பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட குப்பைகள்: அறிக்கை சமர்பிக்க உத்தரவு

புதன், 24 ஜூலை 2019 (19:22 IST)
பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள குப்பைகள் அடங்கிய கொள்கலன்கள் தொடர்பான அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்க சுங்கத் திணைக்களத்திற்கு இலங்கை அரசு அறிவுறுத்தியுள்ளது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர, சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு இந்த அறிவிப்பை வழங்கியுள்ளதாக நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுகாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கம் தீங்கு விளைவிக்கும் வகையிலான கழிவுப் பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டது மற்றும் அதற்கு பின்னர் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள குப்பைகள் அடங்கிய கொள்கலன்கள் தொடர்பாக பிரிட்டன் விசாரணைகளை தொடங்கியுள்ளதாக பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டெலிகிராம் செய்திச் சேவை தெரிவிக்கிறது.
 

குப்பைகள் அடங்கிய இந்த கொள்கலன்களில் பெருமளவு மெத்தைகள் உள்ளது விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு மெத்தைகளுக்குள் பிளாஸ்டிக் பொருட்கள், மருத்துவ கழிவுப் பொருட்கள், மிகவும் அபாயகரமான பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த குப்பை கொள்கலன்களுக்குள் மனித உடல் பாகங்களும் காணப்படுவது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த கொள்கலன்களை பிரிட்டனுக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் வலியுறுத்தியுள்ள நிலையிலேயே, பிரிட்டன் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் கொண்டு வரப்பட்ட 111 கொள்கலன்கள் இறக்கி வைக்கப்பட்ட கொழும்புத் துறைமுகத்தில் துர்நாற்றம் வீசியது குறித்து ஆராய்ந்தபோது இந்த விடயம் கண்டறியப்பட்டதாக கூறப்படுகின்றது.

பயன்படுத்தப்பட்ட பழைய மெத்தைகள் இறக்குமதி செய்யப்படுவதாக கூறி கொண்டு, கழிவுப் பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வருவது மிகவும் அபாயகரமானது என மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் இருந்து குப்பைகள் அடங்கிய கொள்கலன்கள் இறக்குமதி


பிரிட்டனில் இருந்து சட்டவிரோதமாக சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் குப்பைகள் அடங்கிய கொள்கலன்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

2017-ம் ஆண்டு முதல் இலங்கைக்கு 247 கொள்கலன்கள் மூலம் இந்த குப்பைகள் கொண்டு வரப்பட்டுள்ளது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட கொள்கலன்களில் 130 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் ஆராயப்பட்டு, கட்டுநாயக்க பகுதியிலுள்ள நிறுவனமொன்றின் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள 111 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டுள்ள அனைத்து குப்பைகளும் சுற்றுச்சூழலுக்கும், சுகாதாரத்திற்கும் பெருமளவில் தீங்கு விளைவிக்கும் வகையிலான குப்பைகள் என மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை தெரிவிக்கின்றது.

கட்டுநாயக்க பகுதியிலுள்ள கிடங்கு ஒன்றில் 130 கொள்கலன்களில் கொண்டு வரப்பட்ட 27,685 மெட்ரிக் டன் எடைகுப்பைகள், 50,000 அடி நீளத்தில் வைக்கப்பட்டுள்ளதாக இந்த அதிகார சபை சுட்டிக்காட்டுகின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்