யார் இந்த ஆர்.என். ரவி??

சனி, 18 செப்டம்பர் 2021 (14:01 IST)
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்றுக்கொண்டுள்ளார். ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
 
தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதால், நாகாலாந்தின் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
 
ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் நடந்த விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலர் இறையன்பு, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, மத்திய அமைச்சர் எல். முருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
பிகாரில் உள்ள பாட்னாவில் பிறந்த ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி, 1974 இல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்லூரி படிப்பை முடித்ததும், சில காலம் பத்திரிகைத் துறையில் பணியாற்றிய இவர், 1976இல் இந்திய காவல் பணியில் சேர்ந்தார். அவருக்கு கேரளா பிரிவு ஒதுக்கப்பட்டது.அங்கு அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட கண்காணிப்பாளர், காவல் துணைத் தலைவர் உட்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றினார்,
 
பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார்.மத்திய புலனாய்வுத்துறை பணியின்போது, நாட்டில் சுரங்க மாஃபியாக்கள் உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு எதிராக பல ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டார்.
 
இந்தியாவின் உளவுத்துறையான இன்டலிஜென்ஸ் பியூரோவிலும் இவர் பணியாற்றியுள்ளார்.அந்த பணியில் இருந்தபோது, இவர் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இயங்கி வந்த குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மூளையாக செயல்பட்டார்.
 
உளவுத்துறையில் சிறப்பு இயக்குநராக இருந்தபோது, ஐ.பி இயக்குநராக இருந்தவர் அஜித் தோவல். அவர்தான் தற்போது பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார். அந்த வகையில் தோவலுக்கும் ஆர்.என். ரவிக்கும் நெருக்கமான புரிந்துணர்வு உள்ளது. 2012இல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பிரதமர் அலுவலகத்தில் மத்திய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு உளவு அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணிக்காக நியமிக்கப்பட்ட கூட்டு புலனாய்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
 
2014ஆம் ஆண்டில் மத்தியில் நரேந்திர மோதி தலைமையில் புதிய அரசு அமைந்த சில மாதங்களில், அதே ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி, நாகாலாந்தில் நாகா சமாதான பேச்சுவார்த்தைக்கான மையத்தின் மத்தியஸ்தராக ரவி நியமிக்கப்பட்டார்.
 
அதைத்தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு அக்டோபரில் அவர் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அவர் நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வந்தார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் அவர் தமிழக ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்