'நித்தியானந்தா ஆசிரமத்தில் விருப்பப்பட்டுதான் தங்குகிறேன்' - சீடர் வாக்குமூலம்

செவ்வாய், 7 ஜனவரி 2020 (12:21 IST)
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
 
தினமணி: "நித்தியானந்தா ஆசிரமத்தில் விருப்பப்பட்டுதான் தங்குகிறேன்"
கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் தனது சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே தங்கியுள்ளதாக, நித்தியானந்தாவின் சீடரான பிராணானந்தா கூறியதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
சென்னை உயா்நீதிமன்றத்தில் ஈரோட்டைச் சேர்ந்த அங்குலட்சுமி தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனுவில், "கா்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் பல் மருத்துவரான எனது மகன் கடந்த 2003-ஆம் ஆண்டு சோ்ந்தார். அங்கு எனது மகனுக்கு பிராணானந்தா என பெயா் சூட்டப்பட்டுள்ளது. அண்மையில் கா்நாடகத்தில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் உள்ள சீடர்கள் சிலர் தாக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, எனது மகனைச் சந்திக்க ஆசிரமத்துக்கு நான் சென்றேன். ஆனால் எனது மகனைச் சந்திக்க அவர்கள் அனுமதிக்கவில்லை. எனவே ஆசிரமத்தில் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள எனது மகனை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
 
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பிராணானந்தாவை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது பிராணானந்தா, தனது விருப்பத்தின் அடிப்படையிலேயே நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் தங்கியிருப்பதாகவும், அங்கு இருக்கும்படி யாரும் தன்னை கட்டாயப்படுத்தவோ, சட்டவிரோதமாக பிடித்து வைக்கவோ இல்லை எனவும் தெரிவித்தார். இதனைப்பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மகனை மீட்டுத் தரக் கோரி பிராணானந்தாவின் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனார்.
 
சூரியன் உதிப்பதை நிறுத்தியதாக கூறிய நித்தியானந்தா தலைமறைவாக இருப்பது ஏன்?
நித்யானந்தா அறிவித்த புது நாடு ‘கைலாசா’ - கொடி, துறைகளும் அறிவிப்பு
தினமலர்: நாடக மேடையாகும் சட்டசபை - ஸ்டாலின்
'கவர்னர் உரையில் சொல்வதற்கு உருப்படியாக ஒன்றுமில்லை; சட்டசபையை நாடக மேடை ஆக்குவதை நிறுத்துங்கள்' என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்ததாக கூறுகிறது தினமலர் நாளிதழ் செய்தி.
 
2020ம் ஆண்டின் தமிழக சட்டசபையில் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் இன்று (ஜன.,06) காலை துவங்கியது. அப்போது குறுக்கிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், கவர்னருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் பேச அனுமதி அளிக்கப்படாததால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
 
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் பதிவிட்ட டுவிட்டர் பதிவில் கவர்னர் உரையின் 56 பக்கத்தையும் திருப்பிப் பார்த்தேன். அதில் சொல்வதற்கு உருப்படியாக ஒன்றுமில்லை. எடப்பாடி பழனிசாமி எழுதிக் கொடுத்த சுயபுராணத்தை கவர்னர் வாசித்திருக்கிறார். இது கவர்னர் உரையல்ல. ஆளும்கட்சியின் உரை. நல்ல நகைச்சுவை உரை. சட்டசபையையும் நாடக மேடை ஆக்குவதை நிறுத்துங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளதாக மேலும் அச்செய்தி விவரிக்கிறது.
 
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா: 2010 - 2019 இந்தியாவின் வெப்பம் மிகுந்த தசாப்தம்
புவி வெப்பமயமாவதின் விளைவுகள் இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. 2010 - 2019 தசாப்தம்தான் இந்தியாவின் இதுவரை வெப்பம் மிகுந்த தசாப்தம் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
"புவி வெப்பமயமாவதின் விளைவுகளை இந்தியாவில் கண்கூடாக பார்க்க முடிகிறது. 2019 அதிக வெப்பம் மற்றும் அதிக மழை என்று இரு தீவிர காலநிலைகளையும் பார்த்ததே இதற்கு உதாரணம்," என இந்திய வானிலை மையத்தின் தலைவர் ம்ருத்யுன்ஜெய் மொஹபத்ரா கூறியுள்ளார்.
 
2016தான் இந்தியாவின் வெப்பம் மிகுந்த ஆண்டாக பதிவாகியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்