பிரேசிலில் உருவாகும் பிரும்மாண்ட சிலையின் சிறப்பு என்ன?

திங்கள், 12 ஏப்ரல் 2021 (11:55 IST)
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள புகழ்பெற்ற ரீடிமர் சிலையை காட்டிலும் உயரமான இயேசு கிறிஸ்து சிலை ஒன்று பிரேசிலில் கட்டமைக்கப்படவுள்ளது.

பிரேசிலின் என்காண்டாடு நகரில் 43 மீட்டர், அதாவது 140 அடியில் இந்த சிலை உருவாக்கப்படவுள்ளது. இது உலகின் மூன்றாவது உயரமான இயேசு கிறிஸ்து சிலையாக இருக்கும்.

இந்த சிலையின் கட்டமைப்பு 2019ஆம் ஆண்டு தொடங்கியது. இயேசு கிறிஸ்துவின் தலை மற்றும் விரிந்த கைகள் கடந்த வாரம் உருவாக்கப்பட்டது.

இந்த யோசனை அர்ரொல்டூ கான்சாட்டி என்றும் உள்ளூர் அரசியல்வாதி ஒருவரால் வழங்கப்பட்டது. அவர் கடந்த மார்ச் மாதம் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்தார்.

மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்த சிலையின் கட்டுமானம் இந்த வருடத்தின் இறுதிக்குள் முடிவுரும் என எதிர்பார்க்கப்படுகிறது என இந்த இயேசு கிறிஸ்து சிலையை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் `தி அசோசியேஷன் ஆஃப் த ஃபிரண்ட்ஸ் ஆஃப் கிறிஸ்ட் க்ரூப்` தெரிவித்துள்ளது.

மேலும் இதற்கு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் நன்கொடை வழங்கி வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவிக்கிறது. ஒரு கையிலிருந்து மற்றொரு கை வரை இந்த சிலை 36 மீட்டர் அகலம் கொண்டது. மேலும் மார்பு பகுதியில் பார்வையாளர்கள் காணும் பகுதி (view point) உருவாக்கப்படும் இது தரையிலிருந்து 40மீட்டர் உயரம் கொண்டது.

இந்தோனீசியாவின் சுலவேசியில் உள்ள பண்ட்டு புராக்கே சிலை 52.55மீட்டர் உயரம் கொண்டது. போலாந்தில் உள்ள `கிறிஸ்ட் த கிங்` சிலை 52.5 மீட்டர் உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புகழ்பெற்ற ரீடிமர் சிலையின் உயரம் 38 மீட்டர். இருப்பினும் உலகளவில் டஜன் கணக்கான உயரமான பல சிலைகள் உள்ளன அதில் கன்னி மேரி மற்றும் புத்தர் சிலைகளும் அடக்கம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்