'திருகோணமலை 5 மாணவர் கொலைக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை'
ஞாயிறு, 3 ஜனவரி 2016 (15:04 IST)
இலங்கையின் கிழக்கே திருகோணமலை நகரில் ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலைச் சம்பவம் இடம்பெற்று, சனிக்கிழமையுடன் 10 ஆண்டுகளாகின்ற போதிலும் தங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்குமிடையில் உள்நாட்டு யுத்தம் உச்சமடைந்திருந்தவேளை இடம்பெற்றிருந்த இந்த சம்பமானது மிக மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஒன்று என உள் நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தொடர்ந்தும் பேசப்படுகின்றது.
சர்வதேச மன்னிப்பு சபை உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் இலங்கை அரசு மீது வன்மையான கண்டணத்தை அவ்வேளை வெளியிட்டிருந்தனர்.
ஐ.நா. மனித உரிமை பேரவையிலும் இந்தப் படுகொலை இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இடம்பெற்று விவாதிக்கப்பட்டிருந்தது.
திருகோணமலையிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவர்களான இவர்கள், பாடசாலை கல்வியை முடித்த பின்னர் பல்கலைக்கழக உயர் கல்விக்கான அனுமதியை எதிர்பர்த்திருந்தவர்கள் எனக் கூறப்படுகின்றது.
2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் தேதி மாலை திருகோணமலை கடற்கரை பகுதியில் பொழுது போக்குக்காக கூடியிருந்தவேளை இந்த மாணவர்கள் ஆட்டோவொன்றில் வந்த ஆயுததாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்டு காந்தி சிலை சுற்று வட்டத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கடந்த அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் 2006ம் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்த போதிலும் சர்வதேச ரீதியான அழுத்தங்கள் காரணமாக 7 வருடங்களின் பின்னரே அதாவது 2013ம் ஆண்டே சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த உதவி பொலிஸ் அத்தியட்சகரொருவர் உட்பட 12 பேர் குற்றப்புலனாயவுத் துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
இந்த படுகொலை தொடர்பான வழக்கு திருகோணமலை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தாலும் அநேகமான சாட்சிகள் தமது பாதுகாப்பு நிமித்தம் தற்போது நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக கூப்படுகின்றது.
தற்போது லண்டனில் வசித்துவரும் டாக்டர் காசிப்பிள்ளை மனோகரன் (கொல்லப்பட்ட மாணவரொருவரின் தந்தை) இலங்கையில் நடைபெறும் எந்தவொரு நீதிமன்ற விசாரணையிலும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என தொடர்ந்தும் வலியுறுத்தி கூறுகின்றார்.
2006 ஆண்டு இந்த சம்பவம் மட்டுமல்ல பிரெஞ்சு தன்னார்வ தொண்டர் நிறுவன பணியாளர்கள் கொலை உட்பட வேறு மனித உரிமை மீறல் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக திருகோணமலையிலுள்ள மூத்த பத்திரிகையாளரான திருமலை நவம் தெரிவிக்கின்றார்.
அரசியல் தீர்வுக்கு முன்னதாக இதுபோன்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.