ஜம்மு காஷ்மீரில் 4G: 18 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அதிவேக இணைய சேவை

வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (23:32 IST)
ஜம்மு காஷ்மீரில் 4G இணைய சேவை மீண்டும் பயன்பாட்டிற்கு வருவதாக வெள்ளிக்கிழமை மாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு பிறகு அதிவேக இணைய சேவை அங்கு மீண்டும் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது.
 
ஜம்மு காஷ்மீர் முழுவதும் 4ஜி இணைய சேவை மீண்டும் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சால் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
 
வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் இது செயல்பாட்டிற்கு வரலாம் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
 
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதில் இருந்து தற்போது வரை இந்திய அரசு அங்கு மொபைல் இணைய சேவை உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்பு வசதிகளையும் முடக்கியிருந்தது.
 
பிறகு 2020 ஆகஸ்ட் மாதத்தில் இரண்டே மாவட்டங்களுக்கு மட்டும் அதிவேக இணைய வசதி அளிக்கப்பட்டது. சோதனை அடிப்படையில், காஷ்மீர் பிராந்தியத்தில் கண்டெர்பால் மாவட்டம் மற்றும் ஜம்மு பிராந்தியத்தின் உதம்பூர் மாவட்டத்தில் மட்டும் இணைய வசதி வழங்கப்பட்டது.
 
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு, அவை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.
 
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நூற்றுக்கணக்கான அரசியல் தலைவர்களும், செயற்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்