"நமது சமூகத்தின் முதுகெலும்பு விவசாயிகள்," என்று குறிப்பிட்டுள்ள அவர், "விவசாயிகளின் நீண்ட கால போராட்டத்தின் விளைவாக மேற்கு வங்க மாநிலத்தில் சிங்கூர் நில மறுழாவ்வு மற்றும் மேம்பாட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஒற்றுமையாக நாம் போராடி விவசாயிகளின் உரிமைகளை மீட்டோம். அது அவர்களின் வாழ்வில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தியது. ஆனால், இங்கே விவசாயிகளுக்கு ஆதரவாக நாம் அவர்களின் பிரச்னைகளை தீர்க்க முற்படும் வேளையில், அங்கே மத்திய அரசு அவர்களின் துயரங்களை அலட்சியப்படுத்தி வருகிறது," என்று மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் 2006இல் ஆட்சியில் இருந்த இடதுசாரிகள் அரசு, சிங்கூரில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தி டாடா குழுமத்திடம் வழங்கியது. ஆனால், பின்னர் ஆட்சிக்கு வந்த மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் அரசு, அந்த நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக சட்டம் இயற்றியது.
ஆனால், நிலம் கையகப்படுத்தியது சரியே என்று விசாரணை நீதிமன்றமும், அதற்கு எதிராக சட்டமியற்றிய மாநில அரசின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் உயர் நீதிமன்றம் கூறின. ஆனாலும் அந்த தீர்ப்பை எதிர்த்து விவசாயிகள் மேல்முறையீடு செய்ததில், அவர்களுக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.