நேரில் செய்ய முடியாததை இணையத்தில் செய்யாதீர்கள்' - ஓர் எச்சரிக்கை

வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (21:26 IST)
பிரமிளா கிருஷ்ணன்
 
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை சைபர் உலகில் பின்தொடர்ந்து, கேலி செய்யும் 'டிஜிட்டல் ஸ்டாக்கிங்' குற்றங்கள் அதிகரித்துவருவதாகவும், சென்னை நகரத்தில் கடந்த மூன்று மாதங்களில் நான்கு 'டிஜிட்டல் ஸ்டாக்கிங்' வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு பிரிவின் துணை ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.
சென்னை நகரத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தனிப்பிரிவின் துணை ஆணையராக பொறுப்பேற்ற ஜெயலட்சுமி இணைய உலகில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைக்க என்ன வழி என பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் விரிவாக பேசினார்.
 
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தனிப்பிரிவின் துணை ஆணையர் ஜெயலட்சுமி
 
கேள்வி: சமூக வலைத்தளங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிப்புக்கு ஆளாவது அதிகரித்துள்ளதாக கூறுகிறீர்கள். இணைய உலகில் பெண்கள், குழந்தைகளுக்கு என்ன விதமான குற்றங்களால் பாதிக்கப்படுகிறார்கள்?
 
பதில்: டிஜிட்டல் ஸ்டாக்கிங் குற்றம் அதிகரித்துவருவதை பார்க்கிறோம். முன்பெல்லாம், பெண்களை பேருந்திலோ, பொது இடத்திலோ அவரை பின்தொடர்ந்து பாட்டு பாடுவது, கிண்டலாக பேசுவது என கேலி செய்வார்கள்.
 
டிஜிட்டல் உலகத்தில் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்ட பெண்களின் படங்களை மற்றொருவர் டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். அந்த படத்தை பதிவிடும்போது, பாதுகாப்பு அம்சங்களை குறிப்பிடாமல் போனால், அறிமுகம் இல்லாத நபர்கள் கூட படத்தை எடுக்கலாம்.
 
ஒருசிலர் தங்களது அந்தரங்க நிகழ்வுகளை படமாக எடுத்து நெருக்கமானவர்களுக்குப் பகிர்ந்தால், அந்த படம் மோசமாக கையாளப்படுவதற்கு வாய்ப்புண்டு.
 
இணையத்தில் பகிரப்படும் படங்களை நீங்கள் அழித்துவிட்டாலும், நீங்கள் அனுப்பிய படத்தை மற்றவர் வைத்திருக்கலாம். அவர் பிறருக்கு பகிரலாம். அதை உங்களுக்கு தெரியாத நபர்கள் கூட பயன்படுத்தலாம்.
 
சமீபத்தில் எங்களுக்கு வந்த புகாரில் ஒரு பெண் வெளிநாடு சென்ற பிறகும், அவரது ஆண் நண்பராக இருந்தவர் தொடர்ந்து பெண்ணின் படத்தை வைத்து அவரை இணையத்தில் பின்தொடர்ந்து, தொல்லை தந்திருக்கிறார். அந்த பெண் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நேரத்தில், தனக்கு பாதுகாப்பு வேண்டும் என புகார் கொடுத்துள்ளார்.
 
நீங்கள் ஒருமுறை பகிரும் படம் பலரிடம் செல்லும் அபாயம் உள்ளது என்பதை அறிந்து செயல்படவேண்டும். கடந்த மூன்று மாதங்களில் நான்கு டிஜிட்டல் ஸ்டாக்கிங் வழக்குகளை பதிந்துள்ளோம்.
 
இந்த விவகாரங்களில் காவல்துறையை அணுகி, பாதுகாப்பைப் பெற முடியும் என்ற நம்பிக்கையை இளைஞர்களிடம் ஏற்படுத்திவருகிறோம்.
 
தெரியாத நபர்களிடம் சமூகவலைத்தளங்களில் நட்பாகி, பிரச்சனை ஏற்பட்ட பின்னர் எங்களிடம் புகார் கொடுக்க வரும்வேளையில்தான், தன்னுடன் இணையத்தில் பழகிய நபரை முதன்முதலாக நேரில் பார்க்கிறார்கள்.
 
நேரில் பார்க்காமல், ஒரு நபரிடம் தன்னை பற்றிய தகவல்களை தரக்கூடாது என பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். உங்களுக்கு தெரிந்த நண்பர்கள், குடும்ப வட்டத்தில் உள்ள நண்பர்களை தாண்டி, எந்தவித தொடர்பும் இல்லாத நபர்களிடம் தகவல்களை பகிர்ந்தால், பிரச்சனை வந்தால், அவர்களை கண்டறிவதும் சிரமமாக இருக்கும்.
 
கே: டிஜிட்டல் ஸ்டாக்கிங் பிரச்சனையில் சிக்குபவர்கள் அதிலிருந்து மீள எந்த விதத்தில் உதவுகிறீர்கள்?
 
ப: டிஜிட்டல் ஸ்டாக்கிங்கில் சிக்கினால் ஆயுட்காலம் வரை பாதிப்பு தொடரும் வாய்ப்புள்ளது. படங்களை, நீங்கள் பேசிய குரல் பதிவை (ஆடியோவை) வைத்திருந்து, சில ஆண்டுகள் கழித்துகூட, மீண்டும் உங்களுக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்புண்டு. அதனால், டிஜிட்டல் ஸ்டாக்கிங்கில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க பாதுகாப்பாக சமூக வலைதளங்களை பயன்படுத்தவேண்டும் என்பது முதல்படி.
 
