ஒற்றைத் தலைவலி வருவது எதனால்?

செவ்வாய், 24 ஜூலை 2018 (12:55 IST)
ஒரு நாள் பள்ளிக்கு சென்றுவிட்டு திரும்பியபோதுதான் மைக்ரேன் தலைவலியை உணர்ந்தேன். ஆரம்பத்தில் இருந்த லேசான வலி பின்னர் மண்டையை பிளக்க தொடங்கியது. கண் பார்வைகூட மங்கலாகிவிட்டது.படுக்கையறை விளக்குகூட வலி தருவதாக மாறிவிட்டது. பின்னர் வாந்தி வந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த வலியை எண்ணற்ற முறை உணர்ந்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் வலி பொறுக்க முடியாமல் வேலையையே விட்டுவிட்டேன்.

மைக்ரேன் தாக்குதலை சமாளிப்பதும் ஒரு தலைவலி ஆகவே இருந்தது. சாதாரண தலைவலியை ஒன்று அல்லது இரண்டு பாராசிட்டமால் மாத்திரைகள் மூலம் சமாளிக்க முடியும். ஆனால மைக்ரேன் தலைவலி மிகக் கடுமையானது.

இவ்வகை தலைவலிக்கு உறுதியான காரணங்கள் தெரியவில்லை. ஹார்மோன் பிரச்சனை அல்லது மூளையின் அசாதாரண செயல்பாடு இதற்கு காரணமாக இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. 1990 முதல்2016 வரை ஒவ்வொரு ஆண்டும் மக்களின் ஆரோக்கியம் குறித்து 195 நாடுகளில் ஆய்வு செய்யப்பட்டது. மக்களை அதிகமாக பாதிக்கும் இரண்டாவது பெரிய பிரச்சனையாக தொடர்ந்து மைக்ரேன் திகழ்வது இதில் தெரிய வந்தது. இது உலகின் முன்னணி மருத்துவ ஆய்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

மைக்ரேன் காரணமாக ஆண்டுக்கு இரண்டரை கோடி நாட்கள் பிரிட்டனில் மட்டும் மருத்துவ விடுப்பாக எடுக்கப்படுகிறது. உடல் அளவிலும் பொருளாதார அளவிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய மைக்ரேனுக்கு மற்ற நோய்களுடன் ஒப்பீட்டளவில் குறைவான தொகையே ஆய்வுக்கு ஒதுக்கப்படுகிறது.

மைக்ரேன் பிரச்னை ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது. 15 ஆண்களில் ஒருவரும் 5 பெண்களில் ஒருவரும் மைக்ரேனால் பாதிக்கப்படுகிறார். இந்த வித்தியாசத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து 2018ம் ஆண்டு அரிசோனா பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதிக ஈஸ்ட்ரோஜன் அளவுக்கும் குறைவான சோடியம் புரோட்டான் எக்ஸ்சேஞ்சர் NHE1 அளவுக்கும் உள்ள தொடர்பே இந்த மாறுபாட்டிற்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


NHE1 அளவு போதுமான அளவு இல்லாவிட்டால் வலியின் தீவிரம் அதிகமாக இருக்கும். பாலியல் ஹார்மோன் அளவில் ஏற்படக்கூடிய பெரும் ஏற்றத்தாழ்வுகள் NHE1ல் அளவில் மாறுபாட்டை ஏற்படுத்துகின்றன எனவும் இதுவே பெண்களை மைக்ரேன் அதிகம் பாதிக்க காரணம் என்று கூறுகிறார் ஆராய்ச்சியாளர் எமிலி கேலோவே.

மற்ற உடல் நல பிரச்னைகளை விட மைக்ரேன் குறைவாகவே ஆராயப்பட்டிருக்கிறது. அதற்காக ஒதுக்கப்படும் நிதியின் அளவும் குறைவு. பெரிய அளவில் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தும் இப்பிரச்னைக்கு அதற்கேற்ப நிதி ஒதுக்கப்படுவதில்லை. ஐரோப்பாவில் மற்ற எந்த நரம்பியல் பிரச்னை தொடர்பான ஆய்வுகளை விடவும் மைக்ரேன் ஆய்வுக்கு குறைவான பணமே ஒதுக்கப்படுகிறது.

