"டிரம்புக்கு 2 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கிறேன்" - அதிபரை அதிரவைத்த நீதிபதி
வெள்ளி, 8 நவம்பர் 2019 (19:03 IST)
தனது தேர்தல் பிரசார செலவுக்காக தன்னுடைய சொந்த தொண்டு நிறுவனத்திலிருந்து வந்த பணத்தை தவறாக பயன்படுத்தியதால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு நியூயார்க் நீதிபதி ஒருவர் 2 மில்லியன் டாலர்களை அபராதமாக விதித்துள்ளார்.
கடந்த 2018ல் தி டொனால்டு ஜே டிரம்ப் ஃபவுண்டேஷன் மூடப்பட்டது. இந்த தொண்டு நிறுவனம் அமெரிக்க அதிபரின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படுகிறது என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுபோன்ற அறக்கட்டளைகளில் தலைமை பொறுப்பு வகிப்பவர்கள் அரசியலில் ஈடுபட முடியாது என நீதிபதி கூறி இருந்தார். அதற்கு, அதிபர் டிரம்ப், ’எல்லா பணமும் தொண்டு உதவிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது` என்று கூறியுள்ளார்.
”எனக்கு தெரிந்த வரையில், நலத்திட்டங்களுக்காக நிறைய பணம் கொடுக்கும் ஒரே ஆள் நான்தான். இதுவரை என்னுடைய செலவுகளுக்காக கட்டணம்கூட வசூலித்தது இல்லை. ஆனால், நியூயார்க் மாகாணத்தில் அரசியல் முறையில் தாக்கப்படுகிறேன்” என்று அவர் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நியூயார்க்கின் அட்டர்னி ஜெனரல் லெட்டீஷியா ஜேம்ஸ் அரசியல் காரணங்களுக்காக தன்னை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக இதை செய்தார் என அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
நீதிபதி சேலியன் ஸ்கார்புலா, அறக்கட்டளைக்கான அதிபர் டிரம்ப் விதியை மீறிவிட்டார். அமெரிக்க ராணுவ வீரர்களுக்காக திரட்டப்பட்ட நிதியை 2016 அமெரிக்க தேர்தலில் பயன்படுத்தினார் என கூறியுள்ளார்.
”டிரம்புக்கு 2 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கிறேன். இந்த பணம் இப்போது செயல்பாட்டில் இருந்திருக்க வேண்டிய அறக்கட்டளைக்கு சென்றிருக்க வேண்டும்” என தீர்ப்பு வழங்கினார். மேலும், இதை அவர் தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து கொடுக்க வேண்டும் என்றும், அதிபருக்கு எந்த தொடர்பும் இல்லாத 8 அறக்கட்டளைகளுக்கு இந்த பணம் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
”வழக்கு முடிந்தது. ஆர்மி எமெர்ஜென்ஸி ரிலீஃப், சில்ரன்ஸ் எய்டு சொசைட்டி உள்பட 8 அறக்கட்டளைகளுக்கு 2 மில்லியன் டாலர் கொடுப்பது எனக்கு மகிழ்ச்சியே,” எனக்கூறியுள்ளார் அதிபர் டிரம்ப்.
இதன் மூலம், பணத்தை சுயலாபத்திற்காக டிரம்ப் பயன்படுத்தி உள்ளதை ஒப்பு கொண்டுள்ளார் என ஜேம்ஸ் கூறியுள்ளார்.
அதிபர் டிரம்ப் அறக்கட்டளை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என நீதிபதி ஸ்கார்புலாவிடம் கேட்டார். ஆனால், அது நடைமுறைபடுத்தவில்லை. இந்த அறக்கட்டளையின் நிறுவனராக இருக்கும் ஜூனியர் டொனால்டு ட்ரம்ப், எரிக் ட்ரம்ப் மற்றும் இவான்கா ட்ரம்ப் ஆகியோர் அறக்கட்டளை நடத்துவதற்கான பயிற்சி எடுக்க வேண்டும் என ஜேம்ஸ் கூறினார்.