"அமைச்சர், அதிகாரிகள், ஆளும் கட்சி பிரமுகர்களின் ஆகம மீறலால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த தலைமை அர்ச்சகர், பிராயசித்த கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்" என்றும் தெரிவித்துள்ளார் வானதி.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று, தமிழ்நாட்டின் மிக முக்கிய ஆன்மிகத் தலங்களில் ஒன்று.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தில் உள்ள இந்தக் கோயிலில் ஜனவரி 27 ஆம் தேதி குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடந்து முடிந்துள்ளது. அதில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டார்.
அதற்கு முந்தைய நாள் ஏற்பாடுகளை கண்காணிப்பதற்காக அமைச்சர் சேகர் பாபு அறநிலையத் துறை அதிகாரிகளுடன் கோயிலுக்குச் சென்றார். அப்போது, அமைச்சர், அவருடன் வந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கோயில் கருவறைக்குள் சென்றதாக கூறி சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன. இதையடுத்து, கோயிலில் ஆகம விதி மீறப்பட்டுள்ளது. இதனால் பிராயசித்த கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அர்ச்சகர் என கூறப்படும் ஒருவர் பேசும் ஆடியோ செய்தி ஒன்றும் பரவியுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர், அதிகாரிகள் கோயில் கருவறையில் நுழைந்ததாக குற்றம்சாட்டியுள்ள வானதி, பிராயச்சித்த கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் கருவறைக்குள் அத்துமீறி நுழைந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தலைமை அர்ச்சகரின் வேண்டுகோளை ஏற்று பிராயசித்த கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.
எந்தவொரு திருக்கோயிலிலும் மகா கும்பாபிஷேகம் நடந்தால், 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடக்க வேண்டும் என்பது ஆகமம். ஆனால் மகா கும்பாபிஷேகம் நடந்து ஒரு வாரத்திற்குள் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் தைப்பூசம் வருகிறது.
மகா கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள், இந்து சமய அறநிலையளத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்களும், துறை அதிகாரிகளும், ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலரும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் கருவறைக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளது அதிர்ச்சியும், தாங்க முடியாத மன வேதனையையும் அளிக்கிறது. இது அப்பட்டமான ஆகம மீறல். அது மட்டுமல்ல, இந்துக்களின் மத உணர்வுகளை காயப்படுத்தும் செயல். எனவே, இதற்காக, அமைச்சர் முருக பக்தர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இனி இதுபோன்ற ஆகம மீறல்கள் நடக்காது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்," என்று கூறியுள்ளார் வானதி.
'சித்தர்களால்உருவாக்கப்பட்டகோயில்'
"கருவறைக்குள் யாரும் நுழையவில்லை. கருவறைக்கு முன்னதாக இருக்கும் அர்த்த மண்டபத்திற்கு சென்றுதான் சுவாமி தரிசனம் செய்தார்கள்" என்று உண்மையை மறைக்க, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முயற்சிப்பது கடும் கண்டனத்துக்கிறது. இது வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்.
இந்து சமய அறநிலையத் துறை சட்டங்களின்படியே, மதச்சார்பற்ற தமிழக அரசோ, அந்த மதச்சார்பற்ற அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளோ, திருக்கோயிலின் வழிபாடு, ஆகமம், கும்பாபிஷேகம் போன்ற விவகாரங்களில் தலையிடக்கூடாது. அதனை, சம்பந்தப்பட்ட திருக்கோயில் அறங்காவலர்கள் குழுவும், அர்ச்சகர்களும்தான் முடிவு செய்ய வேண்டும். பழனி முருகன் கோயில் என்பது சித்தர்களால் உருவாக்கப்பட்ட கோயில். எனவே, அங்கு பாரம்பரியமாக சித்தர் வழி வந்த குடும்பத்தினருக்கு வழங்கப்படும் மரியாதைகள் வழங்கப்பட வேண்டும்" என்றும் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார் வானதி.
விஷமசெய்திவெளியிடுவதுவானதியின்வாடிக்கை: சேகர்பாபு
செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 7, 2023) கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் மற்றும் பேரூர் ஆதீனத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர் பாபு, பிறகு செய்தியாளர்களிடம்பேசும்போது வானதியின் அறிக்கைக்கு பதில் அளித்தார்.
"ஊடகங்களில் வர வேண்டும் என்பதற்காக விஷமத்தனமான செய்திகளை வெளியிடுவது தான் அவரது (வானதியின்) வாடிக்கையாக உள்ளது. தமிழ்நாட்டை தாண்டி இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் உள்ளவர்கள் பழனி கோவில் குடமுழுக்கு சிறப்பாக நடத்தப்பட்டதை பாராட்டி வருகிறார்கள். அதில் கரும்புள்ளி ஏற்படுத்த வேண்டும் என அர்த்தமற்ற செய்தியை அவர் வெளியிட்டது மிகவும் வருத்தமளிக்கிறது.
கும்பாபிஷேகம் முடிந்து 10 நாட்கள் கழித்து தற்போது தைப்பூசமும் முடிந்த பிறகு இவ்வாறு பிரச்சாரம் செய்வது மிகவும் வருத்தம் அளிக்கிறது. காலம் காலமாக கோயிலை வைத்து ஒரு சிலர் வருமானம் பார்த்து வந்தது ஒழிக்கப்பட்டு, தற்போது அனைவரும் சமம் என்கிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால் கோவிலை வைத்து வருமானம் பார்க்க முடியாதவர்கள் இது போன்ற பிரசாரங்களை மேற்கொள்கிறார்கள். அன்றைய நிகழ்வில் பங்கேற்றவர்கள் அனைவருமே சிறப்பாக நடைபெற்றது என மகிழ்ச்சியுடன் தெரிவித்து சென்றார்கள்," என்றார்.
நிர்வாக அதிகாரி கூறியது என்ன?
பழனி கோயில் நிர்வாகத்தின் மீதான குற்றச்சாட்டுகளை அக்கோயில் செயல் அதிகாரி நடராஜன் மறுக்கிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கோயிலின் நிர்வாகத்தை பொருத்தவரை பழனியிம் மட்டுமில்லை வேறு எங்குமே வழிபாடு, திருவிழா போன்ற விவகாரங்களில் அதிகாரிகள் தலையிடுவதில்லை. உள்துறை, வெளித்துறை என அர்ச்சகர்கள் அடங்கிய இரண்டு குழுக்கள் உள்ளன.
வழிபாடு, பராமரிப்பு மற்றும் அதை சார்ந்த அனைத்து விஷயங்களும் உள்துறையைச் சேர்ந்தவர்களால் தான் முடிவெடுத்து நிர்வகிக்கப்படுகின்றன. எந்த முடிவும் எழுத்துப்பூர்வமாக ஆவணப்படுத்தப்படுகின்றன. உள்துறையைச் சேர்ந்தவர்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அது தான் செயல்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு நடைமுறை உள்ளது. கும்பாபிஷேகம், தைப்பூசம் என அனைத்தும் முறையாகதான் நடத்தப்பட்டுள்ளன. ஆகம விதிப்படிதான் அனைத்து நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. நீதிமன்ற உத்தரவோ ஆகம விதியோ எங்கும் மீறப்படவில்லை. அர்ச்சகர்கள் தரப்பில் இது தொடர்பாக குற்றச்சாட்டோ கோரிக்கைகளோ எதுவும் வைக்கப்படவில்லை," என்றார்.