் பிரதமராக இருந்த போது, அரசு நிறுவனங்கள் சுத்தப்படுத்தப்பட்டன. இதன் மூலம் தொழில் வல்லுநர்களும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களும் அவற்றுக்கு தலைமை ஏற்றனர். ஆனால் தற்போது அந்த நிபுணர்கள் நீக்கப்பட்டு அரசியல்வாதிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சில பதவிகளும் பொறுப்புகளும் அவர்களுக்கு கணிசமான வெகுமதியை அளிக்கும். இதனால் மீண்டும் ஊழல் நடக்க வாய்ப்புள்ளது," என்றார் மகாதீர்.

"பெர்சாத்து கட்சியின் இளைஞர் பிரிவைச் சேர்ந்த சிலர், கட்சித் தலைமையை எதிர்ப்பதால் அவர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை என்ற பெயரில் அழைத்து மிரட்டியுள்ளது. ஒரு பெண்மணியை இருட்டறையில் வைத்து நான்கைந்து ஆண்கள் விசாரிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் எதிர்ப்பாளர்களுக்கு வீண் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. விசாரணை என்ற பெயரில் அழைப்பதே ஒரு வகையான அழுத்தமாக மாறி வருகிறது," என்றும் மகாதீர் மொஹம்மத் சாடினார்.

பெர்சாத்து கட்சியின் தலைவராகவும், உச்சபட்ச அதிகாரம் கொண்டவராகவும் பிரதமர் மொகிதின் யாசின் பொறுப்பு வகிக்கும் நிலையில், கட்சித் தலைமையுடன் முரண்பட்டுள்ள இளைஞர் பகுதி தலைவர்கள் சிலர் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்படுவதாகவும், இது தங்கள் குரலை நசுக்கும் செயல் என்றும் சிலர் கடந்த வாரமே புகார் எழுப்பி இருந்தனர்.
 
"வெளிப்படையாகப் பேசுவது ஆபத்து என்று தெரியும்"
 
இந்நிலையில் மகாதீரும் அதே குற்றச்சாட்டை இப்போது முன்வைத்துள்ளார். தமது தலைமையிலான முந்தைய அரசு, முன்னாள் பிரதமர் நஜீப்புடன் தொடர்புடைய '1 எம்டிபி' (1MDB) நிதி முறைகேடு குறித்து மேற்கொண்ட விசாரணையின் போது மிரட்டல் தந்திரங்கள் ஏதும் பின்பற்றப்படவில்லை என்று மகாதீர் சுட்டிக்காட்டினார்.

"இனி நான் வெளிப்படையாகப் பேசப் போகிறேன். இது ஆபத்தான செயல் என்பது தெரியும். எனக்குப் பல்வேறு வழிகளில் அழுத்தம் கொடுப்பார்கள் என்பதையும் அறிந்துள்ளேன். கடந்த நஜீப் ஆட்சிக் காலத்தில், 30 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த விஷயத்தை வைத்து என் மீது குற்றம்சாட்டினார்கள்.

"அரச விசாரணை ஆணையம் அமைத்து என்னை விசாரணைக்கும் உட்படுத்தினர். என் மீது ஏதேனும் குற்றம் இருப்பதாக கருதினால் நீதிமன்றத்துக்கு அழைத்திருப்பார்கள். அவர்களால் என்ன செய்ய முடியும், என்ன செய்வார்கள் என்பது தெரியும். ஆனால் நான் அமைதி காத்தால் இது போன்ற விஷயங்கள் மீண்டும் நடக்கும்.

"அரசாங்கத்தை ஆதரிக்காதவர்கள் அரசு முகைமைகள் மூலம் மிரட்டப்படுகிறார்கள். நாம் முந்தைய பிரதமர் நஜீப் ரசாக்கின் ஆட்சிக்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். சில அரசுத் துறைகள் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றன. சிலர் வருமான வரித்துறையால் விசாரிக்கப்படுகின்றனர். இவை எல்லாம் ஒரு வகையில் அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகள்," என்றார் மகாதீர்.
 
மீண்டும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் உள்ளதா?
 
மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான பெரும்பான்மை பலம் உள்ளதா? எனும் கேள்விக்கு பதிலளித்த அவர், எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது என்பது தமக்குத் தெரியாது என்றார்.
"ஆதரவு எம்பிக்களின் எண்ணிக்கை திடீரென தோன்றுவதும் மறைவதுமாக உள்ளது. ஆனால் பிரதமராக மொகிதின் யாசின் பதவியேற்ற போது அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்பது மட்டும் எங்களுக்கு நன்றாகத் தெரியும்," என்றார் மகாதீர்.

கடந்த மார்ச் 1ஆம் தேதி மொகிதின் யாசின் மலேசியப் பிரதமராக பொறுப்பேற்ற போது தங்களது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 222 எம்பிக்களில் 114 பேரின் ஆதரவு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
 
மலேசிய ஊடகங்களில் வெளியாகும் பல்வேறு ஆருடங்கள்
 
கடந்த சில தினங்களாக பிரதமர் மொகிதின் யாசின் தலைமைத்துவத்தில் இயங்கி வரும் பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் இருவர் பதவி விலகி மகாதீருக்கு ஆதரவு தெரிவிக்கப் போவதாக ஒரு தகவல் உலா வந்தது. இதற்கேற்ப துணை அமைச்சர் ஒருவர் திடீரென பதவி விலகியுள்ளார்.

இந்நிலையில் இன்று மேலும் ஒரு அமைச்சர் பதவி விலகுவார் எனக் கூறப்பட்ட நிலையில், அவர் அதனை மறுத்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஆட்சியை இழந்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் கடந்த ஒரு வாரமாக தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அக்கூட்டணி மீண்டும் பெரும்பான்மை பலத்தைப் பெற்றிருப்பதாகவும், எந்த நேரத்திலும் மலேசிய மாமன்னரைச் சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.

அதே வேளையில் இம்முறை யார் பிரதமர் என்பதை தெளிவாக முடிவு செய்த பிறகே பக்காத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர்கள் மாமன்னரைச் சந்திப்பார்கள் என்றும், இம்முறை அன்வார் இப்ராகிம் முன்னிலைப்படுத்துவார் என்றும் மலேசிய ஊடகங்களில் பல்வேறு விதமான ஆருடங்கள் வெளியாகி வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்