மதுபான உற்பத்தியாளர்கள் மீதான புதிய வரிக்கு நீதிமன்றம் தடை

வியாழன், 26 மார்ச் 2015 (10:36 IST)
இலங்கையில் மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மாதாந்தம் 200 மில்லியன் ரூபாவை வரியாக செலுத்த வேண்டுமென்று வரவுசெலவுத் திட்டத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு உச்சநீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுபான உற்பத்தி நிறுவனங்கள் சில தாக்கல் செய்திருந்த மனுவொன்றை ஆராய்ந்ததன் பின்னரே தலைமை நீதியரசர் உள்ளிட்ட நீதிபதிகள் இந்த தடையுத்தரவை பிறப்பித்தனர்.
 
இவ்வாறான உத்தரவை பிறப்பிப்பதற்கு நிதியமைச்சருக்கு அதிகாரங்கள் இல்லை என்று மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர்.
 
மனுவை தள்ளுப்படி செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்த அரசதரப்பு வழக்கறிஞர், இது வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தினால அங்கீகரிக்கப்பட்ட ஒரு வரி என்று சுட்டிக்காட்டினார்.
 
எனவே, இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் விவாதிக்க முடியாது என்றும் அரசதரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
 
ஆனால் அரசாங்கத் தரப்பின் ஆட்சேபனையை நிராகரித்த நீதிபதிகள், மனுவை முன்கொண்டு விசாரணை செய்வதற்கு அனுமதியளித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்