அமெரிக்காவில் 15% மக்கள் மைக்ரேனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதற்கு 2017ல் 2.2 கோடி டாலர் மட்டுமே ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்பட்டது. மைக்ரேனுடன் ஒப்பிடுகையில் பாதி பேரை மட்டுமே பாதிக்கும் ஆஸ்துமாவுக்கு இதை விட 13 மடங்கு(28.6 கோடி டாலர்) ஒதுக்கப்பட்டுள்ளது. 3ல் 2 பங்கு பேரை பாதிக்கும் சர்க்கரை நோய்க்கு 50 மடங்கு தொகை ஒதுக்கப்படுகிறது. (1,100 கோடி டாலர்). ஆனால் ஆஸ்துமாவும் சர்க்கரை நோயும் உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரேனால் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டாலும் ஆண்களை மையமாக வைத்தே இதற்கான ஆய்வுகள் அதிகம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மைக்ரேன் பாதிக்கப்பட்ட பெண்கள் நிபுணர்களால் புறக்கணிக்கபடுவது தெரியவருகிறது.


தலை வரலாறு
மனித குலத்தை பாதித்து வரும் பழமையான பாதிப்புகளில் மைக்ரேனும் ஒன்று. 1200 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான எகிப்தியர் எழுத்துப்படிவங்களில் மைக்ரேன் போன்றதொரு தலைவலி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

மைக்ரேனுடன் தொடர்புள்ள பார்வை மங்கல் குறித்தும் வாந்தி குறித்தும் ஹிப்போக்ரட்டஸ் கூறியுள்ளார்.

ஆனால் மைக்ரேனை முதன்முதலில் கண்டுபிடித்தவர் என்ற பெயர் கிரேக்க மருத்துவர் ஏரிட்டஸ் ஆஃப் கப்படோசியாவுக்கே உண்டு. ஒரு புறம் மட்டும் வலிக்கும் தலைவலியை 2ம் நூற்றாண்டில் இவர் கண்டறிந்தார். உண்மையில் மைக்ரேன் என்ற வார்த்தையே ஹெமிக்ரேனியா என்ற கிரேக்கச் சொல்லில் இருந்துதான் உருவானது.

ஹெமிக்ரேனியா என்றால் பாதி மண்டை ஓடு என பொருள். இப்பிரச்னைக்கு இடைக்காலங்களில் பல சிகிச்சைகள் உண்டு. முன் மண்டையில் துளையிட்டு அதில் பூண்டுப்பல் இரண்டையும் சேர்த்து திணித்தால் மைக்ரேன் நீங்கும் என்பது ஒரு நம்பிக்கை.

மைக்ரேன் ஏன் வருகிறது, என்ன சிகிச்சை என்பது குறித்து வரலாற்று காலங்களில் நிறைய மூட நம்பிக்கைகள் இருந்தன. மண்டையில் துளையிடுவது மூலம் அதனுள் உள்ள தீய சக்தியை வெளியேற்றி மைக்ரேனுக்கு தீர்வு காண முடியும் என்ற கொடூர நம்பிக்கை இருந்தது.

மைக்ரேனால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவது 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் மைக்ரேன் ஏற்பட மன நிலையே காரணம் என நம்பினர் அப்போதைய மருத்துவர்கள். கடினமான பணி, அடிக்கடி பாலூட்டுவது, ஊட்டச்சத்து குறைவு போன்றவற்றால் மனம் பலவீனமடைந்து மைக்ரேன் வருவதாக அவர்கள். நம்பினர்.

நவீன கால வசதிகளால் புத்திசாலி உயர் தட்டு மக்களுக்கு ஏற்படும் உடல் கோளாறே மைக்ரேன் என நீண்ட காலமாக கருதப்பட்டு வந்தது என்கிறார் ஜோன்னா கெம்ப்னர். இவர் ரட்கர்ஸ் பல்கலைகலகழகத்தின் சமூகவியல் பேராசிரியர் ஆவார்.

மைக்ரேன் நோயாளிகளில் ஆண்,பெண் இடையே உள்ள தனித்துவமிக்க வித்தியாசங்கள் குறித்து கண்டறிந்துள்ளார் அமெரிக்க நரம்பியல் நிபுணர் ஹரால்டு ஜி வால்ஃப். நவீன கால தலைவலி மருந்தியலின் தந்தை என இவர் அறியப்படிகிறார்.

