வயதாவதால் பலவீனமாகும் நோய் எதிர்ப்பு மண்டலம் - தவிர்க்க முடியுமா?

செவ்வாய், 5 ஜனவரி 2021 (23:22 IST)
கொரோனா தொற்றுநோய் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டியிருக்கிறது.
 
செல்கள், திசுக்கள் மற்றும் உடல் உறுப்புகளின் இந்த சிக்கலான வலையமைப்பு தான், நோய் தொற்று மற்றும் நோய்களில் இருந்து தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள நம் மனித இனத்திடம் இருக்கும் முக்கிய ஆயுதம்.
 
உடலின் மற்ற பகுதிகளைப் போலவே, மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்துக்கும் வயதாகிறது. இதனால் நாம் எல்லா வகையான நோய்களாளும் எளிதில் தாக்கப்படக் கூடியவர்களாகிறோம்.
 
65 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்பிருக்கிறது என மருத்துவ நிபுணர்கள் நம்புவதற்கு இதுவும் ஒரு காரணம்.
 
இருப்பினும், நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வயது, நம்முடைய வரிசைக்கிரம வயதோடு (பிறந்தநாள் கொண்டாடும் வயது) ஒத்துப் போக வேண்டும் என்கிற அவசியல்லை.
 
"வரிசைக்கிரமப் படி 80 வயதுள்ள ஒருவருக்கு, 62 வயதான நோயெதிர்ப்பு அமைப்பு கொண்ட நபர்கள் இருக்கலாம் அல்லது அதற்கு நேர்மாறாகவும் இருக்கலாம்" என இஸ்ரேலின் டெக்னியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியின் நோயெதிர்ப்பு நிபுணர் ஷாய் ஷென் ஆர் பிபிசியிடம் கூறுகிறார்.
 
வயோதிகம் மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது. கோவிட்-19 போன்ற வைரஸுக்கு இலக்காகிறது.
 
நல்ல செய்தி என்னவென்றால், எளிய வழிமுறைகளைப் பின்பற்றி, நோயெதிர்ப்பு மண்டலம் வயதாவதை தாமதப்படுத்தலாம்.
 
அதைப் பார்ப்பதற்கு முன், நோயெதிர்ப்பு மண்டலம் எப்படி செயல்படுகிறது என்பதை நினைவுபடுத்திக் கொள்வோம்.
 
சில டி & பி செல்கள்
 
நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் இரண்டு பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. இரண்டு பிரிவுகளும் வேறுபட்ட வெள்ளை ரத்த அணுக்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு செல்களும் நம் உடலை தனித் தனி வழிகளில் பாதுகாக்கிறது.
 
நம் உடலுக்குள் ஒரு அந்நிய செல் வரும் போதை அதை உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே உள்ளார்ந்த நோயெதிர்ப்பு (Innate Immune Response) மண்டலம் வேலை செய்யத் தொடங்குகிறது. இது தான் நம் உடலின் முதற்கட்ட பாதுகாப்பரண்.
 
இந்த முதல் கட்ட எதிர்ப்பில் 'நியூட்ரோஃபில்ஸ்' (Neutrophils) என்றழைக்கப்படும் வெள்ளை ரத்த செல்களும் ஈடுபடுகின்றன. இந்த செல்கள் பேக்டீரியா & மோனோசைட்களைத் தாக்குகின்றன. அதோடு நம் நோயெதிர்ப்பு மண்டலத்தை சீர்படுத்த உதவுகிறது. உடலில் நோய் தொற்று இருப்பதை மற்ற நோயெதிர்ப்புச் செல்களை எச்சரிக்கிறது. இது போக என் கே என்றழைக்கப்படும் கில்லர் செல்கள் இருக்கின்றன. வைரஸ் மற்றும் புற்றுநோய்களுடன் போராடுவது தான் இதன் வேலை. மனிதர்கள் வயதாகும் போது இந்த மூன்று செல்களும் சிறப்பாக வேலை செய்யாது என்கிறார் பிரிட்டனின் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் 'இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃப்ளமேஷன் அண்ட் ஏஜிங்'-ல் இயக்குநராக இருக்கும் ஜேனட் லார்ட்.
 
