ஹாத்ரஸ் சாமியார்: பாலியல் புகாருக்கு உள்ளான போலீஸ் காவலர், 'போலே பாபா'வாக உருவானது எப்படி?

Prasanth Karthick

புதன், 3 ஜூலை 2024 (14:57 IST)
உத்தரப்பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டம் புல்ராய் கிராமத்தில் சாமியாரின் சொற்பொழிவு, வழிபாட்டு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர்.



இந்த சொற்பொழிவு, வழிபாட்டு நிகழ்ச்சி யாரால் ஒருங்கிணைக்கப்பட்டது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது?

நாராயண் சாகர் ஹரி என்ற சாமியாரால் நடத்தப்பட்ட சொற்பொழிவுக் கூட்டம் இது. இந்த நிகழ்ச்சியின் அறிவிப்பு குறித்து ஹாத்ராஸின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.

மக்கள் இந்த சாமியாரை போலே பாபா என்றும் விஷ்வ ஹரி என்றும் அழைக்கின்றார்கள்.
செவ்வாய் அன்று நடைபெற்ற இந்த ’மானவ் மங்கள் மிலான்’ என்ற வழிபாட்டு நிகழ்ச்சியை ’மானவ் மங்கள் மிலான் சத்பவன சம்மேளன சமிதி’ ஒருங்கிணைத்தது.

இது ஆறு நபர்கள் அடங்கிய குழுவாகும். ஆனால் தற்போது அவர்களின் மொபைல் போன்கள் அனைத்தும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினரால் அவர்களை அணுக இயலவில்லை.

ஒருங்கிணைப்பு குழுவினர் மற்றும் நாராயண் சாகர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அலிகார் ஐ.ஜி ஷலாப் மாதூர் தெரிவித்தார்.

"அவர்களை தேடி வருகின்றோம். மொபைல் போன்கள் அனைத்தும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் பற்றிய முழுமையான விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை," என அவர் குறிப்பிட்டார்

திரைப்படக் கதையை போன்ற வாழ்க்கை

நாராயண் சாகரின் ஆன்மீக வாழ்க்கை ஒரு திரைப்படக் கதையை போன்றது.



இந்த சாமியாரின் இயற்பெயர் சூரஜ்பால் ஜாதவ். உத்தரப்பிரதேச காவல்துறையில் காவலராக பணியாற்றிய அவர் பின்னர் ஆன்மீக பாதையை தேர்வு செய்தார். மிக குறுகிய காலத்தில் அவரை லட்சக்கணக்கான பக்தர்கள் பின்தொடர துவங்கினர்.

ஈட்டா மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட காஸ்கஞ் மாவட்டம் பதியாலியில் உள்ள பஹதூர்பூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர்தான் இந்த சாமியார்.

உத்தரப்பிரதேச மாநில காவல்துறையின் கீழ் செயல்பட்டு வந்த உள்ளூர் உளவுத்துறை பிரிவில் பணியாற்றி வந்த அவர், 28 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு சிறை சென்ற அவர் பணி நீக்கமும் செய்யப்பட்டார்.

ஆனால், அதற்கு முன்பு சூரஜ்பால் ஜாதவ் 18 காவல் நிலையங்களிலும், உள்ளூர் உளவுத்துறை பிரிவிலும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சூரஜ்பால் நீண்ட நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்து வெளிவந்த பிறகு அவர் மக்கள் முன்னிலையில் தன்னை ஒரு மத தலைவராக முன்னிறுத்திக் கொண்டார் என்று குறிப்பிடுகிறார் ஈட்டாவின் முன்னாள் மூத்த காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார்.

காவல்துறையில் இருந்து வெளியேறும் முடிவு

பணி நீக்கம் செய்யப்பட்ட சூரஜ்பால் நீதிமன்றத்தை நாடி காவல்துறையில் மீண்டும் இணைந்தார்.

ஆனால் 2002ம் ஆண்டு ஆக்ராவில் பணியாற்றிக் கொண்டிருந்த சூரஜ்பால் விருப்ப ஓய்வு பெற்றதாக கூறப்படுகிறது.

