இந்துக்களும், கிறிஸ்தவர்களும் இணைந்து இஸ்லாமியர்களுக்கு இப்தார் விருந்து!

சனி, 15 ஏப்ரல் 2023 (08:48 IST)
கோவையில் மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் நோன்பு துவங்கியதை தொடர்ந்து அனைத்து சமயத்தினர் கலந்து கொண்ட இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் தலைமையில் நடைபெற்றது. 
 
இதில் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ராமசாமி முன்னிலை வகித்தார்.கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஹாஷ் சிக்ஸ்  ஓட்டல் அரங்கில் நடைபெற்ற இதில்,பேரூர் ஆதினம் தவத்திரு மருதாசல அடிகளார்,சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள்,சி.எஸ்.ஐ.கிறிஸ்துநாதர் ஆலயத்தின் ஆயர் தலைவர் டேவிட் பர்னபாஸ்,அனைத்து ஜமாத் கூட்டமைப்பு செயலாளர் முகம்மது அலி, தலைமை இமாம் அப்துல் ரஹீம் இம்தாதி, கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜார்ஜ் தனசேகர்,சி.எஸ்.ஐ.திருமண்டல உறுப்பினர் பிரவீன் விமல்,தி.மு.க.பகுதி செயலாளர் ரவி, 45 வது மாமன்ற உறுப்பினர் சுதா ரவி,மற்றும் காவல்துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
 
முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைத்து மத தலைவர்கள் சிறப்புரையாற்றினர்.தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பேரீச்சை,நோன்பு கஞ்சி,பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஒருங்கிணைப்பாளர் முகம்மது ரபி,கோவையில் மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக பொங்கல்,தீபாவளி,கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுவதாகவும்,அதே போல இந்த இப்தார் நிகழ்வும் நடைபெறுவதாக தெரிவித்தார். இந்துக்களும் கிறிஸ்தவர்களும் இணைந்து இஸ்லாமியர்களுக்கு இப்தார் நோன்பு விருந்து அளித்த இந்நிகழ்ச்சி இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்