வெள்ளை இரத்த அணுக்கள் நம் உயிரினத்தை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கின்றன
 
இதன் பிறகு தான் தகவமைப்பு நோயெதிர்ப்பு (Adaptive Response) என ஒன்று இருக்கிறது. இது டி & பி லிம்போசைட்களால் நடத்தப்படுகிறது. இந்த நோயெதிர்ப்பு ஒரு குறிப்பிட்ட பேத்தோஜென்னை எதிர்த்து வெளிப்படும். இந்த தகவமைப்பு நோயெதிர்ப்பு வெளிப்பட ஒரு சில நாட்கள் ஆகும். ஆனால் ஒரு குறிப்பிட்ட பேத்தோஜென்னுக்கு எதிராக இந்த செல்கள் களமிறங்கிவிட்டால், அந்த பேத்தோஜென்களை நினைவில் வைத்துக் கொண்டு மீண்டும் நம் உடலில் தோன்றினால் அதைத் தாக்கும்.
 
"உங்களுக்கு வயதாகும் போது, உங்கள் உடலில் புதிய குறைவான லிம்போசைட்கள் உருவாகியிருக்கும். இவை புதிதாக வந்திருக்கும் கொரோனாவை எதிர்த்தும் போராட வேண்டும். இதற்கு முன்பு, மற்ற தொற்றுகளைச் சமாளிக்க உங்கள் உடல் உற்பத்தி செய்த லிம்போசைட்டுகள், வயது அதிகரிக்கும் போது அத்தனை சிறப்பாக வேலை செய்யாது" என்கிறார் ஜேனட்.
 
வயது அதிகரிப்பது, உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தின் அனைத்து செயல்பாட்டையும் குறைத்துவிடும்.
 
 
டி லிம்போசைட்டுகளை உற்பத்தி செய்யும் ஒரு சுரப்பி தைமஸ், நாம் 20 வயதை எட்டும்போது சுருங்கத் தொடங்குகிறது
 
உள்ளார்ந்த நோயெதிர்ப்பு கொஞ்சம் கூடுதலாகவே செல்களை உற்பத்தி செய்யும், ஆனால் அது பலன் கொடுக்காது. தகவமைப்பு நோயெதிர்ப்பு குறைவான பி & டி லிம்போசைட்களை உருவாக்கும். இதில் பி லிம்போசைட்டுகள் எலும்பு மஜ்ஜைகளில் உருவாகும். எதிர்ப்பான்களை உருவாக்குவது இதன் பொறுப்பு. டி லிம்போசைட்கள் தைமஸ் என்கிற பாகத்தில் உருவாகிறது. பாதிக்கப்பட்டிருக்கும் செல்கள் மற்றும் பேத்தோஜென்களை கண்டுபிடித்து அழிப்பது தான் இதன் பணி.
 
"மனிதர்களின் தைமஸ் பாகம், 20 வயது முதல் சுருங்கத் தொடங்கிவிடும். இதனால் டி செல்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கிவிடும். இப்படியே தைமஸ் சுருங்கிக் கொண்டே வந்து, 65 அல்லது 70 வயதில் அதன் அளவில் வெறும் மூன்று சதவிகிதம் மட்டுமே இருக்கும் என்கிறார்" ஜேனட் லார்ட்.
 
பேத்தோஜென்களைக் குறித்த நினைவுகளை சேமித்து வைக்கும் செல்கள் குறைவதால், தொற்றுகளை எதிர்கொள்ளும் திறனை இழக்கிறது. அதோடு தடுப்பு மருந்துக்கு சாதகமான எதிர்வினையாற்றும் திறனை இழக்கிறது. இவையனைத்தும் நாம் வயதாவதால் நடக்கின்றன.
 
"ஃப்ளூ தடுப்பு மருந்துகளாக இருக்கும் போது, 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் உடல் தடுப்பு மருந்துக்கு சாதகமான எதிர்வினையாற்றாது" என்கிறார் ஷாய் ஷென் ஆர்.
 
வயது அதிகரிக்கும் போது ரத்தம் மற்றும் திசுக்களில் வீக்கம் அதிகரிக்கிறது. இதை விஞ்ஞானிகள் Inflammaging (inflammation மற்றும் ageing என்கிற இரு வார்த்தைகளைச் சேர்த்த புதிய சொல்) என்கிறார்கள்.
 