ஓய்வு பெற்று அவருடைய கிராமமான பஹதூர்பூரில் தங்கியிருந்த சூரஜ்பால், சில நாட்கள் கழித்துதான் கடவுளிடம் பேச ஆரம்பித்ததாக கூறினார். பின்பு அவர் போலே பாபாவாக தன்னை மாற்றிக் கொண்டார்.

சில ஆண்டுகளில் அவரை பின் தொடர்ந்த பக்தர்கள் அவரை பல்வேறு பெயர்களில் அழைத்தனர்.

பெரிய அளவில் மத சொற்பொழிவு நிகழ்ச்சிகளை அவர் நடத்த அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க ஆரம்பித்தனர்.

75 வயதான சூரஜ்பாலுக்கு மூன்று சகோதரர்கள் இருப்பதாக குறிப்பிடுகிறார் மூத்த காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார்.

மூத்தவர் சூரஜ்பால். இரண்டாவது பகவான் தாஸ். அவர் தற்போது உயிருடன் இல்லை.

மூன்றாவதாக பிறந்த ராகேஷ் குமார், ஒரு கிராம தலைவராக பல ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்ததாக சஞ்சய் குமார் தெரிவிக்கிறார்.

சூரஜ்பால் முன்பு போல் அடிக்கடி அவரின் கிராமத்திற்கு செல்வதில்லை என்றாலும், அவரின் சேவை நடவடிக்கைகள் அந்த கிராமத்தில் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

அரசுப் பணியில் இருந்து தன்னை இந்த உயரத்திற்கு அழைத்து வந்தது யார் என தெரியவில்லை என்று அடிக்கடி தன்னுடைய மத சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் சூரஜ்பால் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்கொடைகள் இல்லாமல் இயங்கும் ஆசிரமங்கள்

சூரஜ்பால் தன்னுடைய பக்தர்கள் உட்பட யாரிடமும் நன்கொடைகள் வாங்குவதில்லை. இருப்பினும் அவர் பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை நடத்தி வருகிறார்.

உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் அவருக்கு சொந்தமான நிலத்தில் ஆசிரமங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவருடைய மதசொற்பொழிவை காண வரும் பக்தர்களுக்கு அவர் பல்வேறு தருணங்களில் சேவை செய்து வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற இவர் வேண்டுமென்றே இதனை செய்திருக்கலாம்.

வெள்ளை நிற உடைகளையே அதிகமாக அணியும் அவர் தன்னுடைய நிகழ்ச்சிகளுக்கு குர்தா, சட்டை மற்றும் மேற்கத்திய ஆடைகளை அணிந்து வருவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் அத்தனை பிரபலமான நபராக இவர் இருக்கவில்லை என்பது குறிப்பித்தக்கது. சமூக வலைதளங்களில் அவரை பின் தொடரும் நபர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர்.

இருப்பினும் நிஜ வாழ்க்கையில் அவரை லட்சக்கணக்கான நபர்கள் பின்பற்றி வருகிறனர். ஒவ்வொரு சொற்பொழிவு நிகழ்ச்சியையும் காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிகின்றனர்.

இது போன்ற நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தாமாக முன்வந்து சேவை செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்த பக்தர்கள் குழுவும், நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் போதுமான உணவு, நீர் கிடைப்பதை உறுதி செய்வதோடு, போக்குவரத்து நெரிசலையும் கட்டுக்குள் வைத்திருப்பார்கள்.

உ.பி. காவல்துறையில் சர்கிள் ஆபிசராக இருந்து ஓய்வு பெற்ற ராம்நாத் சிங் யாதவ், "மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஈட்டாவின் கண்காட்சி மைதானத்தில் ஒரு மாதம் முழுவதும் இவரின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கே சலசலப்பு ஏற்பட்டது. அந்த மைதானத்திற்கு அருகே வசித்து வந்த மக்கள் மாவட்ட நிர்வாகிகளிடம், இனிமேல் சூரஜ்பாலின் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்," என்று கூறுகிறார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்