சிரியாவின் ஏவுணை தாக்குதல்: நூலிழையில் தப்பிய பயணிகள் விமானம்!

சனி, 8 பிப்ரவரி 2020 (13:57 IST)
சிரியாவில் பயணிகள் விமானம் ஒன்று அந்நாட்டு ஏவுகணை பாதுகாப்பு அமைப்பால் கிட்டத்தட்ட தாக்கப்படும் நிலைக்கு சென்றதாகவும், பிறகு விமானத்தை வலுக்கட்டாயமாக திசைதிருப்பியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
 
டமாஸ்கஸில் அந்த விமானம் தரையிறங்கும் சமயத்தில், இஸ்ரேல் நடத்தியதாக கூறப்படும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் சிரியாவின் விமான தடுப்பு அமைப்பு இந்த தாக்குதலை தொடுத்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
அந்த ஏர்பஸ் 320 விமானம் பின்னர் வடமேற்கு சிரியாவில் உள்ள ஹமீமிம் என்ற ரஷ்ய விமான தளத்திற்கு திருப்பி விடப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அந்த விமானத்தில் 172 பேருக்கும் மேலானவர்கள் பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த விமானம் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
 
கடந்த மாதம், இரான் தலைநகர் டெஹ்ரானிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி புறப்பட்ட விமானம் இரானின் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதால் ஏற்பட்ட அதிர்வலைகள் அடங்குவதற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்