யுக்ரேன் மீதான ரஷ்யா போர் - இது வரை நடந்தது என்ன?

சனி, 26 மார்ச் 2022 (15:04 IST)
யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பு நடத்தி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. இந்நிலையில், போரின் முதல் கட்டம் முடிவுக்கு வந்திருப்பதாக ரஷ்யா அரசு தெரிவித்துள்ளது. ஒரு மாதக் காலத்திற்கு மேல் நடந்த இந்த போரின் முக்கிய நிகழ்வுகளைப் பார்க்கலாம்.
 
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி, அதிகாலை யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இதனையடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதாகத் தெரிவித்தார்.
 
இந்த போர் தொடங்கியது முதல் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்துள்ளனர். யுக்ரேனில் 1,081 பேர் உயிரிழந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் உறுதி செய்துள்ளது. ஆனால், மேரியோபோல் அரங்கத்தில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் மட்டுமே 300 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், இதன் எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கலாம்.
 
யுக்ரேனிலும், அதை தாண்டியுள்ள எல்லை பகுதிகளிலும், 10 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர். யுக்ரேனில் இருந்து வெளி நாடுகளுக்கு சென்ற மக்களின் எண்ணிக்கை 3.7 மில்லியனுக்கு மேல் உள்ளது. இதில் போலாந்து நாட்டிற்கு 2.2 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
 
4 லட்சம் பேர் ரஷ்யாவுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு கூறுகிறது. ரஷ்யா-யுக்ரேன் போர் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இரு நாட்டு அதிபர்களிடம் வன்முறையை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். யுக்ரேனில் வசித்த 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை 90 விமானங்கள் கொண்டு இந்திய அரசு மீட்டது.
 
ரஷ்யா யுக்ரேனின் கார்ஹிவ் நகரம் மீது தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுள் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்ற இந்திய மாணவரும் ஒருவர்.
 
யுக்ரேனில் மருத்துவமனைகள், மருத்துவ ஊர்திகள் மற்றும் மருத்துவர்கள் மீது மட்டும் இதுவரை 70 தாக்குதல்களுக்கு மேல் நடத்திருப்பதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போதைய போர் சூழலில், சுகாதார வசதிகளை குறிவைத்து தாக்கும் போக்கு ஒரு போர் உத்தியாகவே உள்ளது என்று கூறப்படுகிறது.
 
ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதிலிருந்து இதுவரை 135 சிறார்கள் கொல்லப்பட்டுள்ளதாக யுக்ரேன் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், யுக்ரேன் நாட்டைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுவதாகவும், கட்டாயப்படுத்தி மறைந்து வாழச் செய்வதாகவும் பிபிசியின் ஐக்கிய நாடுகள் கூறியுள்ளது.
 
மார்ச் 3 ஆம் தேதி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் யுக்ரேனில் நடக்கும் போர்க் கால குற்றங்களை குறித்த விசாரணையைத் தொடங்கியது. போர் தொடர்பாக தனது முதல் கட்ட லட்சியங்கள் நிறைவேறிவிட்டதாகவும், யுக்ரேனில் தனது படைகளின் எண்ணிக்கையை குறைக்கவுள்ளதாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
அதே வேளையில், யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி ரஷ்யா மீது தீவிரமான பதிலடியை கொடுத்துள்ளதாகவும், அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தேவையை ரஷ்யாவுக்கு உணர்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்