Dil Bechara Review: தில் பெச்சாரா – சினிமா விமர்சனம்
சனி, 25 ஜூலை 2020 (23:30 IST)
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அகால மறைவுக்குப் பிறகு பாலிவுட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த திரைப்படம் இது. ஜான் க்ரீன் என்ற அமெரிக்க எழுத்தாளர் 2012 வெளியிட்ட The Fault in Our Stars நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம்தான் Dil Bechara. நாவலைவிட்டு சில இடங்களில் விலகியிருக்கிறார்கள். ஆனால், அடிப்படையில் பெரிய மாற்றமில்லை.
ஜாம்ஷெட்பூரில் புற்றுநோயுடன் போராடியபடி வாழ்வின் அர்த்தமின்மையை எண்ணிக்கொண்டிருக்கும் இருவர், காதலிக்க ஆரம்பித்து மீதமுள்ள வாழ்வுக்கு அர்த்தத்தை உருவாக்குவதுதான் ஒரு வரிக் கதை. கிஸி பாசு (சஞ்சனா சங்கி) தைராடு புற்றுநோயால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, எப்போதும் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் வாழ்வை நகர்த்திக்கொண்டிருக்கும் இளம் பெண். இருந்தபோதும் ஒரு சாதாரண வாழ்க்கைக்காக ஏங்குகிறாள் அவள். இந்த நேரத்தில் அவளுடைய வாழ்வில் அதிரடியாக நுழைகிறான் இமானுவேல் ராஜ்குமார் ஜுனியர் எனப்படும் மேனி (சுஷாந்த் சிங் ராஜ்புத்). இருவரில் ஒருவரை புற்றுநோய் விரைவிலேயே கொன்றுவிடும் என்று தெரிந்த பிறகும் மீதமுள்ள வாழ்வை மகிழ்ச்சியாக வாழ நினைக்கிறார்கள் இருவரும். அப்படி வாழ்ந்துவிட முடியுமா?
துயரமும் வலியும் மிகுந்த ஒரு காதல் கதை. ஆனால், நேர்மறையான எண்ணங்களோடு வாழ்வை அணுகும் நாயகன் - நாயகியின் பாத்திரங்களில் வெளிப்படும் உற்சாகமும் நம்பிக்கையும் படத்தை ரசிக்க வைக்கிறது. கதாநாயகன் ரஜினியின் ரசிகராக வருவதும் 'சரி' என்ற தமிழ் வார்த்தையைப் படம் நெடுக பயன்படுத்துவதும் கூடுதல் உற்சாகத்தைத் தருகிறது.
கலகலப்பான இளைஞனாக அறிமுகமாகி, போராடும் புற்றுநோயாளியாக மாறும் சுஷாந்த் சிங், தன் சிறப்பான நடிப்பை இந்தப் படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியாக அறிமுகமாகியிருக்கும் சஞ்சனா சங்கியிடமிருந்தும் மேலும் பல சிறப்பான படங்களை எதிர்பார்க்க முடியும்.
ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பின்னணி இசை சற்று பழையதாகத் தோன்றினாலும் பாடல்கள் எல்லாமே ரசிக்கவைக்கின்றன.
இரண்டு புற்றுநோயாளிகளை பிரதான பாத்திரங்களாகக் கொண்ட படம் என்பதால், சோர்வை ஏற்படுத்தும், வருத்தத்தை, வலியை ஏற்படுத்தும் பல காட்சிகள் உண்டு. ஆனால், அதையெல்லாம் மீறி படத்தை ரசிக்க முடியும்.
மரணம் நெருங்கும்போதும் சிரித்தபடி எதிர்த்து நிற்க வேண்டுமென்பதுதான் படத்தின் அடிநாதம். இந்தப் படத்தை சுஷாந்த் சிங் பார்த்திருக்கலாம்