கொரோனா வைரஸ்: முடக்கநிலையிலிருந்து மீண்டெழுந்த வுஹான் நகர மக்கள் கூறுவதென்ன?
தற்போது உலகம் முழுவதையும் புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீன நகரமான வுஹானில் இயல்பு நிலை திரும்ப ஆரம்பித்துள்ளது.
பல மாத முடக்க நிலைக்குப் பிறகு அந்த நகரத்திலிருந்து மக்கள் வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தருணத்தை உள்ளூர் அதிகாரிகள் மிகப்பெரிய வெற்றி என்று கொண்டாடி வரும் சூழ்நிலையில், மனித குலத்தின் வரலாற்றில் மிகப்பெரிய இந்த முடக்க நிலையை எதிர்கொண்ட மக்கள் வேறுபட்ட பார்வைகளை கொண்டுள்ளனர்.
கடந்த 76 நாட்களாக அமலில் இருந்து வந்த முடக்க நிலை, வுஹான் நகரத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வுஹான் நகரத்தில் தற்போது மீண்டும் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன; விமானம் மற்றும் ரயில் சேவைகள் பரபரப்பாக இயங்கி தொடங்கிவிட்டன.
மேலும், நோய்த்தொற்று பாதிப்பு இல்லையென்று அறிவிக்கப்பட்ட வுஹான் நகரவாசிகள், சீனாவின் மற்ற நகரங்களுக்கு பயணிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
"கடந்த இரண்டு மாதங்களாக, கிட்டத்தட்ட ஒருவரை கூட தெருக்களில் பார்க்க முடியாத நிலை இருந்தது" என்று டெலிவரி டிரைவர் ஜியா ஷெங்ஷி கூறுகிறார்.
"அது என்னை வருத்தத்திற்குள்ளாகியது."
உலக நாடுகள் முன்னெப்போதும் சந்திக்காத கடும் கட்டுப்பாடுகள் நிறைந்த நீண்டதொரு தனிமைப்படுத்துதலை வுஹான் நகரம் செய்து காட்டியுள்ளது. முடக்க நிலையின் தொடக்கத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி மாதத்தின் மத்திய பகுதிக்கு பிறகு யாரும் தங்களது வீடுகளை விட்டு வெளியேற அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டது.
அப்போதுதான், இந்த டெலிவரி டிரைவர்கள் உயிர்நாடியாக உருவெடுத்தார்கள்.
"சில நேரங்களில் மருந்துப் பொருட்களை தங்களது பெற்றோரிடம் சென்று கொடுக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் எங்களை அழைத்து உதவி கேட்டதுண்டு" என்று கூறுகிறார் ஜியா.
சீனாவின் முன்னணி இணையதள வர்த்தக நிறுவனங்களில் ஒன்றின் வுஹான் நகர கிளையின் மேலாளரான அவர், இதுபோன்று விடுக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கு நேரம் பிடிக்கும் என்று தான் வருந்தியதாக கூறுகிறார்.
"எனவே, நானே ஸ்கூட்டரில் மருந்தகத்திற்கு சென்று, வாடிக்கையாளர் கூறிய மருந்துகளை வாங்கி அவரது பெற்றோரிடம் கொண்டு சேர்த்தேன்."
கட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்கள்; வீரியமடைந்த மக்களின் கோப அலை
வுஹான் நகரத்தில் அமல்படுத்தப்பட்டு இருந்த முடக்க நிலையின் காரணமாக மக்களிடையே இருந்த கோப அலைகளை காண்பது அரிதான ஒன்றாக இல்லை.
"வுஹான் நகர அதிகாரிகளின் மூடிமறைப்பு நடவடிக்கை எனது தந்தையின் மரணத்திற்கு காரணமாகிவிட்டது. இதற்காக அவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்பதோடு, இழப்பீடும் கொடுக்க வேண்டும்" என்று ஜாங் ஹை கூறுகிறார்.
இவரது 76 வயதான தந்தை, வுஹானிலுள்ள மருத்துவமனையில் கால் முறிவு அறுவை சிகிச்சைக்கான பரிசோதனைக்கு சென்றபோது கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி உயிரிழந்தார்.
கொரோனா வைரஸ் பரவலின் தொடக்க காலத்தில் இதுகுறித்த எச்சரிக்கை விடுத்த மருத்துவர்களை நகர அதிகாரிகள் அமைதிப்படுத்தியதாக ஜாங் கூறுகிறார்.
குறிப்பாக, தற்போது கூட தங்களுக்கு எதிரான விமர்சனங்களை வுஹான் நகர அதிகாரிகள் கட்டுப்படுத்த முயல்வதாக ஜாங் கோபத்துடன் கூறுகிறார்.
