யுரேனியம் செறிவூட்டலை திடீரென அதிகரித்த இரான் - எச்சரிக்கும் உலக நாடுகள்
2015ஆம் ஆண்டு உலக நாடுகளுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை முன்னெப்போதுமில்லாத அளவுக்கு மீறியுள்ள, இரான் தன் யுரேனியத்தை 20 சதவீத அளவுக்கு செறிவூட்டத் தொடங்கி உள்ளது..
கோம் (Qom) பகுதியில் நிலத்துக்கடியில் இருக்கும் ஃபோர்டோ அணுசக்தி நிலையத்தில், யுரேனியம் செறிவூட்டல் பணி தொடங்கியுள்ளதாக இரான் அரசின் செய்தித் தொடர்பாளர் அலி ரபேய், மெஹர் செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து சர்வதேச அணுசக்தி முகமை (ஐ.ஏ.இ.ஏ) எதையும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இரான் தன் அணுசக்தி நிலையத்தில் யுரேனியத்தை 20 சதவீதம் செறிவூட்ட இருப்பதை கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்ததாக ஐ.ஏ.இ.ஏ அமைப்பு கூறியுள்ளது.
இரானின் இந்த செயல்பாட்டுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், "இரானை அணுஆயுதம் தயாரிக்கவிடமாட்டோம்" என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று வரும் 20ஆம் தேதி அந்த நாட்டின் அதிபராக பதவியேற்க உள்ள ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனுக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக இரானின் செயல்பாட்டை பார்ப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, இரான் முழு இணக்கத்துடன் திரும்ப வந்து, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் மீண்டும் அந்த நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இணைவது குறித்து பரிசீலிப்பதாக ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.
2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிய பிறகு, இரான் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. அதன் பிறகு இந்த ஒப்பந்தத்தின்படி ஒப்புக் கொண்ட பல விடயங்களை இரான் ஒன்றன்பின்னொன்றாக மீறி வருவது வாடிக்கையாகிவிட்டது.
செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்றால் என்ன?
யு-235 எனப்படும் அணுக்கரு பிளவுக்கு மிகவும் பொருத்தமான ஐசோடோப்பை பிரித்தெடுக்க, யுரேனியம் ஹெக்ஸாஃப்ளோரைட் வாயுவை சென்ட்ரிஃப்யூஜ்களில் செலுத்துவதன் மூலம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரிக்கப்படுகிறது.
குறைந்த அளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் பொதுவாக 3 - 5 சதவீதம் யூ-235-க்களைக் கொண்டதாக இருக்கும். இதை அணுசக்தி நிலையங்களில் மின்சாரத்தைத் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.
அதிக அளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்றால் 20 சதவீதம் அல்லது அதற்கு மேல் செறிவூட்டப்பட்டதாக இருக்கும். இதை ஆராய்ச்சி நிலையிலுள்ள அணு உலைகளில் பயன்படுத்துவார்கள்.
அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய 90 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தேவை.
யுரேனியம் செறிவூட்டல் - ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
யுரேனியம் செறிவூட்டலை அதிகரித்தால், இரான் அணு ஆயுதத்தைத் தயாரிக்கும் காலம் குறையும் என்கிறார்கள் பார்வையாளர்கள்.
இரானோ, தன் அணுசக்தித் திட்டங்கள் எல்லாமே, பிரத்யேகமாக அமைதியான திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்துவதாக வலியுறுத்துகிறது.
ஆனால், கடந்த 2010ஆம் ஆண்டு இரான் அணு ஆயுதத்தை மேம்படுத்தி வருவதாக எழுந்த சந்தேகம், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் ஐ.நா சபை ஆகியவை அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கக் காரணமானது.
சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் கடந்த 2015-ம் ஆண்டில் இரான் மேற்கொண்ட ஒப்பந்தம், இரானின் அணுசக்தித் திட்டங்களைச் சரிபார்த்துக் கட்டுப்படுத்தும் விதத்தில் வடிவமைகப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இரான் கையெழுத்திட்டதற்கு பதிலாக பொருளாதாரத் தடைகள் மெல்ல நீக்கிக் கொள்ளப்பட்டன.