கமலா ஹாரிஸ்: ஜனநாயக கட்சியின் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக காரணம் என்ன?

புதன், 12 ஆகஸ்ட் 2020 (14:53 IST)
அமெரிக்காவின் எதிர்கட்சியான ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளரான ஜோ பைடன், செனட்டர் கமலா ஹாரிஸை கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.

துணை அதிபர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள முதல் கருப்பின பெண் மற்றும் முதல் ஆசிய அமெரிக்க பெண் கமலா ஹாரிஸ்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் ஆளும் குடியரசு கட்சியின் சார்பாக அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் போட்டியிடுகிறார்.

முன்னதாக, துணை அதிபராக பெண் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப்போவதாக ஜோ பைடன் அறிவித்திருந்தாலும், தனது கட்சியில் பிறரை விடுத்து கமலா ஹாரிஸை அவர் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள் என்ன?

1."திறமையான, கடுமையாக மற்றும் தலைமைப் பண்புகளுடன் பணியாற்றக்கூடிய ஒருவர் என்னுடன் பணியாற்ற விரும்புகிறேன் என்று ஜோ பைடன் தேர்தல் பிரசாரம் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

கமலா ஹாரிஸ் இந்த தகுதிகள் அனைத்துக்கும் பொருந்துகிறார். அவரின் குடும்பம் அமெரிக்காவுக்கு குடியேறிவர்கள், வெள்ளை நிறத்தவர் அல்லாதவர், மேலும் பெரிய மாநிலம் ஒன்றின் உயர் பொறுப்பில் இருந்தவர். எனவே நிற பாகுபாடு மற்றும் குடியேற்றப் பிரச்சனை குறித்து பேசுபவர்கள் கமலாவுக்கு வாக்களிப்பர்.

சட்டம் பயின்றுள்ள கமலா ஹாரிஸ், சான் பிரான்ஸிஸ்கோவின் அட்டர்னி ஜெனரலாக இருந்தவர். அதன்பின் கலிஃபோர்னியா அட்டர்னி ஜெனரல் பொறுப்பை வகித்தவர். வசீகர ஆளுமை கொண்டவர், திறமையாக விவாதிக்கக்கூடியவர் மற்றும் பேச்சாளர். எனவே செனட்டில் இருந்த குறுகிய காலகட்டத்தில் தேசிய அளவில் புகழ்பெற்றுள்ளார்.

இணைய உலகிலும் கமலா பிரபலமானவர். ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் பதவிக்கு போட்டியிடும் சமயத்தில், அவரின் திறமை தேசிய அளவிலான கவனத்தை ஈர்த்த்து.

2.முதலில் ஜோ பைடனின் தேர்தல் பிரசாரங்கள் எடுபடவில்லை என பேசப்பட்ட நிலையில், பிப்ரவரி 29ஆம் தேதி இந்த நிலை மாறியது. தெற்கு கரோலைனாவில் ஜோ பைடன் மகத்தான வெற்றி பெற்றார். அவருக்கு அதிகப்படியான ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வாக்குகள் கிடைத்திருந்தன.

அதன்பின் ஒவ்வொரு மாகாணத்திலும் ஜோ பைடன் ஆப்பிரிக்க-அமெரிக்க சமூதாயத்தின் பெரும் ஆதரவை பெற்றார்.

எனவே, ஜோ பைடன் மற்றும் அவர் சார்ந்த கட்சி, அந்த சமூகத்தை சேர்தவர்களை துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

மேலும், புகழ்பெற்ற ஜனநாயக கட்சியின் ஆப்பிரிக்க-அமெரிக்க அரசியல் தலைவரான ஜேம்ஸ் க்லிபன் கருப்பினத்தை சேர்ந்த பெண் ஒருவரை வேட்பாளராக இருத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

3. ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணத்துக்கு பிறகு, ஜோ பைடன் மற்றும் ஜனநாயக கட்சியின் மீதான அந்த அழுத்தம் அதிகரித்தது.

ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிளாய்ட் போலீஸாரின் பிடியில் உயிரிழந்தார். `பிளாக் லைவ்ஸ் மேட்டர்ஸ்` என்ற போராட்டம் தொடர்ந்து வலுப்பெற்றது. வெறும் அரசியல் வாக்குறுதிகளாக இல்லாமல், செயலில் மாற்றங்கள் வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

4.கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு குடும்ப உறவும் காரணமாக உள்ளது.

"நான் முதன்முதலில் எனது மகன் போவின் மூலமாகத்தான் கமலாவை பார்த்தேன். அவர்கள் ஒரே சமயத்தில் அட்டர்னி ஜெனரலாக இருந்தவர்கள். கமலாவின் பணிகள் மீது எனது மகன் மிகுந்த மரியாதை வைத்திருந்தான். நான் இந்த முடிவை எடுக்கும்போது அதுகுறித்தும் யோசித்தேன். போவின் எண்ணங்களை விட, வேறு யாரின் எண்ணங்களையும் பெரிதாக நான் மதித்ததில்லை. எனவே, கமலா என்னுடன் இந்த தேர்தல் பிரசாரத்தில் நிற்பதை நான் பெருமையாக கருதுகிறேன்" என ஜோ பைடன் தெரிவித்தார்.

5. அமெரிக்க வாக்காளர்களில் 13% பேர் ஆப்பிரிக்க-மெரிக்கர்களாக உள்ளானர். மேலும் வெற்றியைத் தீர்மானிக்கும் பல மாகாணங்களில் கணிசமான வாக்கு வங்கியை அவர்கள் பெற்றுள்ளனர்.

டிரம்புக்கு எதிராக ஹிலாரி கிளிண்டன் தோல்வியுற்றபோது, அவருக்கு ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வாக்குகள் குறைவாக கிடைத்ததுதான் காரணம் என்றனர். எனினும், கமலா ஹாரிஸால் அந்த வாக்குகளை அதிகளவில் பெற முடியுமா என்பதை உறுதியாக கூற தற்போது இயலாது.

6.மற்றொரு பேசப்படும் காரணம், பைடன்- பராக் ஓபாமா கூட்டணி போலவே, தற்போதும் ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என ஜோ பைடன் தரப்பு முடிவு செய்தது என்று கூறப்படுகிறது.

கமலா இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், அவர் 2024-ஆம் ஆண்டு தேர்தலில் அதிபர் பதவிக்கு போயிடும் வாய்ப்பும் கிடைக்கலாம்.

இது ஒருபுறம் இருக்க, கமலா மீது எதிர் தரப்பினர் கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

"கமலா கருப்பினத்தவரும் இல்லை; அமெரிக்கரும் இல்லை," என கன்சர்வேட்டிவ் கொள்கைகள் கடைப்பிடிப்பவர் என்று தெரிவிக்கும் டிவிட்டர் கணக்கு ஒன்று விமர்சனம் செய்திருக்கிறது.

மேலும், தேர்தல் விவாதம் ஒன்றில் தனியார் உடல்நல காப்பீடுகளை ரத்து செய்ய யார் விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு கமலா ஹாரிஸ், தனது கைகளை தூக்கி அமோதித்த செயல், பெரும் விமர்சனங்களுக்கு உண்டானது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்