16 வயதாகியும் மாதவிடாய் தொடங்கவில்லை - இது கவலைதரும் ஒன்றா?

செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (12:40 IST)
"அவளுக்கு இன்னும் மாதவிடாய் ஆரம்பிக்கவில்லை. இன்னும் இரண்டு மாதங்களில் அவளுக்கு பதினாறு வயது பூர்த்தி ஆகிறது," என்று ஒரு தாய் என்னிடம் மிகவும் கவலைப்பட்டார்.
 
உண்மையில், இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதானவை. ஆனால் அப்படி நடக்கும் போது, ​​​​அதை மிகவும் நெருக்கமாக சரிபார்க்க வேண்டும்.
 
இந்த பிரச்னையில் மாதவிடாயை விட அந்த பெண்ணின் உடல் வளர்ச்சி குறித்து முதலில் சோதனை செய்ய வேண்டும். பெண்கள் பருவமடையும் போது அவர்களுக்கு மார்பக வளர்ச்சி மெதுவாகத் தொடங்கும். அவர்களின் அக்குள், பிறப்புறுப்பு பகுதியில் முடி (Pubic Hair) வளர ஆரம்பிக்கிறது. இவை இரண்டாம் நிலை பாலின முதிர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. இந்த வளர்ச்சி எல்லாம் சரியாக இருந்தால் அந்த பெண்ணின் உடலில் ஹார்மோன்களின் அளவு இயல்பாக இருப்பதாக கூறமுடியும்.
 
பின்பு, உடலின் இனப்பெருக்க அமைப்பில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.
 
மேலே குறிப்பிடப்பட்ட சிறுமியின் சோனோகிராஃபி, பிறக்கும் போதே அவருக்கு கருப்பை இல்லாமல் இருந்ததை காட்டியது.
 
இந்த தகவல் அந்த சிறுமியின் பெற்றோருக்கு வேதனையை தரும் ஒன்றாக அமைந்தது. ஆனால் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் மூலம் இதுபோன்ற பிரச்னைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்.
 
இந்த சிறுமிக்கு திருமண வயது வந்ததும் அறுவை சிகிச்சை செய்யப்படும். பெரிட்டோனியத்தை கீழே இழுப்பதன் மூலம் ஒரு செயற்கை பிறப்புறுப்பு உருவாக்கப்படும். அதன்மூலம் அந்த பெண்ணால் உடலுறவு கொள்ள முடியும்.
இந்த அறுவை சிகிச்சையில், கருமுட்டை பிறப்புறுப்புக்கு நெருக்கமாக கொண்டு வரப்படும். அதனால் கருமுட்டை உள்ளே செலுத்தப்படும் விந்தணு பிரித்து எடுக்கப்பட்டு, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதை டெஸ்ட் டியூப் பேபியாக உருவாக்க முடியும்.
 
அப்படி ஒரு பெண்ணின் கருமுட்டையும், அவருடைய கணவரின் விந்தணுவும் இணைந்து உருவாகும் கருவை வெளியே எடுத்து, மற்றொரு பெண்ணின் கருப்பையில் வளர்க்கலாம். இதன் மூலம் அந்த பெண் தன் சொந்த குழந்தைக்கு தாயாக முடியும். இந்தப் பெண்ணுக்கு இயற்கை இழைத்த அநீதியை மருத்துவத் தொழில்நுட்பம் மூலம் முழுமையாக சரி செய்ய முடியும் என்பதுதான் அதன் பொருள்.
 
இதுபோன்ற பல நவீன மருத்துவத் தொழில்நுட்பங்கள் இன்று நம் வாழ்க்கையை வளப்படுத்தியுள்ளன. அதனால் நடப்பதை நினைத்து கவலைப்படுவதை விட நவீன மருத்துவம் தந்த பல்வேறு சிகிச்சைகளுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
 
ஒவ்வொரு மகப்பேறு மருத்துவரிடமும் சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் இருக்கும் இரண்டு பொதுவான கேள்விகள் மாதவிடாயை சுற்றியே இருக்கின்றன. ஒன்று எனக்கு ஏன் மாதவிடாய் வரவில்லை. மற்றொன்று எனக்கு ஏன் மாதவிடாய் வருகிறது, அதாவது நான் ஏன் கர்ப்பம் தரிக்கவில்லை என்று தான் இருக்கிறது.
 
