அழிவின் விளிம்பில் எறும்புத்தின்னிகள்

செவ்வாய், 29 ஜூலை 2014 (18:11 IST)
உலகில் இருக்கும் எட்டுவகையான எறும்புத்தின்னிகளும் அழிவின் விளிம்பில் இருப்பதாக இயற்கை பாதுகாவலர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.



காரணம் இந்த எறும்புத்தின்னிகளின் இறைச்சிக்கும் அவற்றின் செதில்களுக்கும் சீனா மற்றும் வியட்நாமில் இருக்கும் மிகப்பெரிய கிராக்கி காரணமாக அவை பெருமளவில் சட்டவிரோதமாக வேட்டையாடப்படுவதாக இயற்கை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் குழுக்கள் தெரிவித்துள்ளன.
 
கடந்த பத்து ஆண்டுகளில் பத்துலட்சத்துக்கும் அதிகமான எறும்புத்தின்னிகள் காடுகளில் இருந்து வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக இவர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். குறிப்பாக பெரிய செதில்களைக்கொண்ட பங்கோலின் என்று அழைக்கப்படும் எறும்புத்தின்னிகள் அதிகம் அழிக்கப்பட்டிருப்பதாக இவர்கள் கூறுகிறார்கள்.
 
உலக உயிரினங்களில் அதிகபட்சமாக உடலெங்கும் செதில்களைக்கொண்ட ஒரே பாலூட்டி இனமாக வர்ணிக்கப்படும் பங்கோலின் ரக எறும்புத்தின்னிகள் தான் இன்றைய நிலையில் உலக அளவில் சட்டவிரோதமாக விற்கப்படும் முதன்மையான விலங்கு என்கிறார்கள் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தைச் சேர்ந்த அமைப்பாளர்கள்.
 
சீனாவிலும் வியட்நாமிலும் இந்த பங்கோலின் ரக எறும்புண்ணியின் மாமிசம் மிகவும் விரும்பி உண்ணப்படும் மாமிசமாக இருக்கிறது. இவற்றின் செதில்கள் சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
 
இத்தனைக்கும் இந்த பங்கோலின் ரக எறும்புத்தின்னிகளின் செதில்கள் மனித நகங்களைப்போலவே வெறும் கெராடின் என்கிற வேதிப்பொருளால் ஆனது தான் என்றாலும் அதற்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக சீன மருத்துவர்கள் நம்புவதால் அதற்கு சீன மருத்துவர்கள் மத்தியில் மிகப்பெரிய கிராக்கி நிலவுகிறது.
 
இப்படி உணவுக்காகவும் பாரம்பரிய சீன மருத்துவ தேவைகளுக்காகவும் உலகின் எறும்புண்ணிகள் பெருமளவில் சட்டவிரோதமாக கொல்லப்பட்டு கடத்தப்படுகிறது என்பது இயற்கை பாதுகாவலர்களின் கவலையாக இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்