தஞ்சம் கோரியவர்களை இலங்கை நடத்திய விதம் குறித்து ஐ நா அதிருப்தி

வியாழன், 14 ஆகஸ்ட் 2014 (06:00 IST)
இலங்கையில் தஞ்சம் கோரியுள்ள பாகிஸ்தானியர்களை, அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கை கவலையளிக்கிறது என ஐ நா வின் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.

அவர்கள் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்படும் போது அங்கு ஆபத்தை எதிர்நோக்கலாம் என்ற சர்வதேச எச்சரிக்கைக்கு மத்தியிலும், அதிக அளவிலான பாகிஸ்தான் அகதிகள் இலங்கையால் பாகிஸ்தானுக்கு திரும்ப அனுப்பப்படுவதாக ஐ நா கூறியுள்ளது.
 
ஆகஸ்ட் மாதம் முதலாம் தேதி முதல் 88 பாகிஸ்தானியர்கள் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ள ஐ நா வின் அந்த அமைப்பு கூறுகிறது.
 
பாதுகாப்புக் காரணங்களுக்காக தஞ்சம் கோரியுள்ளவர்களின் கோரிக்கை சரியாக ஆராயப்படாமல், திருப்பி அனுப்புவது அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறும் ஐ நா அமைப்பு, இவ்வாறு செய்வதன் மூலம் இலங்கை ''எவரையும் கட்டாயமாக திருப்பி அனுப்புவதில்லை'' என்ற தனது சர்வதேச கடப்பாட்டை மீறுகின்றது என்றும் கூறுகிறது. 
 
குடும்பங்கள் பிரிப்பு
 
இப்படியான நாடுகடத்தல்களால் சில குடும்பங்கள் பிரிக்கப்பட்டுள்ளதாகவும் ஐநா கூறுகின்றது. ஒரு நபர் பாகிஸ்தானுக்கு நாடுகடத்தப்பட, அவரது கர்ப்பிணியான மனைவி இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் ஐநா கூறுகின்றது.
 
பாகிஸ்தானில் உள்ள அஹ்மதியா முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஷியா சிறுபான்மையினருக்கு சர்வதேச பாதுகாப்பு தேவைப்படும் தருணத்தில் இந்த அகதிகளின் கோரிக்கைகள் கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும் என்று ஐநா அகதிகளுக்கான அமைப்பு கூறுகின்றது.
 
இவர்களை திருப்பி அனுப்புவதை உடனடியாக நிறுத்துமாறு இலங்கையை கோரியுள்ள ஐநா, அத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தஞ்சக் கோரிக்கையாளர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அதன் மூலம் அவர்களுக்கு சர்வதேச பாதுகாப்பு தேவையா என்பதை கணிப்பிட முடியும் என்றும் கூறியுள்ளது.
 
84 பாகிஸ்தானியர்கள், 71 ஆப்கான்காரர்கள் மற்றும் இரு இரானியர்கள் அடங்கலாக 157 தஞ்சக் கோரிக்கையாளர்கள் இலங்கையில் இருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்