மேற்கு வங்கத்தில் மம்தா கட்சி, கேரளாவில் இடதுசாரிகள், அசாமில் பாஜக முன்னிலை

ஞாயிறு, 2 மே 2021 (12:09 IST)
தமிழ்நாடு, புதுச்சேரி தவிர, மேற்கு வங்கம், அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்கம்
 
தொடக்க நிலை முடிவுகளின்படி மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் கூட்டணி பாரதிய ஜனதா கூட்டணியை விட அதிக  தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
 
எனினும் தான் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி பாஜக வேட்பாளர் சுவெந்து அதிகாரியை விட குறைந்த வாக்குகளைப் பெற்று  பின்தங்கியுள்ளார்.
 
அத்தொகுதியில் தற்போது வரையான வாக்கு எண்ணிக்கையில், சுவெந்து அதிகாரி 23,495 வாக்குகளையும், மம்தா பானர்ஜி 15,294 வாக்குகளையும் பெற்று இருக்கிறார்கள். 8,201 வாக்குகள் வித்தியாசத்தில் சுவெந்து அதிகாரி முன்னிலையில் இருக்கிறார் என தேர்தல் ஆணைய தரவுகள் கூறுகின்றன.
 
மேற்கு வங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து, அம்மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான கைலாஷ் விஜய்வர்கியாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட போது  "இப்போது எதையும் கூற முடியாது. இன்னும் நிறைய சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டி இருக்கிறது. மாலை நேரத்தில் தான் சூழல் என்னவென்று  தெரியும். நாங்கள் வெறும் 3 தொகுதிகளில் தொடங்கினோம். 100 தொகுதிகளில் வெற்றி பெறமாட்டோம் எனக் கூறினார்கள், இப்போது அதைக் கடந்திருக்கிறோம்.  நாங்கள் அந்த மாய எண்ணைக் கடப்போம்" எனக் கூறியுள்ளதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
 
மேற்கு வங்கத்தில், நார்த் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இருக்கும் பனிஹாதி என்கிற தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் தபஸ் மஜும்தாரின் தேர்தல்  எண்ணிக்கை ஏஜெண்டாக இருந்த கோபல் சோம் என்பவர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மயங்கி விழுந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்  செல்லப்பட்டிருக்கிறார்.
 
கேரளா
 
கேரளாவில் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
 
கேரளத்தில் பாரதிய ஜனதா கட்சி 2 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாகவும், அக்கட்சியின் கேரள முதல்வர் வேட்ளராக முன்னிருத்தப்பட்ட மெட்ரோ இ ஸ்ரீதரன்,  6,754 வாக்குகளோடு முன்னிலை வகிக்கிறார் என்கிறது தேர்தல் ஆணைய வலைதளம்.கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் முதல்வர் வேட்பாளர் மற்றும்  தற்போதைய கேரள முதல்வர் பினராயி விஜயன் 8,434 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். காங்கிரஸின் முதல்வர் வேட்பாளரான உம்மன் சாண்டி புதுப்பள்ளி தொகுதியில் 10,372 வாக்குகளோடு முன்னிலை வகிக்கிறார். ஆனால் கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஜேக் சி தாமஸ் 8,814 வாக்குகள்  பெற்று இருப்பதால், கடும் போட்டி நிலவுகிறது.
 
கேரளாவின் நேமம் தொகுதியில், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் மற்றும் முன்னாள் மிசோரம் ஆளுநர் கும்மனம் ராஜசேகரன் 6,957 வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சிவன் குட்டி 6,537 வாக்குகளோடு சற்றே பின் தங்கி இருக்கிறார்.
 
அசாம்
126 தொகுதிகளைக் கொண்டஅசாம் மாநிலத்தில் முதல்கட்ட முடிவுகளின்படி பாரதிய ஜனதா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
 
பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சர்பானந்த சோனோவால் மஜுலி தொகுதியில் 4,400 வாக்குகளோடு முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸின் முக்கிய  தலைவர்களில் ஒருவரான தேபப்ரதா சைகியா, நசிரா தொகுதியில் 3,205 வாக்குகளோடு சற்றே பின் தங்கி இருக்கிறார். பாஜகவின் மயூர் போர்கோஹைன் 3,219  வாக்குகளோடு முன்னிலை வகிகிறார்.
 
மேற்கு வங்கத் தேர்தலில் ஏன் இத்தனை ஆர்வம்?
 
மேற்கு வஹ்க பாஜகவுக்கும் திரிணமூல் காங்கிரசுக்கும் இடையில் கடுமையான, சில நேரங்களில் கசப்பான, மோதல் நடந்த மேற்கு வங்க முடிவுகள் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்படுகின்றன.
 
இந்த எதிர்பார்ப்புக்குக் காரணம், மேற்கு வங்கம், இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்று என்பதும், அதனால், இயல்பாகவே நாடாளுமன்ற மாநிலங்களவையில் யார் அதிகம் எம்.பி.க்களைப் பெறப் போகிறார்கள் என்பதும் ஆகும். சில காலம் முன்புவரை பாஜக கால் பதிக்காத ஒரு மாநிலத்தில் பாஜக ஆட்சியைப்  பிடித்துவிடுமா என்ற கேள்வியும் இந்த இந்த ஆர்வத்துக்கு கூடுதல் காரணம்.
 
