பொருளாதார ஒத்துழைப்பு: இந்திய, இலங்கை நிதியமைச்சர்கள் டெல்லியில் சந்திப்பு
வியாழன், 2 டிசம்பர் 2021 (00:02 IST)
இந்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்துப் பேசும் இலங்கை நிதித்துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷImage caption: இந்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்துப் பேசும் இலங்கை நிதித்துறை இந்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர்.
டெல்லிக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள பசில் ராஜபக்ஷ நிர்மலா சீதாராமனை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இலங்கை நிதித்துறை செயலாளர் எஸ்.ஆர் . ஆட்டிகல, இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிந்த மொரகொட மற்றும் அதிகாரிகளும் இந்த சந்திப்பின்போது உடனிருந்தனர்.
இந்தியா தனது பொருளாதார ஒத்துழைப்புத் திட்டங்களின் மூலம் பல்வேறு துறைகளில் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு பசில் ராஜபக்ஷ நன்றி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள பரஸ்பர பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்களை மேலும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர் என்று பசில் ராஜபக்ஷவின் ஃபேஸ்புக் பக்க இடுகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்மலா சீதாராமன் 2019ஆம் ஆண்டு மே மாதம் முதல் இந்தியாவின் நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்து வருகிறார். அதற்கு முன் அவர் 2017 முதல் 2019ஆம் ஆண்டுவரை இந்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். அவர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
பசில் ராஜபக்ஷ இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவின் சகோதரர். கடந்த ஜூலை மாதம் விரிவுபடுத்தப்பட்ட இலங்கை அமைச்சரவையில் அவர் நிதித்துறை அமைச்சராக சேர்க்கப்பட்டார்.
"முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை" இலங்கை சந்தித்த வேளையில் அவர் நிதித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அந்த நெருக்கடிக்கு பிறகு பசில் மேற்கொள்ளும் முதல் அலுவல்பூர்வ வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.