லைபீரிய கப்பல் கடத்தல்: 21 பேரையும் பத்திரமாக மீட்ட இந்திய கடற்படை - ஐ.என்.எஸ் சென்னை என்ன செய்தது?

Sinoj

வெள்ளி, 5 ஜனவரி 2024 (21:10 IST)
கடந்த மாதம் இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அடுத்த சம்பவம் தற்போது அரங்கேறியது. இந்த முயற்சி இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் சென்னை போர்க்கப்பலின் தலையீட்டால் தடுக்கப்பட்டுள்ளது.
 
மேலும், கப்பலில் இருந்த 15 இந்தியர்கள் உட்பட 21 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
 
அரபிக் கடலில் சோமாலியா அருகே 15 இந்தியர்களுடன் பயணித்துக் கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று கடத்தப்பட்டது. இதையடுத்து அந்தக் கப்பலுக்கு உதவ இந்திய போர்க் கப்பலான ஐஎன்எஸ் சென்னை விரைந்தது. இந்தச் சம்பவத்தை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்தது.
 
தற்போதைய தகவல்கள், கடத்தப்பட்ட கப்பலின் அருகே ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் சென்றடைந்தது. அங்கு இந்திய கடற்படையின் இடைமறிப்பு மற்றும் எச்சரிக்கையின் விளைவாக கடற்கொள்ளையர்கள் கடத்தப்பட்ட கப்பலைக் கைவிட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
 
 
வடக்கு அரபிக் கடலில் எம்வி லீலா நோர்ஃபோக் கடத்தல் முயற்சிக்கு இந்திய கடற்படையின் விரைவாக எதிர்வினையாற்றியுள்ளது.
 
கடத்தப்பட்ட சரக்குக் கப்பலில் இருந்த அனைத்து 21 பணியாளர்களும் (15 இந்தியர்கள் உட்பட) பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மெரைன் கமாண்டோக்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கப்பலில் கடத்தல்காரர்கள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
சோமாலிய கடல் பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்படும் முயற்சி இந்திய கடற்படையின் பலமான இடைமறிப்பு மற்றும் எச்சரிக்கையின் விளைவாகக் கைவிடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
 
ஐ.என்.எஸ் சென்னை, அந்த சரக்குக் கப்பலுக்கு அருகில் உள்ளது. மேலும், மின்சாரம் மற்றும் கப்பலின் உந்துவிசையை மீட்டெடுக்கவும் உதவி செய்து, அடுத்துள்ள துறைமுகத்திற்குத் தனது பயணத்தைத் தொடங்கவுள்ளது.
 
சோமாலிய கடற்பகுதியில் ஜனவரி 4ஆம் தேதி மாலை எம்.வி. லிலா நோர்ஃபோல்க்( MV LILA NORFOLK) என்ற லைபீரிய நாட்டுக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலைக் கடத்தும் முயற்சி நடந்தது. அடையாளம் அறியப்படாத 5-6 ஆயுததாரிகள் கப்பலில் ஏறிவிட்டதாக, லைபீரிய கப்பல், பிரிட்டனின் கடல் வர்த்தக செயல்பாடுகளைக் கண்காணிக்கும் கண்காணிப்பகமான UKMTOக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தது.
 
இதையடுத்து துரிதமாகச் செயல்பட்ட இந்திய கடற்படை ஒரு ரோந்து விமானத்தை அனுப்பியுள்ளது. மேலும் லைபீரியா கப்பலுக்கு உதவ ஐஎன்எஸ் சென்னை போர்கப்பலையும் அந்தப் பகுதிக்குத் திருப்பிவிட்டது.
 
கடத்தப்பட்ட லைபீரிய கப்பலை நெருங்கிய ஐ.என்.எஸ் சென்னை போர்க்கப்பல் - என்ன செய்கிறது?பட மூலாதாரம்,ANI
ஜனவரி ஐந்தாம் தேதி சம்பந்தப்பட்ட கப்பலுக்கு மேலே இந்திய விமானம் பறந்தது, கப்பல் குழுவினரின் பாதுகாப்பை உறுதி செய்ய, அந்தக் கப்பலுடன் தொடர்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. இந்நிலையில், தற்போது கடத்தப்பட்ட சரக்குக் கப்பலை இந்திய போர்க்கப்பல் நெருங்கிவிட்டதாக ஏ.என்.ஐ செய்தி முகமை குறிப்பிட்டது.
 
கடத்தப்பட்ட சரக்குக் கப்பலில் உள்ள அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
முன்னதாக இந்திய கடற்படையின் மெரைன் கமாண்டோக்கள் நடவடிக்கைக்குத் தயாராக இருப்பதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்தது. இதற்கிடையே கடத்தப்பட்ட கப்பலை கடற்படை ஹெலிகாப்டரும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்தது.
 
இந்த சரக்குக் கப்பலில் 15 இந்தியர்கள் இருப்பதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
 
 
இது பிரேசிலில் இருந்து பஹ்ரைன் நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல். சோமாலியா கடற்கரையில் இருந்து சுமார் 300 கடல் மைல் தொலைவில் கைப்பற்றப்பட்டது.
 
