கொரோனா வைரஸ்: டி.வி நேரலையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட பைடன்
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (14:56 IST)
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாகியிருக்கும் ஜோ பைடன், ஃபைசர் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார். இந்த காட்சி, தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பானது.
இவருடன் சேர்த்து அமெரிக்க அரசியல் பிரபலங்களான சபாநாயகர் நான்சி பெலோசி, துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோரும் தடுப்பூசி மருந்தின் முதல் டோஸை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் கடந்த வாரம் இரண்டாவது வைரஸ் தடுப்பு மருந்தான மாடர்னாவுக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியது. அந்நாட்டில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஜோ பைடன், "வைரஸ் தடுப்பூசி அனைவருக்கும் வழங்குவதற்கு கையிருப்பில் இருக்கும்போது அதைப் போட்டுக் கொள்ள அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே நானே அதை போட்டுக் கொண்டேன்," என்று கூறினார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை தொடங்கியதற்காக டிரம்பின் நிர்வாகத்துக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
முன்னதாக, ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனும் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்தின் முதலாவது டோஸை பெற்றுக் கொண்டார். அமெரிக்க துணை அதிபராக தேர்வாகியிருக்கும் கமலா ஹாரிஸும் அவரது கணவர் டோ எம்ஹோஃபும் அடுத்த வாரம் தடுப்பூசி மருந்தை போட்டுக் கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபராக அடுத்த ஆண்டு பதவியேற்றுக் கொண்ட பிறகு, முதல் நூறு நாட்களில் 10 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை போட ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த பெருந்தொற்று காலத்தில் அமெரிக்காவில் ஒரு கோடியே 80 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. அந்நாட்டில் மட்டும் 3.19 லட்சம் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இதேவேளை, கடந்த அக்டோபர் மாதம் கொரோனா வைரஸ் அறிகுறி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த டொனால்ட் டிரம்ப், தடுப்பூசியை போட்டுக் கொள்ளும் திட்டம் தனக்கு இல்லை என்று தெரிவித்தார்.
இதன் மூலம் அரசு நிர்வாகத்தில் வைரஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத உயர்நிலையில் இருக்கும் ஒரு சிலருள் முதன்மையானவராக டிரம்ப் கருதப்படுகிறார். இது பற்றி சில நாட்களுக்கு முன்பு அவரிடம் கேட்கப்பட்டது, "தடுப்பூசி போட்டுக் கொள்ள எந்த கால நேரத்தையும் நான் குறித்திருக்கவில்லை. சரியான நேரத்தில் அதை போட்டுக் கொள்வேன்," என்று கூறியிருந்தார்.
அமெரிக்காவில் தடுப்பூசி போட யாருக்கு முன்னுரிமை?
அமெரிக்காவில் தடுப்பூசி பெறுவதில் யாருக்கு முன்னுரிமை தரப்படும் என்ற பட்டியலை மூன்று கட்டங்களாக அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத்துறை வெளியிட்டிருக்கிறது.
அதன்படி 1ஏ என்ற பிரிவில், 2.10 கோடி சுகாதார ஊழியர்களுக்கு வைரஸ் தடுப்பூசி போடப்படுகிறது. இவர்களுடன் சேர்த்து நீண்ட கால பராமரிப்பில் முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் சுமார் 30 லட்சம் முதியோருக்கு தடுப்பூசி போடப்படும். இவர்களுக்கான தடுப்பூசி திட்டம் கடந்த வாரம் தொடங்கியது.
1பி பிரிவின்படி, 75 வயதை கடந்த அமெரிக்கர்களுக்கு வைரஸ் தடுப்பூசி போடப்படுகிறது. களப்பணியில் உள்ள சுகாதார ஊழியர்களுக்கு அடுத்தபடியாக இவர்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது. வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் வைரஸ் பாதித்த நோயாளிகளுடனும் நேரடி தொடர்பில் இருந்து சிகிச்சைக்கு உதவிடும் பணியில் இந்த சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல, அமெரிக்க சிறைத்துறை, தபால் துறை, கல்வி, பொது போக்குவரத்துத்துறை, பல சரக்கு கடைகள், தயாரித்து துறைகள், உணவு மற்றும் வேளாண் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் 1பி பிரிவில் இடம்பெறுகிறார்கள். இவர்களுக்கு 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தடுப்பூசி போடப்படுகிறது.
1சி பட்டியலில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும் மருத்துவ பிரச்னைகளுடன் இருப்பவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஆபத்தான கட்டத்தில் இருப்பவர்கள், களப்பணியில் இல்லாத சுகாதார ஊழியர்கள் இந்த பிரிவின்கீழ் வருகிறார்கள். அந்த வகையில் சுமார் 12.9 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும்.
தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவுக்கு ஃபைசர் நிறுவனம் அனுப்பி வைத்த 30 லட்சம் தடுப்பூசிகளில் இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை முதல் மாடர்னா தடுப்பூசி போடும் பணியும் தொடங்கப்பட்டிருக்கிறது. அந்த நாட்டுக்கு மேலும் 60 லட்சம் தடுப்பூசி மருந்து டோஸ்கள் அனுப்பி வைக்கப்படும் நிலையில் உள்ளன.