இபோலா பரவி வர, லைபீரிய சுகாதாரப் பணியாளர்கள் வேலை நிறுத்தம்

திங்கள், 13 அக்டோபர் 2014 (17:10 IST)
லைபீரியாவில் இபோலா நோய் தொடர்ந்து பரவி வருகின்ற இவ்வேளையில், அந்நாட்டின் செவிலியர்களும் மருத்துவ உதவிப் பணியாளர்களும் தேசிய அளவிலான வேலை நிறுத்தம் ஒன்றைச் செய்வதாகக் கூறுகின்றனர்.


 
சுகாதாரப் பணியாளர்கள் ஊதிய அதிகரிப்போடு, மேம்பட்ட பாதுகாப்பு உபகரணங்களும் கோருகின்றனர்.
 
இபோலா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வருவோர்க்கு, அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்காக வழங்கப்படும் மாதாந்த தொகை கூட்டித் தரப்பட வேண்டும் எனத் தேசிய சுகாதார ஊழியர்கள் சங்கம் கோருகிறது.
 
நோய்த் தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாக்கக்கூடிய உபகரண வசதிகளும், காப்பீட்டின் அளவும் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் சுகாதாரப் பணியாளர்கள் கோருகின்றனர்.
 
நோய் பெரிய அளவில் பரவி வருவதால் ஏற்கனவே ஒத்துக்கொள்ளப்பட்ட அளவில் ஆபத்து மாதாந்தத் தொகையை இனி தம்மால் வழங்க இயலாது என அரசாங்கம் கூறுகிறது.
 
இந்த வேலை நிறுத்தம், இபோலா நோயாளிகளுக்குப் பாதகமாக அமையும் என்றும், நோயைக் கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கும் பின்னடைவைத் தரும் என்றும் லைபீரியாவின் சுகாதாரத் துறை துணையமைச்சர் டோல்பர்ட் ந்யென்ஸ்வா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்