சென்னை - சிங்கப்பூருக்கு உலகின் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியலில் என்ன இடம்?

புதன், 20 மார்ச் 2019 (08:45 IST)
உலகின் விலைவாசி மிகுந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர், பாரீஸ், ஹாங்காங் ஆகிய மூன்று நகரங்கள் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன.
 
உலகின் விலைவாசி மிகுந்த நகரங்களின் பட்டியலின் முப்பதாண்டுகால வரலாற்றில் முதலாவது இடத்தை மூன்று நகரங்கள் ஒருசேர பிடிப்பது இதுவே முதல் முறை.
 
உலகிலுள்ள 133 நகரங்களில் வாழ்க்கைச் செலவினங்களை அடிப்படியாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
 
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் கடந்த ஆண்டு இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்த நிலையில், இந்தாண்டு முதலிடத்தை பிடித்துள்ளது.
 
உலகிலுள்ள 133 முக்கிய நகரங்களில் பிரட் உள்ளிட்ட சாதாரண உணவுப்பொருட்களின் விலைவாசி உயர்வை, அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரத்தின் வருடாந்திர ஏற்ற-இறக்கத்தை அடிப்படையாக கொண்டு, அதை மற்ற நகரங்களுடன் ஒப்பிட்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
 
வித்தியாசமான ஒப்பீடு
 
'தி எக்கனாமிஸ்ட்' என்னும் பொருளாதார இதழ் ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆய்வை மேற்கொண்டு வருகிறது. அதன் ஆய்வு குழுவின் உறுப்பினரான ரோசனா ஸ்லவ்சேவா, உலகின் டாப் 10 விலைவாசி மிகுந்த நகரங்களின் பட்டியலில் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் பாரீஸ் இடத்தை பிடித்து வருவதாக கூறுகிறார்.
 
"மற்ற ஐரோப்பிய நகரங்களுடன் ஒப்பிடுகையில், பாரீசை பொறுத்தவரை மதுபானம், போக்குவரத்து, புகையிலை ஆகியவை மட்டுமே நியாயமான விலையை கொண்டிருக்கிறது" என்று அவர் கூறுகிறார்.
 
உதாரணமாக, பாரீசில் பெண்ணொருவர் தலைமுடியை வெட்டுவதற்கு சராசரியாக 119.04 அமெரிக்க டாலர்கள் செலவிட வேண்டியுள்ளதாகவும், அதே சூழ்நிலையில் சுவிட்சர்லாந்தின் ஸுரிச் நகரில் $73.97க்கும், ஜப்பானின் ஒசாகா நகரில் $53.46 க்கும் சராசரியாக தலைமுடியை வெட்டிக்கொள்ள முடியும்.
 
ஆச்சர்யமளிக்கும் வகையில், உலகின் விலைவாசி மிகுந்த டாப் 10 நகரங்களின் பட்டியலில், நியூயார்க், லாஸ்ஏஞ்சலீஸ் ஆகிய இரண்டு அமெரிக்க நகரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
விலைவாசி மிகுந்த உலகின் டாப் 10 நகரங்கள்
 
1. சிங்கப்பூர் (சிங்கப்பூர்)
 
2. பாரீஸ் (பிரான்ஸ்)
 
3. ஹாங்காங் (சீனா)
 
4. ஸுரிச் (சுவிட்சர்லாந்து)
 
5. ஜெனீவா (சுவிட்சர்லாந்து)
 
6. ஒசாகா (ஜப்பான்)
 
7. சோல் (தென் கொரியா)
 
8. கோபன்ஹேகன் (டென்மார்க்)
 
9. நியூயார்க் (அமெரிக்கா)
 
9. டெல் அவிவ் (இஸ்ரேல்)

10. லாஸ்ஏஞ்சலீஸ் (அமெரிக்கா)
 
உலகின் விலைவாசி குறைந்த நகரங்கள்
 
உலகில் விலைவாசி அதிகமுள்ள நகரங்களை போன்றே, விலைவாசி குறைந்த நகரங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.
 
உலகமெங்கும் பரவலாக நிலவிய பணவீக்கம், பணமதிப்பு ஏற்ற-இறக்கங்களின் காரணமாக அர்ஜென்டினா, பிரேசில், துருக்கி, வெனிசுவேலா ஆகிய நாடுகளின் விலைவாசி குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.
 
இந்த பட்டியலில் வெனிசுவேலாவிலுள்ள கராகஸ் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. சென்ற ஆண்டு வெனிசுவேலாவின் பணவீக்கம் 1,000,000 சதவீதத்தை நெருங்கும் அளவுக்கு மோசமான கட்டத்தை அடைந்ததையடுத்து, அந்நாட்டு அரசாங்கம் புதிய கரன்சியை அறிமுகப்படுத்தும் அளவுக்கு சென்றது.
 
இந்த பட்டியலில் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் இரண்டாமிடத்தை பிடித்துள்ளது.
 
அதே வேளையில், இந்த பட்டியலில் அதிகபட்சமாக இந்தியாவை சேர்ந்த சென்னை, பெங்களூரு, புதுடெல்லி ஆகிய மூன்று நகரங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளின் காரணமாக உலகின் பல்வேறு நகரங்கள் விலைவாசி குறைந்த நகரங்கள் பட்டியலில் இணைந்து வருவதாக 'தி எகானாமிஸ்ட்' இதழின் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
விலைவாசி குறைந்த உலகின் டாப் 10 நகரங்கள்
1. கராகஸ் (வெனிசுவேலா)
 
2. டமாஸ்கஸ் (சிரியா)
 
3. தாஷ்கண்ட் (உஸ்பேகிஸ்தான்)
 
4. அல்மாட்டி (கஜகஸ்தான்)
 
5. பெங்களூரு (இந்தியா)
 
6. கராச்சி (பாகிஸ்தான்)
 
6. லாகோஸ் (நைஜீரியா)
 
7. பியூனஸ் அயர்ஸ் (அர்ஜென்டினா)
 
7. சென்னை (இந்தியா)
 
8. புதுடெல்லி (இந்தியா)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்