தனது தந்தையின் அஸ்தியை எடுத்துச் சென்று சடங்குகளை மேற்கொள்ளும் வரை அதிகாரிகள் உடன் இருப்பர் என்று தன்னிடம் கூறப்பட்டதாக அவர் கூறுகிறார்.
"ஒருவேளை என்னுடன் அதிகாரிகள் யாரும் வராவிட்டால் நான் இந்த சம்பவம் குறித்து எனது குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசித்து, இது தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க கூடும் என்ற காரணத்தினால் அவர்கள் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்தார்கள்" என்று அவர் கூறுகிறார்.
"இதுபோன்ற சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் இணைந்து வீசாட் குழு ஒன்றை உருவாக்கி இருந்தோம். ஆனால், இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் அந்த குழுவை நீக்கியதுடன் அதன் ஒருங்கிணைப்பாளரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்."
இதையடுத்து தனது தந்தையின் அஸ்தியை பெறுவதற்கு மறுப்பு தெரிவித்த ஜாங், பிறகொரு நாளில் தான் தனியே வந்து அஸ்தியை பெற்றுக்கொள்வதாக கூறினார்.
"எனது தந்தையின் அஸ்தியை பெறுவது என்பது ஒரு தனிப்பட்ட, குடும்பம் தொடர்பான விடயம். அதில் மற்றவர்கள் யாரும் என்னுடன் இருப்பதில் எனக்கு விருப்பமில்லை" என்று அவர் கூறுகிறார்
'அரசாங்கத்தை குறை சொல்லாதீர்கள்'
தனது குடும்ப உறுப்பினர்களோ அல்லது நட்பு வட்டத்தை சேர்ந்தவர்களோ கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்று கூறுகிறார் டெலிவரி டிரைவரான ஜியா.
சீனாவின் கோவிட்-19 வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தரவு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தாலும், வுஹான் நகரத்தில் இந்த நோய்த்தொற்றின் தாக்கத்தை வியத்தகு அளவில் குறைந்ததாக ஜியா போன்ற உள்ளூர் மக்களே நினைப்பது இந்த முடக்க நிலையின் வெற்றிக்கு சான்றாக பார்க்கப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக, வுஹான் நகரத்தில் அமலில் இருந்த சில கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளன. இதையடுத்து, சில அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களும், வணிக நிறுவனங்களும் தங்களது கதவுகளை திறந்துள்ளன.
இந்நிலையில், மிகவும் முக்கியமாக வுஹான் நகரத்தின் பொது போக்குவரத்தை சீனாவின் மற்ற நகரங்களுடன் இணைக்கும் பணிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளன.
நோய்த் தொற்றின் பரவலை இதுபோன்ற கடுமையான கட்டுப்பாடுகள் இல்லாமலும் தடுக்க முடியும் என்பதற்கு ஆதாரங்கள் உள்ள போதிலும், தங்களது நாடு சரியான பாதையில் செல்வதாக ஜீயாவும் ஜாங்கும் தெரிவிக்கின்றனர்.
"மேலோட்டமாக சொல்வதென்றால் நாங்கள் வென்று விட்டோம், ஆனால் முற்றிலும் மனநிறைவு ஏற்பட்டுள்ளதாக சொல்ல முடியாது" என்று ஜியா கூறுகிறார்.
"நாட்டின் அனைத்து குடிமக்களும் முகக் கவசங்கள் அணிந்தும், உடல் வெப்ப நிலையை பரிசோதித்தும், அலைபேசி செயலிகளை கொண்டு உடல்நிலையை கண்காணித்தும், கையுறைகளை அணிந்தும், கூட்டம் கூடுவதை தவிர்த்தும், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் நடைமுறையை தொடர வேண்டும்."
தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் இடையிலான சமநிலையில், மீண்டுமொருமுறை கோவிட்-19 நோய்த்தொற்று எழுச்சி ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சுறுத்தல் தொடர்கிறது.
தனது தந்தையின் மரணத்திற்கு உள்ளூர் அதிகாரிகளை குற்றம்சாட்டும் ஜான் தனது நாட்டின் அரசாங்கத்தை முற்றிலும் குறை சொல்லிவிட முடியாது என்று கூறுகிறார்
அதே சமயத்தில் வெளிநாட்டு அரசுகள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டது அல்ல என்று அவர் கூறுகிறார்
"மேற்குலக நாடுகளில் ஏற்பட்டுள்ள அதீத உயிரிழப்புக்கு எங்களது நாட்டு அரசாங்கத்தை அவர்கள் குற்றம்சாட்ட முடியாது" என்று அவர் கூறுகிறார்
"தங்களது பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் மற்றும் கொள்கையில் உள்ள மாறுபாடு காரணமாக மேற்குலக நாடுகளை சேர்ந்தவர்கள் தொடக்கத்தில் முகக்கவசங்கள் அணிவதற்கு விரும்பவில்லை."