தவிர, நடந்து முடிந்த தேர்தலில் கருத்துக் கணிப்புகளிலும் சரி, வாக்குச்சாவடி புறவாசல் கணிப்புகளிலும் சரி தெளிவாக எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று கணிக்க முடியாமல் இருக்கிற ஒரு மாநிலம் மேற்கு வங்கம்தான் என்பதால் இந்த ஆர்வம் தவிர்க்க முடியாததாகிறது.
 
மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 இடங்களில் 292 தொகுதிகளுக்கு எட்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது.
 
முதல்வர் மம்தா பேனர்ஜிக்கும் பிரதமர் நரேந்திர மோதிக்கும் இடையிலான நேரடிப் போட்டியாகவே இந்த தேர்தல் மாறிவிட்டது.
 
காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளும் களத்தில் இருந்தாலும் அவை ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு தேர்தலில் வெற்றி பெறும் என்பதாக கணிப்புகள் இல்லை.
 
இந்த தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வென்றால், அக்கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும்.
 
மேற்கு வங்க மாநிலத்தில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக தடம் பதிக்க பாரதிய ஜனதா கட்சி முயன்று வருகிறது.
 
இங்கு 30 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் கடந்த மார்ச் 27ஆம் தேதியும் அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 1ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் 30  தொகுதிகளுக்கும், ஏப்ரல் 6ஆம் தேதி மூன்றாம் கட்டமாக 31 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 10ஆம் தேதி நான்காம் கட்டமாக 33 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 17ஆம் தேதி  ஐந்தாம் கட்டமாக 45 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 22ஆம் தேதி 6ஆம் கட்டமாக 43 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26ஆம் தேதி 7ஆம் கட்டமாக 36 தொகுதிகளுக்கும், ஏப்ரல்  29ஆம்தேதி எட்டாம் கட்டமாக 35 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
 
இதில் ஜாங்கிபூர், சாம்செர்கஞ்ச் ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்கள் இறந்து விட்டதால் அவற்றுக்கு நடைபெறவிருந்த தேர்தல், மே 16ஆம் தேதி நடத்தப்படும்  என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
 
முதல் கட்ட தேர்தல் 47 தொகுதிகளுக்கு மார்ச் 27ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் 39 தொகுதிகளுக்கு ஏப்ரல் 1ஆம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6ஆம் தேதியும் நடைபெற்றது.
 
அசாமின் முக்கியத்துவம்:
 
இங்கு ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியில் முதல்வராக சரபானந்த சோனோவால் இருக்கிறார். ஆனால், பரப்புரையின்போது அவரது பெயரை முதல்வர் வேட்பாளராக குறிப்பிடாமலேயே பாஜக தலைவர்கள் வாக்காளர்களை சந்தித்தனர்.
 
மறுபுறம் காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான தருண் கோகோய் இறந்த பிறகு, அவர் விட்டுச் சென்ற இடத்துக்கு உரிய தலைவரை  தேர்வு செய்வதில் ஏற்பட்ட தாமதத்துக்கு இடையில் இந்த தேர்தலை காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டிருக்கிறது.
 
தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை சட்டத்திருத்தம் போன்றவை வட கிழக்கு மாநிலங்களில் ஏற்படுத்திய அதிர்வலைகளுக்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலை அசாம் சந்திக்கிறது.
 
மத்திய அரசின் இந்த இரு நடவடிக்கைகளுக்கு பரவலாக ஆதரவும் எதிர்ப்பும் நிலவுகிறது. இது முக்கிய தேர்தல் முழக்கமாகவும் தேர்தல் பரப்புரையில்  இடம்பெற்றிருந்தது.
 
இது தவிர அசாம் ஜாதிய பரிஷத், ராய்ஜோர் தளம் ஆகிய பிராந்திய கட்சிகளும் சிஏஏ, என்ஆர்சிக்கு எதிராக தீவிர பரப்புரையில் ஈடுபட்டன. இந்த கட்சிகள் உள்ளூர்  மக்களிடையே கொண்டுள்ள செல்வாக்கு என்ன என்பதை இந்த தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கக் கூடும்.
 
கேரளத்தில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இங்கு முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆட்சியில் உள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணி, மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்கும் எதிர்பார்ப்புடன் தேர்தல் களம் கண்டுள்ளது.
 
மறுபுறம் காங்கிரஸ் கட்சி தலைமை வகிக்கும் ஐக்கிய ஜனநாயக முன்னணி தேர்தல் களம் கண்டுள்ளது.
 
இந்த மாநிலத்தில் கடந்த 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணியும் இடதுசாரி கூட்டணியும் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை மாற்றி, மாற்றி ஆட்சிக்கு வருகின்றன. அந்த மரபு தொடருமா, அல்லது, மீண்டும் ஆளும் இடதுசாரி கூட்டணியே ஆட்சியில் தொடருமா என்பதை இன்றைய தேர்தல் முடிவுகள்  காட்டிவிடும்.
 
கேரளத்தின் முக்கியத்துவம்
 
இந்த தேர்தலில் புதிய அம்சமாக பாரதிய ஜனதா கட்சி கேரளத்தில் வலுவாக கால் தடம் பதிக்கும் ஆர்வத்துடன் தேர்தலை சந்திக்கிறது. இங்கு இந்திய மெட்ரோ ரயில் அமைப்புகளின் சிற்பியாக வருணிக்கப்படும் மெட்ரோமேன் ஸ்ரீதரன் பாரதிய ஜனதா கட்சியின் முகமாக களமிறக்கப்பட்டார்.
 
பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். இது கேரள சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு சாதகமான முடிவுகளைத் தருமா என்பதையும் இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்