தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனிடையே விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளமாக சூழ்ந்தது. மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தளாவானுர் தடுப்பணையில் மதகு உடைந்ததால், தடுப்பணையில் நீர் சேகரிக்க முடியாமல் வெளியேறியது.
இதனை தொடர்ந்து விழுப்புரம் மரக்காணம் அடுத்த வண்டிப்பாளையம் மற்றும் அனுமந்தை ஆகிய கிராமங்களுக்கு இடையில் கழுவெளி பகுதியில் தரைப் பாலம் அமைந்துள்ளது. இந்த தரைப்பாலமானது வண்டிப்பாளையம் கிராமத்தை அடுத்த ஓமிப்பேர், நடுகுப்பம், கிளாப்பாக்கம், நாணக்கால் மேடு ஆகிய கிராமங்களையும், அனுமந்தை அடுத்த ஆட்சிப்பாக்கம், ஊரணி, பாலக்காடு, ஆத்திக்குப்பம், கீழ் பேட்டை, செட்டி நகர், செட்டி குப்பம், செய்யங்குப்பம்ஆகிய கிராமங்களை இணைக்கும் முக்கிய தரைப்பாலமாக இது தரைப்பாலம் அமைந்துள்ளது.
தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக இந்த தரைப்பாலம் வெள்ள நீரால் மூழ்கி உள்ளது.இதனால் அந்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள் 20 கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு நகரத்திற்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக தரைப்பாலத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க பொதுமக்கள் சார்பில் பல்வேறு முறை கோரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.