பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வீடு வாடகைக்கு விடப்பட்டுள்ளதா? உண்மை என்ன? #FactCheck
சனி, 7 ஆகஸ்ட் 2021 (00:17 IST)
இம்ரான் கான்: எளிமையின் அடையாளம்?
சில இந்திய ஊடக வட்டாரங்கள், பாகிஸ்தானில் உள்ள பிரதமர் இல்லம் வாடகைக்கு விடப்பட்டிருப்பதாகவும், அந்நாட்டில் அதிகரித்துவரும் பொருளாதாரச் சிக்கலை சரிசெய்யும் முயற்சி இது எனவும் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் உள்ள ஆங்கில இணையதளமான சாமா நியூஸ் வெளியிட்ட செய்தியை மேற்கோள் காட்டிய இந்திய நாளிதழ்கள், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இல்லம் வாடகைக்கு விடப்பட்டிருப்பதாகவும், இது ஒரு பெரிய அவமானம் என்றும் தெரிவிக்கின்றன. சரிந்திருக்கும் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவதற்கான முயற்சி இது எனவும் அவை குறிப்பிட்டன.
கச்சேரிகள், விழாக்கள், ஃபேஷன் நிகழ்ச்சிக்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்திக்கொள்ளும் சமூகக் கூடமாகப் பிரதமரின் வீட்டைப் பயன்படுத்திக்கொள்ள ஒன்றிய அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த செய்தி தெரிவித்தது. இது போன்ற நிகழ்ச்சிகளின்போது வீட்டின் கண்ணியமும் ஒழுங்கும் குலையாமல் பார்த்துக்கொள்வதற்காக இரண்டு கமிட்டிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. "இம்ரான் கானின் பதவிக்காலம் பல அவமானங்கள் நிறைந்தது என்றாலும், இது மிகவும் மோசமானது" என்றுகூட ஒரு செய்தி இணையதளம் குறிப்பிட்டிருந்தது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
பாகிஸ்தான் பிரதமரை தனியாக சந்தித்த இலங்கை முஸ்லிம் எம்.பி.க்கள் - என்ன நடந்தது?
சில இணையதளங்கள் இன்னும் பரபரப்பூட்டும் வகையில் தலைப்புகளை எழுதின.
"உடைந்தப் பொருளாதாரம், வேறு வழியின்றி பாகிஸ்தான் தனது பிரதமரின் வீட்டை வாடகைக்கு விடுகிறது"
"பொருளாதாரத்தை இழந்த பாகிஸ்தான் தனது பிரதமரின் வீட்டை வாடகைக்கு விடுகிறது"
"எருமைகளின் ஏலத்தை அடுத்து பணத்துக்காக பாகிஸ்தான் அரசு செய்த முயற்சி: பிரதமரின் வீடு வாடகைக்கு"
பாகிஸ்தான் பிரதமரின் தலைமைச் செயலக வட்டாரங்களுடன் பிபிசி பேசியபோது, சமீபத்திய கூட்டங்களில் இப்படி ஒரு விஷயம் விவாதிக்கப்பட்டது உண்மைதான் என்றும், அது ஏற்ககப்படவும் இல்லை, இதற்காக கமிட்டிகள் போடப்படவும் இல்லை என்பது தெரியவந்தது.
பிரதமர் இம்ரான்கான் குண்டுதுளைக்காத கார் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டார். பின்னர் அது ஏலம் விடப்பட்டது.
படக்குறிப்பு,
பிரதமர் இம்ரான்கான் குண்டுதுளைக்காத கார் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டார். பின்னர் அது ஏலம் விடப்பட்டது.
பதவியேற்ற சில வாரங்களிலேயே அந்த வீட்டிலிருந்து வெளியேறிய இம்ரான் கான், இஸ்லாமாபாத்தின் பனிகலா பகுதியில் உள்ள தன் சொந்த வீட்டிலேயே தங்கிக்கொள்வதென்று முடிவெடுத்திருக்கிறார். ஆகவே அதிகாரபூர்வ வீடு காலியாகவே இருக்கிறது என்பதால் இதை இம்ரான்கான் வரவேற்றார் என்று சொல்லப்படுகிறது.
இந்த யோசனையை எதிர்த்த சிலர், இது ஒரு அரசாங்க சொத்து எனவும், இதற்கு அடையாளரீதியாக ஒரு மதிப்பு இருக்கிறது எனவும் தெரிவித்தனர். இதை வாடகைக்கு விடுவது பிரதமர் பதவியுடைய புனிதத் தன்மையை கெடுக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர். ஒருமித்த கருத்து எட்டப்படாததால் இந்த யோசனை கைவிடப்பட்டது.
பிரதமர் வீடு இஸ்லாமாபாத்தின் மத்தியப் பகுதியில் இருக்கிறது. இது 1096 கனல் பரப்பளவில் கட்டப்பட்டது.
(கனல் என்பது பாகிஸ்தானிலும், வட இந்தியாவிலும் பயன்படுத்தப்படும் நில அளவை அலகு. வெவ்வேறு இடங்களில் இது குறிக்கும் அளவு வேறு என்றாலும், தோராயமாக ஒரு கனல் என்பது ஒரு ஏக்கரில் 8ல் ஒரு பங்கு).
