சந்தானம் நடித்து இதற்கு முன்பாக வெளிவந்த 'ஏ1' திரைப்படம் வெற்றிபெற்றிருந்த நிலையில், ஒரே நாளில் 'டகால்டி', 'சர்வர் சுந்தரம்' ஆகிய இரு படங்களும் வெளியாகவிருக்கிறது என்ற செய்தி சந்தானம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. பிறகு, 'டகால்டி' மட்டும் இந்த வாரம் ரிலீஸாக, சர்வர் சுந்தரம் மேலும் இரு வாரங்களுக்குத் தள்ளிப் போயிருக்கிறது.
டகால்டியின் கதை இதுதான்: சாம்ராட் (தருண் அரோரா) மிகப் பெரிய பணக்காரன். தன் கம்ப்யூட்டரில் ஒரு பெண்ணின் படத்தை வரைந்தால், அதே போன்ற பெண்ணைத் தேடிப் பிடித்துவந்து ஆசையைத் தீர்த்துக்கொள்ளும் விபரீதமான பழக்கம் அவருக்கு இருக்கிறது. படத்தின் துவக்கத்தில் கதாநாயகியின் (ரித்திகா சென்) படத்தை வரைந்து, அந்தப் பெண்ணை அழைத்துவரச் சொல்கிறார்.
இந்தியா முழுவதும் பலரும் இந்தத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்க, மும்பையில் போதைப் பொருள் கடத்தும் குருவும் (சந்தானம்) அந்த பெண்ணைத் தேடிச் செல்கிறான். அந்தப் பெண் திருச்செந்தூரில் இருப்பது தெரியவர, அங்கே போய் ஏமாற்றி அவளைக் கூட்டிவந்து, சாம்ராட்டிடம் ஒப்படைக்கிறான். அதில் கிடைத்த பணத்தில் ரூம் போட்டு, குடித்த பிறகு, மனம் திருந்தி அந்தப் பெண்ணைக் காப்பாற்றுகிறான் குரு. இதில் யோகிபாபுவின் ரோல் என்ன என்பது சொல்லாமலேயே விளங்கியிருக்கும்.
கடந்த சில ஆண்டுகளில் தமிழில் கதாநாயகன் 'ரோட் ட்ரிப்' செல்லும் படங்கள் சில வெளிவந்தன. அப்படிச் செல்லும்போது ஆபத்தில் உள்ள கதாநாயகியை நாயகன் மீட்பார். இந்தப் படத்தில், கதாநாயகனே நாயகியை ஆபத்திற்குள்ளாக்கி, பிறகு அவரே மீட்கிறார். இதற்கான தண்டனை படம் பார்ப்பவர்களுக்குக் கிடைக்கிறது.
துவக்கத்திலிருந்தே எந்த லாஜிக்கிற்குள்ளும் பொருந்தாமல், கட்டறுந்த காளையாக செல்கிறது படம். ஓவியம் வரைந்து அதேபோல பெண்ணைத் தேடும் வில்லன், பார்ப்பவர்களையெல்லாம் நம்பும் கதாநாயகி, போதைப் பொருள் கடத்தும், பெண்ணைக் கடத்தி வில்லனிடம் ஒப்படைக்கும் நல்லவனான கதாநாயகன், அவனுக்கு உருப்படியில்லாத ஒரு நண்பன் என்று படம் பார்ப்பவர்களை கதறவிடுகிறார்கள்.
அதுவும் ஆந்திராவில் ஒரு சிவப்பு விளக்குப் பகுதியில் கதாநாயகன், சண்டை போட்டு நாயகியை மீட்கும் காட்சிகள் எல்லாம் கொடூரம். வீடியோ கேமில்கூட, சண்டை போடும் உருவத்திற்கு சார்ஜ் இறங்கும். ஆனால், சந்தானம் படம் நெடுக, வருபவர்களை கீறல்கூட விழாமல் நொறுக்குகிறார்.
இதற்கு நடுவில் சில, பல பாடல்கள், ஒன்-லைன் காமெடிகள் என்று நகர்கிறது படம். இறுதிக் கட்டத்தை நெருங்கும் நிலையில் சில காட்சிகள் மட்டும் பரவாயில்லை ரகத்தில் உள்ளன. யோகி பாபு துவக்கத்தில் சில காட்சிகளிலும் இறுதியில் சில காட்சிகளிலும் வந்துபோகிறார்.
ஒரு படத்தில் கதாநாயகி லூசாக இருக்கலாம். அதற்காக படம் பார்க்க வருபவர்களையும் அப்படி கருதலாமா?