இவரைப் பொறுத்தவரை ஆண்கள் இலக்கு சார்ந்தவர்கள்... வெற்றிகரமானவர்கள்... களைப்படையும் போது மட்டும் இவர்களுக்கு மைக்ரேன் வரும். பெண்கள் தங்களுக்கான பொறுப்புகளை ஏற்பதில் திறனற்று இருப்பதால் மைக்ரேன் வருவதாக கருதுகிறார் வால்ஃப். குறிப்பாக பாலுறவு என வரும்போது இவ்வாறு நிகழ்கிறது என்கிறார் அவர். தன்னிடம் வரும் பெண் நோயாளிகள் பாலுறவு என்பதை அர்த்தமுள்ள திருமணக் கடமை என கருதுவதாக தெரிவிக்கிறார் வால்ஃப். சில சமயங்களில் மட்டும் பாலுறவை விரும்பத்தகாதது ஆக இத்தகைய பெண்கள் கருதுகின்றனர் என்கிறார் அவர்.

20 ம் நூற்றாண்டு இறுதியில் மைக்ரேன் என்பது இல்லத்தரசிகளின் பிரிக்கமுடியாத அம்சமாகிவிட்டது என்கிறார் கெம்ப்னர். சில தகவல் களஞ்சியங்களில் மைக்ரேன் என்பதை வாழ்க்கைத் துணை என்றே கூறுமளவுக்கு நிலைமை சென்றுவிட்டது.


மனதுதான் காரணம்...
தலைவலி பிரச்னைக்கும் மன ஆரோக்கியத்துக்கும் தொடர்பு இருப்பதை மறுக்க இயலாது. இதை சில ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

மைக்ரேனுக்கும் bipolar disorder எனப்படும் இரு துருவ மனச்சோர்வுக்கும் ஆழமான தொடர்புகள் இருப்பதை 2016ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. மைக்ரேன் உள்ளவர்களுக்கு பதட்டம் சார்ந்த மன நல பிரச்னை வருவதற்கு இரண்டரை மடங்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

மன அழுத்த பிரச்னை இருப்பவர்களுக்கு மைக்ரேன் வாய்ப்புகள் மும்மடங்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. மைக்ரேனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஆறு பேரிலும் ஒருவருக்கு வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்திலாவது தற்கொலை எண்ணம் வந்ததாக கூறியுள்ளனர்.


(பொதுவான மக்களில் பத்தில் ஒருவர் தங்களுக்கு தற்கொலை எண்ணம் வந்திருப்பதாக கூறியுள்ளனர்)

ஆனால் இது சாதாரணமான ஒன்றா என்பது பெரிய கேள்வி என்கிறார் நரம்பியல் பேராசிரியர் மெசூத் ஆஷினா. இவர் டேனிஷ் தலைவலி மையத்தின் ஒரு பிரிவான மைக்ரேன் ஆராய்ச்சி பிரிவின் இயக்குநராகவும் உள்ளார்.

நீங்கள் மைக்ரேனால் பாதிக்கப்பட்டிருந்தால் அதனுடன் மற்ற நோய்களும் சேர்ந்துகொள்ளும் என்கிறார் ஆஷினா.

மைக்ரேனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலி குடும்ப வாழ்க்கையிலும் பணியிலும் பாதிப்பை ஏற்படுத்தி பதட்ட மன நிலை அதிகப்படுத்துவதில் ஆச்சரியமில்லை என்கிறார் எஸ்மி ஃபுல்லர் தாம்ஸன். இவர் டொரோன்டோ பல்கலைக்கழகத்தில் மைக்ரேன் - தற்கொலை இடையிலான தொடர்புகளை ஆய்வு செய்து வருகிறார்.

உலக மக்கள் தொகையில் கணிசமானோரை மைக்ரேன் பாதித்துள்ள நிலையில் அது குறித்த புரிதலும் ஆய்வுகளும் குறைவாகவே உள்ளன. நரம்பியல் துறையிலும் சமூகத்திலும் பலர் மைக்ரேனை ஆபத்தற்ற நோயாகவே பார்க்கின்றனர்.

இது ஒன்றும் பார்க்கின்சன் நோயல்ல...புற்று நோயல்ல என அவர்கள் கருதுகிறார்கள் என்கிறார் பேராசிரியர் ஆஷினா.