எளிமை, துறவு மனப்பான்மை ஆகியவற்றுக்கான அடையாளமாகவே இம்ரான்கான் வளர்ந்துவருகிறார். தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமரின் வீட்டை ஒரு அரசுப் பல்கலைக்கழகமாக மாற்றப்போவதாகத் தெரிவித்த அவர், இது பொது சொத்தை வீணடிக்கும் வேலை எனவும், இதுபோன்ற கட்டடங்கள் காலனியாதிக்க காலத்தின் எச்சம்தான் எனவும், அரசியல் மேட்டுக்குடிகள் அரசு வளங்களை சுரண்டும் வழி இதும் எனவும் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 2019ல் பிரதமராகப் பதவி ஏற்றபின்பு அந்த வீட்டிலிருந்து வெளியேறினார். "எளிமையான வாழ்க்கை வாழ்வேன், உங்கள் பணத்தை வீணடிக்க மாட்டேன்" என்று உறுதியளித்தார்.
பதவியேற்றபின்பு ஆற்றிய முதல் உரையில், "மூன்று படுக்கையறை கொண்ட ராணுவ செயலாளரின் வீட்டில் வசிப்பேன்" என்று தெரிவித்தார். "பிரதமரின் வீடு ஒரு பல்கலைக்கழகமாக மாற்றப்படவேண்டும் என்று விரும்புகிறேன். பல்கலைக்கழகத்தை அமைக்க சரியான இடம் அது" என்று தெரிவித்தார். பிறகு தன் சொந்த வீட்டுக்குக் குடிபெயர்ந்தார்.
அதன்பிறகு ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரு கேபினட் அமைச்சர் பேசும்போது, ஆண்டுக்கு 47 கோடி ரூபாய் செலவு செய்து பிரதமர் இல்லம் பராமரிக்கப்படுகிறது என்றார். பிரதமரின் வீட்டுக்குப் பின்னால் உள்ள நிலத்தில் கூடுதல் கட்டுமானம் செய்து, அங்கு உயர்தரப் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்றார்.
ஜூலை 2019ல் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக, இஸ்லாமாபாத் பெருந்திட்டத்தில் ஒரு மாறுதலுக்கு ஒப்புதல் அளித்தது ஒன்றிய கேபினட். பிரதமர் இல்லம் உள்ள ஜி-5 பகுதியில் கல்வி நிறுவனங்கள் அமைக்கக்கூடாது என்றும், அந்தப் பகுதி அரசு மற்றும் நிர்வாகக் கட்டிடங்களுக்கானது என்றும் ஒரு விதி இருந்தது. அது மாற்ற்றியமைக்கப்பட்டது.
ஆனாலும் பல்கலைக்கழகம் கட்டும் திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
பிரதமரின் வீட்டை ஒரு அரசு அலுவலகமாக மாற்றும் திட்டம் பற்றிய யோசனை வந்திருப்பது முதல் முறையல்ல.
கார்கள், எருமைகள், கட்டிடங்கள்
தன் எளிமையில் ஒரு பகுதியாக, புல்லட் ஃப்ரூப் வண்டிகளை இம்ரான் கான் பயன்படுத்தவில்லை. அவை பின்னாட்களில் ஏலம் விடப்பட்டன. 61 சொகுசு கார்களை ஏலம் விட்டதில் 200 மில்லியன் ரூபாய் வருவாய் வந்தது. ஒரு பிரதமருக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 524 பணியாளர்களுக்கு பதிலாக இரண்டு பணியாளர்கள் போதும் என்று அறிவித்தார் இம்ரான். பிரதமர் இல்லத்திலிருந்த 8 எருமைகள் ஏலம் விடப்பட்டதில் 25 லட்சம் ரூபாய் கிடைத்தது.
எளிமையை செயல்படுத்தவே ஒரு செயலாற்றுக் குழு அமைக்கப்போவதாக இம்ரான் கான் அறிவித்திருக்கிறார். பிரதமர் வீடு தவிர பல அரசு கட்டடங்களை பொதுக் கட்டடங்களாக மாற்றும் திட்டம் இருந்தது. முரி மற்றும் ராவல்பிண்டியில் உள்ள பஞ்சாப் வீடு, லாகூர், கராச்சியில் உள்ள கவர்னர் மாளிகை, எல்லா மாகாணங்களிலும் உள்ள பிரதமர் வீடுகள் போன்ற பல கட்டிடங்கள் பட்டியலில் இருந்தன. ஆனால் இந்தத் திட்டம் நிறைவேறவில்லை.
பிரபலத்துக்காகவா பொருளாதார சிக்கலா?
இம்ரான் கானின் எளிமைத் திட்டங்களால் பிரதமர் வீட்டுக்கான செலவுகள் பெருமளவில் குறைந்திருக்கின்றன. இவை நல்ல முயற்சிகள்தான் என்றாலும் சரிந்துகொண்டிருக்கும் பொருளாதாரத்துக்கு இவை தீர்வாகாது என்கின்றனர் வல்லுநர்கள்.
பொருளாதார மீட்சிக்கு இம்ரான் கானிடம் எந்தத் திட்டமும் இல்லை என்றும், அதை மூடி மறைக்கவே இந்த எளிமை வேடம் போடப்படுகிறது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. மக்களை திசைதிருப்ப அவர் இப்படி செய்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால், இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் திட்டங்கள், ஏழைக்கும் பணக்காரர்களுக்குமான வேறுபாட்டைக் குறைத்து, நீதியுள்ள ஒரு சமூகத்தை வடிவமைப்பதில் அவருக்கு உள்ள ஆர்வத்தையும் பொதுப்பணத்தின்மேல் அவர் வைத்திருக்கும் மதிப்பையும் காட்டுகின்றன.
எளிமைக்கான ஒரு முன்னெடுப்பை தேசத்தலைவர்கள் மேற்கொள்வது இது முதல்முறை அல்ல. ராணுவ சர்வாதிகாரி ஜியா உல் ஹக், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் இதுபோன்ற முயற்சிகளை செய்திருக்கிறார்கள். ஆனால் அவை நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.