எய்ட்ஸ் மருத்துவம்: பதுங்கிய ஹெச் ஐ வி கிருமியை பிதுக்கிட புதிய வழி
புதன், 23 ஜூலை 2014 (12:06 IST)
எய்ட்ஸ் நோயை ஒழிப்பது சம்பந்தமான மருத்துவ ஆராய்ச்சியில் நம்பிக்கையூட்டும் ஒரு புதிய முன்னேற்றம் கிடைத்துள்ளது.
ஒரு நோயாளியின் உடலில் பதுங்கியிருக்கும் ஹெச் ஐ வி கிருமியை வலுக்கட்டாயமாக வெளியே வரவைப்பதற்கு வழிகண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஹெச் ஐ வி கிருமி ஒரு நபரின் மரபணுத் தொகுதியுடைய அங்கமாகவே ஆகிவிடுகிறது.பல ஆண்டுகள் அவரது உடலில் ஒன்றும் செய்யாமல் பதுங்கி இருந்துவிட்டு பிற்பாடு அது தலைதூக்குகின்ற ஒரு தன்மை இருக்கிறது. ஹெச் ஐ வி கிருமியை முழுமையாக அழிக்க முடியாததற்கு அதனுடைய இந்த தன்மையும் ஒரு காரணம்.
ஹெச் ஐ வி கிருமி மரபணுக்களில் ஒளிந்துகொண்டிருந்தவர்கள் ஆறு பேருக்கு, வீரியம் குறைவான கீமோதெரெபி கொடுத்தபோது அவர்களது உடலில் ஹெச் ஐ வி கிருமி விழித்துக்கொள்வதை அவதானிக்க முடிந்தது என்று இவ்வருடத்தின் உலக எய்ட்ஸ் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பு ஊக்கமளிக்கும் ஒரு ஆரம்பம் என்றாலும், இதனைப் பயன்படுத்தி ஹெச் ஐ வி கிருமியை அழிக்க வழிதேட வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
எய்ட்ஸ் நோயாளிகள் நோய்ப் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தவல்ல அண்டி வைரல் மருந்துகளை உட்கொள்ளும்போது, அவர்களது இரத்தத்தில் ஹெச் ஐ வி கிருமிகளின் எண்ணிக்கை, கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு குறைந்து போய்விடுகிறது. எனவே அவர்கள் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ முடியும்.
ஆனால் ஹெச் ஐ வி கிருமியானது அந்நபருடைய மரபணுக்குள் சென்று தனது மரபணுவை புகுத்திக்கொள்கிறது என்பதே பிரச்சினை.
மருந்துகளாலோ, அந்நபருடைய நோய் எதிர்ப்பு தொகுதியாலோ அடைய முடியாத ஒரு இடத்தில்போய் இக்கிருமி பதுங்கிக்கொள்கிறது என்று சொல்லலாம்.
அப்படிப் பதுங்கிக்கொள்ளும் கிருமி, மருந்து சாப்பிடுவதை நிறுத்திவிட்டால், வெளியில் வந்து தனது வேலையைக் காட்டும்.
தற்போது புற்றுநோயாளர்களுக்கு கொடுக்கப்படும் கீமோதெரெபி சிகிச்சை மருந்தான ரோமிடெப்ஸினை சில எய்ட்ஸ் நோயாளிகளிடம் கொடுத்தபோது, பதுங்கியிருந்த ஹெச் ஐ வி கிருமிகள் மீண்டும் அவர்களின் இரத்தத்தில் தென்பட்டன.
இந்த மருந்து கொடுப்பதால் பதுங்கியுள்ள ஹெச் ஐ வி மொத்தமும் வெளிவந்துவிடுமா, அப்படி வெளியான கிருமியை அடியோடு அழிப்பது எப்படி என்பதையெல்லாம் தொடர்ந்து ஆராய வேண்டுமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.