ஆனால் தனி நபர் அளவிலும் சமூக அளவிலும் அது ஏற்படுத்தும் விளைவுகள் தீவிரமானவை என்கிறார் ஆஷினா. சில நிபுணர்கள் இதை உண்மையான நரம்பியல் பிரச்னையாகவே பார்ப்பதில்லை என்கிறார் மால் ஸ்டார்லிங். இவர் அரிசோனாவின் ஸ்காட்ஸ்டேலில் உள்ள மாயோ கிளினிக்கில் நரம்பியல் துறை துணை பேராசிரியராக பணியாற்றுகிறார்.

மைக்ரேன் குறித்த குறைத்த மதிப்பிடப்பட்ட கண்ணோட்டத்தால் தலைவலி சிகிச்சை நிபுணர்கள் தங்கள் தொழிலை அங்கீகாரம் கொண்ட ஒன்றாக மாற்றுவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இதற்கான நிதியுதவி ஆடம்பரமானதல்ல...அத்தியாவசியமானது என பிறரை ஒப்புக்கொள்ள வைக்க போராட வேண்டியுள்ளது.

பொதுவான நிலை...

நரம்பியல் புறநோயாளிகளில் தலைவலி என்பது பொதுவாக காணக்கூடிய விஷயமாக உள்ளது. ஆனால் நரம்பியல் நிபுணர்கள் இப்பிரச்னையை பற்றி குறைவாகவே உணர்ந்துள்ளார்கள். இது ஒரு எலக்ட்ரீஷியனுக்கு மின்சார பல்பு பற்றி தெரியாதது போல் உள்ளது.

மைக்ரேன் நோயாளிகளுக்கு நல்வாய்ப்பாக ஒரு சிகிச்சை முறை பலன் தரும் போல் தெரிகிறது. எரிநுவாப் என்ற ஊசி மருந்தை மாதம் ஒரு போட்டுக்கொள்ள மருத்துவர்கள் ஆலோசனை தருகின்றனர். (இதே போன்ற ஒரு மருந்துக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை கடந்த மே மாதம் அனுமதி தந்திருந்தது).

இந்த புதுமையான மருந்து மைக்ரேன் நோயாளிகளுக்கு என்றே உருவாக்கப்பட்டது என்கிறார் ஸ்டார்லிங். வலியை குறைக்க கூடிய இம்மருந்து பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது என்றும் கூறுகிறார்.பீட்டா பிளாக்கர்ஸ் எனப்படும் இம்மருந்து நல்ல பலனளிப்பதாக அதை பயன்படுத்தி வரும் ஒரு நபர் கூறுகிறார். எனினும் இம்மருந்து களைப்புணர்வை மிகுதியாக ஏற்படுத்துவதுடன் திடீரென நிறுத்தினால் மாரடைப்புக்கும் இது காரணமாகிவிட வாய்ப்புள்ளது. மைக்ரேனுக்கு ஏற்கனவே மின்சாரம் மற்றும் காந்தம் மூலம் சிகிச்சை தருவதும் நடைமுறையில் உள்ளது. கையடக்க கருவி மூலம் மூளைக்குள் காந்த கதிர்வீச்சை செலுத்தினால் அது நரம்புகளை மின்னதிர்வுக்கு உட்படுத்தி வலியை குறைக்கும். இந்த வரிசையில் தற்போது வேறு பல மருந்துகளும் சேர்ந்துகொண்டுள்ளன.

ஆறு மாதம் பீட்டா பிளாக்கர்ஸை எடுத்துக்கொண்ட நிலையில் இந்த காலத்தில் மைக்ரேன் இல்லாமல் இருந்துள்ளேன். மருந்தே இல்லாமல் மைக்ரேனை தடுக்க வேண்டும் என்பது என் அடுத்த லட்சியம்.

ஆனால் அண்மையில் மீண்டும் மைக்ரேன் தாக்குதலுக்கு ஆளானேன். இதற்கிடையில் மாரடைப்புக்கான அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு பறந்தேன். ஆனால் நல்ல வேளையாக அது தவறான அறிகுறி என தெரியவந்தது. ஆனால் அந்நிகழ்வு என் அகக் கண்ணை திறந்தது என்றே கூற வேண்டும்.

உடலின் முக்கிய உறுப்புகளை மைக்ரேன் சிகிச்சை பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே அந்த விழிப்புணர்வு. அந்த நிலை மருத்துவ வானில் தொடுவான நிலையில் இருப்பதாக நம்பிக்கை உள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்