வவுனியா பள்ளி மாணவி கொலை: சந்தேகநபர் ஒருவர் கைது

வெள்ளி, 26 பிப்ரவரி 2016 (20:32 IST)
இலங்கையின் வடக்கே, வவுனியாவில் பள்ளி மாணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் 35 வயது நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


 

 
அயல் வீட்டுக்காரரான இந்த 35 வயது நபரை வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிமன்றம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.
 
இதேவேளை, கண்டித்தும் அதற்கு நீதிகோரியும் மன்னார் நகரில் இன்று வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம் இதற்கான அழைப்பை விடுத்திருந்தது.
 
பாடசாலை மாணவிகள் வல்லுறவின் பின்னர் கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதையும் இந்தச் சம்பவங்களுக்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்படாமலுள்ளதையும் சுட்டிக்காட்டி, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முல்லைத்தீவு பெண்கள் அமைப்பினரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர்.
 
சிறுமிகள், பெண்களுக்கு எதிரான வன்செயல்களில் ஈடுபடுவோருக்கு அதியுச்ச தண்டனை வழங்கி சிறுமிகள் பெண்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இதனிடையே, காணாமல்போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பினர் கிழக்கு மாகாணத்தில் இன்று இந்த சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
பள்ளி மாணவிகளும் பெண்களும் தொடர்ச்சியாக இப்படியான பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுவதை தடுப்பதற்கும் உரிய நீதி வழங்குவதற்கும் அதிகாரிகள் தவறி வருவதாக திருகோணமலை நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்