மாதவிடாய் வராமல் இருப்பதற்கான காரணங்கள்
 
ஒரு பெண்ணின் உடலும் மனமும் ஹார்மோன் சுரப்பதற்கு ஏற்ப செயல்படுகின்றன. அதனால் சரியான நேரத்தில் மாதவிடாய் வருவதற்கு உடலும், மனதும் சமநிலையில் இருப்பது அவசியம்.
 
பெண்கள் பருவமடையும் போது, ​​அவர்களின் உடல் பல்வேறு மாற்றங்களைச் சந்திக்கத் தொடங்குகிறது.
 
அதற்கு பிறகு மாதவிடாய் தொடங்குகிறது. ஒரு பெண்ணுக்கு பதினைந்து வயது வரை மாதவிடாய் வரவில்லை என்றால், அது அசாதாரணமாகக் கருதப்படும்.
 
அத்தகைய சூழ்நிலையில் மாதவிடாய் வராத காரணத்தைக் கண்டறிய அந்த பெண்ணுக்கு அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் செய்ய வேண்டியது அவசியம்.
 
உடலின் இனப்பெருக்க அமைப்பில் பிறக்கும் போதே ஏற்படும் சில அசாதாரண காரணங்களால் மதவிடாய் வராமல் போகலாம்.
 
சில சமயம் மரபணு கோளாறு காரணமாக மாதவிடாய் வராமல் இருக்கலாம். அப்படியான சூழலில், சில பிரச்னைகளை மருத்துவ சிகிச்சை மூலமாக சரி செய்ய முடியும். ஆனால் ஒரு சில நேரங்களில் அந்த பிரச்னை தீர்வே இல்லாத ஒன்றாகக்கூட இருக்கும்.
 
சிலருக்கு குறைபாடுள்ள ஹைமன் ஒரு பிரச்னையாக இருக்கலாம். அத்தகைய பிரச்னை உள்ள பெண்கள் மாதவிடாய் தொடங்கியதை கவனிக்காமல் இருக்கக்கூடும். ஆனால் மாதவிடாய் காலங்களில் சில நாட்களுக்கு, அவர்கள் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்படுகிறார்கள்.
 
சோனோகிராபி, பிறப்புறப்பு பரிசோதனை மூலம் இந்தப் பிரச்சனையை உடனடியாகக் கண்டறிய முடியும். அதற்கு பிறகு மயக்க மருந்து செலுத்தி, பிறப்புறுப்பின் வாயில் ஒரு சின்ன கீறல் போடப்படும்.
 
அங்கு தேங்கி இருக்கும் ரத்தம் வெளியேறிய பிறகு, அந்த பெண்ணின் பிறப்புறப்பு சரியாகிறது. ஆனால் இந்த பிரச்னையை சரியான நேரத்தில் அடையாளம் கண்டு சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியம்.
 
மாதவிடாய் வராமல் இருப்பதற்கு மற்றொரு காரணமாக இருப்பது டர்னர் சின்ட்ரோம். வழக்கமான பெண்களுக்கு XX எனப்படும் இரண்டு குரோமோசோம்கள் இருக்கும். ஆனால் டர்னர் சின்ட்ரோம் பாதிப்பு உள்ள பெண்களின் உடலில் ஒரே ஒரு X குரோமோசோம் மட்டுமே இருக்கும்.
 
இதனால் அவர்களின் உடல் வளர்ச்சி சரியாக இருக்காது. ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக மாதவிடாய் ஏற்படுவதும் தாமதம் ஆகும்.
 
இந்த பிரச்னை உள்ள பெண்களுக்கு வேறு சில அறிகுறிகளும் தென்படும். மிகக் குட்டையான உயரம், அகலமான கழுத்து, சிறிய காது, அகன்ற மார்பு, முழங்கையிலிருந்து சற்று நீண்டு நிற்கும் கைகள், மாறுபட்ட வடிவத்தில் உச்சந்தலை என இவர்களின் தோற்றத்தில் இதுபோன்ற பாதிப்புகள் காணப்படும்.
 