நேரில் செய்ய முடியாததை, சைபர் உலகத்தில் செய்யாதீர்கள் என்பதை வலியுறுத்துகிறோம். உங்களுடைய அந்தரங்க தகவல், முக்கியமான விவரங்களை யாரிடமும் பர்சனல் மெசேஜ் மூலமாககூட சொல்லாதீர்கள். நீங்கள் அனுப்பும் தகவலை வைத்துத்தான் உங்களை ஏமாற்றுவார்கள் என்ற விழிப்புணர்வு செய்தியை இளைஞர்களிடம் கொண்டு செல்கிறோம்.
 
அடுத்ததாக, பாதிப்புக்கு ஆளானால் உடனே காவல்துறையை நாடவேண்டும். எங்களிடம் தெளிவாக சொல்லிவிட்டால், பாதிக்கப்பட்ட நபரை மீட்கும் வேலையில் இறங்கலாம்.
 
சைபர் உலகத்தில் உள்ள பதிவுகளை நீக்கலாம், அசல் பதிவை முடக்கலாம் தகவல் பரவுவதை தடுக்கலாம். குற்றத்தை தடுப்பதுதான் எண்களின் முதல் கடமை. தகவல் பரவுவதை தடுத்தால், அந்த குற்றம் மேலும் பாதிப்பு ஏற்படுத்துவதை தவிர்க்கலாம்.
 
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
கே: பாலியல் வன்முறை குற்றங்களை இந்த தனிப்பிரிவில் எவ்வாறு கையாள்கிறீர்கள்?
 
ப: பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களை குறைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்ட வழிகாட்டுதலின்படி, தமிழகம் முழுவதும் காவல்துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள இந்த தனிப்பிரிவு அதிகாரிகள் பாலியல் வன்முறை வழக்குகளுக்கு சிறப்பு கவனம் கொடுக்கவேண்டும், வழக்கு விசாரணை விரைவில் முடிக்க தேவையான உதவிகளை செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
கடந்த மூன்று மாதங்களில் சென்னையில் மட்டும் 70 போக்ஸோ (குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்) வழக்குகளில் தீர்ப்பு பெற்றுள்ளோம். புதிதாக 50 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. குழந்தைகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம்.
 
கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
 
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்
முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil
மேலும் ஒரு வழக்காக போக்ஸோ வழக்கை பார்க்காமல், முதலில் பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் குடும்பத்திற்கு நம்பிக்கை தருகிறோம், மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்கிறோம். வழக்கு முடிந்தவுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் வழங்கும் நிவாரண தொகையை பெற்றுத்தருவதிலும் கவனம் செலுத்துகிறோம்.
 
ஒரு வழக்கில், பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் அந்த குடும்பத்திற்கு ஆறு மாதம் மனநல ஆலோசனை தேவை என்பதை மருத்துவர்கள் மூலமாக அறிந்து, அதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். வழக்கு முடிந்தாலும், உதவிக்கரம் நீட்ட நாங்கள் இருக்கிறோம் என ஆதரவாக செயல்படுகிறோம்.
 
பெண் குழந்தைகள் மட்டுமல்ல, ஆண் குழந்தைகள் கூட பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள். பெண் மற்றும் ஆண் குழந்தைகள் பயிலும் பள்ளி,கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். ஆண் குழந்தைகளும் இந்த சூழலுக்கு ஆளாகலாம், அப்படி நேர்ந்தால் அவர்கள் மனம்விட்டு பேசவேண்டும், புகார் தரலாம் என்ற செய்தியை சொல்லிவருகிறோம்.
 
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
கே: பாலியல் வன்கொடுமை பிரச்னையை சொல்ல தயக்கம் காட்டுவோரின் பிரச்னையை எப்படி பார்க்கிறீர்கள்?
 
ப:பாதிக்கப்பட்டவர்கள் தயங்குவதற்கு சமூக அந்தஸ்து, வழக்கு போட்டால் பல ஆண்டுகள் வழக்கு நடக்கும், ஊடகங்களில் பெயர் வெளியிடப்படும் என்று அச்சப்படுகிறார்கள் .
 
பாதிக்கப்பட்ட நபரை மேலும் துன்பப்படுத்தகூடாது என்பதை வலியுறுத்தி, காவல்நிலைய அதிகாரிகளை பாலியல் வன்முறை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களிடம் எவ்வாறு பேசவேண்டும் என்பதற்கு பயிற்சி அளித்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் எந்த தவறும் செய்யவில்லை, துன்புறுத்தல் செய்த நபரை தண்டிக்கவேண்டும் என்பதை புரியவைக்கிறோம்.
 
பிரச்னையை மீண்டும் மீண்டும் பேசக்கூடாது. ஒருமுறை அவர்கள் பேசும்போதே எல்லா தகவல்களையும் சொல்லமுடியாது என்பதால், அவர்களுக்கு நேரம் அளித்து பேசுவோம். மேலும் வழக்கை விரைவில் முடிப்போம் என்பதை வெளிப்படையாக அவர்களிடம் பேசுவோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்