 
நமது நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உடலை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்
 
"நோயெதிர்ப்பு மண்டலத்தின் செல்கள் சிறப்பாக செயல்படாததோடு, வீக்கத்தை ஏற்படுத்தும். இந்த வீக்கம் பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும்" என்கிறார் பேராசிரியர் லார்ட்.
 
"நாம் வயதாகும் போது இந்த மாற்றங்கள் எல்லாம் சேர்ந்து, ஒரு நோய் தொற்றில் இருந்தோ அல்லது காயத்தில் இருந்தோ மீள்வதை சிரமமாக்குகிறது. சில நோய் தொற்றுகள் நீண்ட காலத்துக்கு நம் உடலில் இருக்கலாம்" என பிபிசியிடம் கூறுகிறார் கலிஃபோர்னிய பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் என்கார்னாசியன் மான்டசினோ.
 
ஹெர்பெஸ் ஜோஸ்டர் அல்லது காசநோய் போன்ற கட்டுப்பாட்டில் இருந்த நோய்த்தொற்றுகள் மீண்டும் தோன்றலாம். இது புதிய பேத்தோஜென்களுக்கான பாதிப்பு மற்றும் புற்றுநோயின் பாதிப்பை அதிகரிக்கிறது.
 
எப்போதும் வயது குறித்த கேள்வி அல்ல இது
நாம் அனைவரின் உடலும் சீரழிவைச் சந்தித்தாலும், வருடங்கள் கடந்து செல்லும்போது அதன் பாதையை முன் கூட்டியே பார்க்கக் கூடியதாக இருக்கிறது. ஒவ்வொரு தனி நபரும் அதன் வழியாக செல்லும் விகிதம் மிகப்பெரிய அளவில் வேறுபடுகிறது.
 
இந்த செயல்முறை மரபியலால் பாதிக்கப்படுகிறது, ஒரு பெரிய அளவிற்கு நம் வாழ்க்கை முறையும் காரணம்.
 
சமீப காலம் வரை, நமது நோயெதிர்ப்பு வயதை தீர்மானிக்க முடியவில்லை.
 
நடை பயிற்சி போன்ற இலகுவான உடல் செயல்பாடுகள் கூட நோய் எதிர்ப்பு மண்டலத்தின் பாதிப்பை குறைக்க உதவுகின்றன
 
ஆனால் ஷென்-ஓர் மற்றும் அவரது குழு, அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, இந்த தகவலைப் பெறுவதற்கான ஒரு முறையை உருவாக்கியிருக்கிறார்கள். இது வெற்றிகரமான சிகிச்சைக்கு முக்கியமானதாக இருக்கும்.
 
"நோயெதிர்ப்பு மண்டலத்தின் 18 செல் வகைகளின் கலவையையும், இரத்த மாதிரியில் இருக்கும் மரபணுக்களின் வெளிப்பாட்டையும் ஆராய்வதன் மூலம், ஒரு நபரின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வயதைக் கண்டறிய முடியும்" என்று ஷென்-ஆர் விளக்குகிறார்.
 
நம் உடலின் செயல்பாடு குறையும் செயல்முறையின் வேகத்தில் உள்ள மாறுபாடு, பாலினத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது.
 
"இரு பாலினத்தவர்களுக்கும் வயதாகும். சில விஷயங்களில் பாலியல் ஹார்மோன்களின் குறிப்பிட்ட விளைவுகளால் ஆண்கள் மற்றும் பெண்களில் வெவ்வேறு அளவில் வயதாகின்றன" என யு.சி.எல்.ஏவின் மான்டசினோ கூறுகிறார்.
 
பெண்களின் உடலில், மாதவிடாய் நின்ற பிறகு ஈஸ்ட்ரோஜன் பாதுகாப்பு விளைவுகளை சமன் செய்கிறது. இது பெண்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் நன்மை பயக்கும் என்று அறியப்படுகிறது.
 
சுறுசுறுப்பாக இருங்கள்
 
இந்த கட்டுரையின் தொடக்கத்தில் நாம் குறிப்பிட்டது போல, வயதான செயல்முறையை நம்மால் குறைக்க முடியும்.
 
அதற்கு முக்கியமாக உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.
 