இந்தக் கப்பல் வியாழக்கிழமை கைப்பற்றப்பட்டது. அதன் பிறகு கப்பலில் இருந்தே பிரிட்டன் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஒரு செய்தி அனுப்பப்பட்டது. அந்தச் செய்தியில் வியாழன் மாலை கப்பலில் ஆயுதம் ஏந்திய ஐந்து முதல் ஆறு பேர் ஏறியதாகக் கூறப்பட்டது.
 
பிரிட்டனின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் என்பது ஒரு பிரிட்டிஷ் ராணுவ அமைப்பு. இது மூலோபாய கடல் வழிகளில் தனிப்பட்ட கப்பல்களின் இயக்கங்களைக் கண்காணிக்கிறது.
 
இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், ராணுவத்தால் அமைக்கப்பட்ட தளங்கள் உடனடியாகப் பதிலளித்தன என்றார்.
 
ஏ.என்.ஐ செய்தி முகமையின்படி, ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் முன்னேறிச் செல்வதாகவும், அந்த நேரத்தில் கப்பலில் உள்ள குழுவினருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
 
 
கடந்த சில வாரங்களாக அரபிக் கடல் வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாவது அதிகரித்துள்ளது. முன்னதாக, 21 இந்தியர்கள் இருந்த லைபீரியாவின் கொடியுடன் கூடிய எம்வி செம் புளூட்டோ கப்பல் தாக்கப்பட்டது.
 
இந்தக் கப்பல் ட்ரோன்களால் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. மேலும், ஆப்பிரிக்க நாடான காபோன் கொடி ஏற்றி வந்த எம் சாய்பாபா என்ற எண்ணெய் ஏற்றி வந்த கப்பலும் தாக்கப்பட்டது. அந்தக் கப்பல் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதில் 25 பணியாளர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் இந்தியர்கள்.
 
இதனுடன், நார்வே கொடியுடன் வந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளது. எம்வி கெம் புளூட்டோ மீதான ஆளில்லா விமானத் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய கடற்படை, ஐஎன்எஸ் மோர்முகவோ, ஐஎன்எஸ் கொச்சி, ஐஎன்எஸ் கொல்கத்தா எனப் பெயரிடப்பட்ட வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பல்களை அரபிக் கடலில் வெவ்வேறு இடங்களில் நிலைநிறுத்தியுள்ளது.
 
ஏமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் சொந்தமான கப்பல்களை செங்கடலில் குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் வேளையில் அரபிக் கடலில் இந்தியா வரும் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
 
இந்தத் தாக்குதல்களைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. ஏனெனில் இவ்வாறான தாக்குதல்கள் சர்வதேச கடல்வழிப் பாதைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும். இந்தத் தாக்குதலுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
அவர், “இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் மூலோபாய சக்தி சில சக்திகளைப் பொறாமையால் நிரப்பியுள்ளது. சமீபத்தில் அரபிக் கடலில் எம்வி கெம் புளூட்டோ கப்பல் மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதையும், சில நாட்களுக்கு முன்பு செங்கடலில் எம்வி சாய்பாபா மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் இந்திய அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டது. இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் கடலுக்கு அடியில் இருந்தாலும்கூட கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்,” என்று தெரிவித்தார்.
 
 
ஐ.என்.எஸ் சென்னை: கடத்தப்பட்ட லைபீரிய கப்பலை மீட்கச் சென்ற இந்திய போர்க்கப்பல் என்ன செய்கிறது?பட மூலாதாரம்,REUTERS
எம்.வி.லீலா நோர்போக் மீதான தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. மேலும் கப்பலில் இருந்த ஆயுததாரிகள் தொடர்பான தகவல்களும் வெளியாகவில்லை.
 
ஆனால் சமீபத்திய தாக்குதல்களில் சில, ஹூத்தி கிளர்ச்சியாளர்களுடனும் இஸ்ரேல்-ஹமாஸ் போருடனும் தொடர்புடையவை.
 
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே மோதல் தொடங்கிய பின்னரே இந்தத் தாக்குதல்கள் தொடங்கின. இஸ்ரேலிய சரக்குக் கப்பலான கேலக்ஸி லீடர் இந்த திசையில் நவம்பர் 21 அன்று முதன்முதலில் தாக்கப்பட்டது.
 
இந்தக் கப்பலும் துருக்கியில் இருந்து இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த கப்பலில் இருந்த 25 பேரை இரான் ஆதரவு ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றனர்.
 
இதற்குப் பிறகு, ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் தலைமை பேச்சுவார்த்தையாளரும் செய்தித் தொடர்பாளருமான முகமது அப்துல் சலாம், இஸ்ரேலின் நட்பு நாடுகளின் அனைத்து கப்பல்களுக்கும் இதே கதிதான் ஏற்படும் என்று கூறியிருந்தார்.
 
"முன்னதாக, ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் செய்தித் தொடர்பாளர் அத்தகைய நாடுகளை இஸ்ரேலிய கப்பல்களில் இருந்து தங்கள் குடிமக்களை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டார்."

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்