இந்த பிரச்னை உள்ள பெண்களில் பலருக்கு கருவுறுதலில் சிக்கல் இருக்கிறது. சரியான நேரத்தில் இந்த பிரச்னை கண்டுபிடிக்கப்பட்டால், சிகிச்சை மூலமாக மாதவிடாய் வருவதை இயல்பாக்கி, இவர்களை தாய்மை அடைய வைக்க முடியும்.
 
மாதவிடாய் தாமதமாக வருவதற்கான காரணம்
 
மாதவிடாய் தொடங்கி சில வருடங்கள் வரை ஒழுங்கற்ற நிலையில் இருப்பது இயல்பானது. ஆனால் மாதவிடாய் சரியான நேரத்தில் வரவில்லை என்றாலோ, பெண்ணின் எடை கூடினாலோ மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். இது PCODயின் தொடக்கமாக இருக்கலாம்.
 
மெனோபாஸ் வயதை நெருங்கும் சமயத்தில் அதிக ரத்தப்போக்கு அல்லது நீண்ட நாட்களுக்கு ரத்தபோக்கு வந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
 
திருமணமான பெண்களுக்கு மாதவிடாய் வருவது தாமதமாகும் போகும், அது கர்ப்பம் என கருதப்படுகிறது. ஆனால் நவீன வாழ்க்கை முறையின் தாக்கத்தால், மாதவிடாய் ஒருசிலருக்கு தள்ளிப் போகிறது.
 
மனஅழுத்தம் அதிகமாக இருந்தால் கூட மாதவிடாய் தள்ளிப்போகும். ஆனால் அடிக்கடி இப்படி நடந்தால் அது நல்லதல்ல.
 
பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் சினைமுட்டை உருவாவது அவசியமானது. ஒருவருக்கு சினைமுட்டை உருவாகவில்லையெனில், அதன் விளைவாக கருப்பையில் நீர்க்கட்டி உருவாகிறது.
 
அதனால் மாதவிடாய் வருவது தள்ளிப்போகிறது. இந்த பிரச்னை பற்றி சோனோகிராமில் கண்டறியப்பட்டால், மாத்திரை மூலம் ஹார்மோன் சமநிலை சரி செய்யப்பட்டு மாதவிடாய் வர வைக்கப்படும். இதன்மூலம் கருப்பையில் ஏற்படும் நீர்க்கட்டிகள் குறையும்.
 
தைராய்டு மாத்திரைகளை நம்பி ஏமாறாதீர்கள்
உடல் உழைப்பு இல்லாமை, உணவில் கட்டுப்பாடு இல்லாததால் அதிக எடை அதிகரிப்பு, ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுகிறது.
 
மாதவிடாய் ஒழுங்கற்றதாக இருப்பதால், எடை மேலும் அதிகரிக்கிறது. இந்த தீய சுழற்சியை நிறுத்த, ஒருவர் வழக்கமான உடற்பயிற்சியை செய்ய வேண்டும். மேலும் உணவில் கார்போஹைட்ரேட் (அரிசி, உருளைக்கிழங்கு, சர்க்கரை, மாவு, எண்ணெய்) குறைக்க வேண்டும்.
 
தைராய்டு, ப்ரோலாக்டின் ஆகிய இரண்டு ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு மாதவிடாய் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. ஹைப்போ தைராய்டிசம் பிரச்னை இருந்தால், முறையான சிகிச்சை இல்லாமல், எவ்வளவு முயறி செய்தாலும் உடல் எடை குறைதல், மாதவிடாய் பிரச்னைகள் தீராது.
 
ஒரு மாத்திரை பெண்களின் ஆரோக்கியத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியும். எனவே தைராய்டு மாத்திரை எடுத்துக் கொள்வது பற்றி அதிகம் யோசிக்க வேண்டாம்.
 
உடலில் இருந்து எதையும் வெளியே எடுப்பதை விட, ஒரு பெண் தனது ஆரோக்கியத்தையும், தன் குழந்தைகளின் ஆரோக்கியத்தை உணர்ந்து சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
உணவுப் பழக்கங்களில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும். இதனால் சில பிரச்னைகள் எழுந்தாலும், அவற்றின் கடுமையான விளைவுகளைத் தவிர்க்கலாம்.
 
(இந்த கட்டுரையை எழுதியவர் ஒரு மருத்துவர். இதில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அவரின் சொந்த கருத்துகள், பிபிசியின் கருத்துகள் அல்ல)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்