நீண்ட நேரம் அமர்ந்திருப்பது "புதிய புகைபிடித்தல்" போன்றதற்கு ஒப்பாகும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்
 
"இன்று, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, முன்பு புகைபிடித்ததற்குச் சமம். வாழ்நாள் முழுவதும் தங்களின் முதுமை காலம் வரை சுறுசுறுப்பாக இருந்தவர்களுடனான ஆய்வுகளின் முடிவுகள் சிறப்பாக இருந்தன. அவர்கள் உடலில் நிறைய டி செல்கள் இருந்தன, தைமஸ் சுருங்கவில்லை" என்கிறார் ஜேனட் லார்ட்.
 
"ஒரு நாளைக்கு 10,000 அடி நடப்பவர்களின் உடலில் நியூட்ரோஃபில்ஸ் 20 வயதுடையவர்களைப் போலவே இருக்கிறது என மற்றொரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நாம் நடக்கும் அடிகளின் எண்ணிக்கையை அளவிடும் சாதனங்களை விற்கும் நிறுவனங்களின் கண்டுபிடிப்பு தான் இந்த எண் என நான் நினைத்தேன், ஆனால் நாங்கள் ஆய்வு செய்தபோது நான் முற்றிலும் ஆச்சரியப்பட்டேன்" என ஒப்புக்கொள்கிறார் ஜேனட் லார்ட்.
 
"வல்லுநர்கள் கூறுகையில், டிப்டோக்கள், படிக்கட்டுகளில் ஏறுதல் மற்றும் கைகளால் கொஞ்சம் எடையைத் தூக்குவது போன்ற எளிய பயிற்சிகளைச் செய்வது ஒரு நல்ல தொடக்கம், ஏதாவது செய்யுங்கள். நீங்கள் செய்யக்கூடிய எதுவும் உதவும்" என்றார் ஜேனட்.
 
சத்தான உணவு, நார்ச்சத்து நிறைந்த, புளித்த உணவுகள் மற்றும் கொஞ்சம் சிவப்பு இறைச்சி குடல் மைக்ரோபயோட்டாவின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். அதோடு ஒவ்வொரு இரவும் ஆறரை அல்லது ஏழு மணி நேரம் தூக்கம் இதற்கு உதவும்.
 
மீண்டும் பழைய நிலைக்கு வருவது
 
பர்மிங்காம் ஆய்வுகளில் ஒன்று, தொடர்ந்து சுறுசுறுப்பாக இருக்கும் வயதான சைக்கிள் ஓட்டிகளுக்கு மிகவும் இளைய நபரைப் போன்ற நோய் எதிர்ப்பு அமைப்பு இருப்பதைக் காட்டியது
 
கடந்த ஆண்டு, யு.சி.எல்.ஏ-வின் ஆராய்ச்சியாளர்கள் நேச்சர் என்கிற அறிவியல் சஞ்சிகையில் ஒர் ஆய்வை வெளியிட்டனர். அதில் மூன்று பொதுவான மருந்துகளின் காக்டெய்ல் (வளர்ச்சி ஹார்மோன் மற்றும் இரண்டு நீரிழிவு மருந்துகள்) ஒன்பது தன்னார்வலர்களுக்குச் செலுத்தப்பட்டது. அக்குழுவினரின் உயிரியல் வயதிலிருந்து சராசரியாக 2.5 ஆண்டுகள் குறைவானவர்கள். இவர்கள் அனைவரும் 51 முதல் 65 வயது வரையிலான வெள்ளையின ஆண்கள்.
 
"இந்த ஆராய்ச்சியில் பங்கெடுத்த ஒன்பது பேரில், ஏழு பேரின் நோய் எதிர்ப்பு மண்டலம் மற்றும் தைமஸ் திசு உட்பட புத்துணர்வடைந்திருப்பதாகக் காட்டியுள்ளன" என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
 
தன்னுடைய குழு பணிபுரியும் ஒரு மருந்தைக் குறிப்பிடுகிறார் ஷென்-ஆர். ஆனால் அதன் சோதனை முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த மருந்தால் தலைகீழ் மாற்றம் சாத்தியம் என்பதைக் காட்டுகிறது.
 
"நோயெதிர்ப்பு மண்டலத்தில் வயது குறைவதை நாங்கள் கண்டோம், ஆனால் இது நிரந்தரமாக பராமரிக்கப்படுமா என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை," என்கிறார்.
 
ஆனால் மோசமடையும் வேகத்தைக் குறைப்பது கூட, நம் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஒரு முக்கியமான படியாக இருக்கலாம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்