முனவர் ஃபரூக்கி நகைச்சுவை காட்சியை தடை செய்த கர்நாடக போலீஸ் - ஏன்?

திங்கள், 29 நவம்பர் 2021 (09:42 IST)
பெங்களூரு போலீஸ் கடும் ஆட்சேபனை செய்ததை அடுத்து பிரபல மேடை நகைச்சுவைக் கலைஞர் முனவர் ஃபரூக்கியின் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
இந்த நிகழ்ச்சியால், அமைதி, சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைய வாய்ப்பிருப்பதாக போலீஸ் கருதுகிறது.
 
ஆனால், போலீசின் நடவடிக்கை கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. 'டோங்கிரி டூ நோவேர்' என்ற அந்த நகைச்சுவை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் போலீஸ் நோட்டீசை ஏற்றுக்கொண்டு நிகழ்ச்சியை ரத்து செய்ய ஒப்புக்கொண்டனர். காரணம், "நாங்கள் சட்டப்படி நடக்கிற குடிமக்கள்" என்கிறார் அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சித்தார்த் தாஸ்.
 
பிபிசி இந்தியிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத ஒரு போலீஸ் அதிகாரி, ஸ்ரீராம் சேனா உள்ளிட்ட அமைப்புகளிடம் இருந்து அச்சுறுத்தல் வந்துள்ள நிலையில், "இந்த நிகழ்ச்சி அமைதியைக் கெடுக்கும், சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும். எனவே நிகழ்ச்சியை நடத்தமுடியாது என்பதை நாங்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களிடம் தெளிவாகக் கூறிவிட்டோம். இதை வாய்மொழியாகவும், எழுத்து மூலமாகவும் தெரியப்படுத்தி இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
"ஆட்சேபகரமான நகைச்சுவையை" அவர் நிகழ்த்தலாம் என்ற அச்சத்தின் காரணமாக முனவர் ஃபரூக்கி கடந்த ஜனவரியில் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் கைது செய்யப்பட்டார். நிகழ்த்தாத நகைச்சுவைக்காக அவர் கைது செய்யப்பட்ட சம்பவமாக இது குறிப்பிடப்படுகிறது.
 
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு போலீஸ் அனுப்பிய கடிதத்தில் "முனவர் ஃபரூக்கி பிற சமயக் கடவுள்கள் மீது சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுகிற சர்ச்சைக்குரிய நபர் என்று தெரியவருகிறது. அவரது நகைச்சுவை நிகழ்ச்சிகளை பல மாநிலங்கள் தடை செய்துள்ளன. மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் நகரில் உள்ள துகோகஞ்ச் காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வேறு பல மாநிலங்களிலும் இது போன்ற வழக்குகள் இருப்பதாகவும் தெரியவருகிறது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
``முனவர் ஃபரூக்கியின் மேடை நகைச்சுவை நிகழ்ச்சியை பல அமைப்புகள் எதிர்க்கின்றன. இதனால், குழப்பமும், பொது அமைதி, சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டு, அதனால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என்பதற்கு நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே 28.11.2021 அன்று மாலை 5 மணிக்கு குட் ஷெப்பர்ட் ஆடிட்டோரியத்தில் நடைபெறுவதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேடை நகைச்சுவை நிகழ்ச்சியை நீங்கள் ரத்து செய்யவேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது," என்று போலீஸ் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரச்சனை ஏற்படும் என எதிர்பார்ப்பதால் நிகழ்ச்சியை அனுமதிக்க முடியாது என்று குட்ஷெப்பர்ட் அரங்க நிர்வாகிகளிடமும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், மேற்கு வங்க போலீசுக்கு உச்சநீதிமன்றம் 2019ம் ஆண்டு வழங்கிய உத்தரவை மீறும் வகையில் பெங்களூரு போலீஸ் நடந்துகொள்வதாக செயற்பாட்டாளரும், வழக்குரைஞருமான வினய் ஸ்ரீனிவாசா பிபிசியிடம் தெரிவித்தார்.
 
'பொபிஷ்யோத்தர் பூத்' (Bhobishyoter Bhoot) என்ற வங்கமொழி நகைச்சுவைப் படத்தை திரையிடுவது தொடர்பான உத்தரவு அது என்றும் அவர் கூறினார்.
 
முனவர் ஃபரூக்கி நிகழ்ச்சியை ரத்து செய்யும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு பெங்களூரு போலீஸ் ஆணையர் அழுத்தம் தந்ததாகவும் அவர் ஒரு ட்வீட்டில் தெரிவித்திருந்தார். அவரது பேச்சுரிமையை வெளிப்படுத்தும் உரிமையை, தகவல்களைப் பெறுவதற்கு பெங்களூரு மக்களுக்கு உள்ள உரிமையை நீங்கள் மறுத்துள்ளீர்கள். இன்டெபிலிட்டி கிரியேட்டிவ் பிரைவேட் லிமிட்டட் எதிர் பென்னட் கோல்மேன் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மீறுவதாகவும் இது உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
 
ஃபரூக்கி குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். அவர் "ஆட்சேபகரமான நகைச்சுவையை நிகழ்த்த இருப்பதாக" ஏக்லவ்யா சிங் கௌட் என்பவர் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் போலீசில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு புகாரை அளித்தார். புகார் அளித்தவர் பாஜக எம்.எல்.ஏ. மாலினி லக்ஷ்மண் சிங் கௌட் என்பவரின் மகன்.
 
இதையடுத்து ஃபரூக்கி தான் நிகழ்த்தாத நகைச்சுவைக்காக கைது செய்யப்பட்டு ஒரு மாதத்துக்கும் மேலாக சிறையில் வைக்கப்பட்டார். இதையடுத்து அவரது நகைச்சுவை நிகழ்ச்சிகள் அகமதாபாத், சூரத், வதோதரா, மும்பை, ராய்பூர், கோவா போன்ற நகரங்களிலும் ரத்து செய்யப்பட்டன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்