கொரோனா தடுப்பு மருந்து: மனிதர்களிடத்தில் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக ரஷ்யா அறிவிப்பு
திங்கள், 13 ஜூலை 2020 (11:30 IST)
உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
சீனாவில் கடந்தாண்டு இறுதியில் முதல் முதலில் கண்டறியப்பட்டதாக அறியப்படும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் தற்போது உலகம் முழுவதும் 1.28 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 5.68 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே, கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு உலகம் முழுவதும் 120க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ரஷ்யாவை சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி அதை மனிதர்களிடத்தில் வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக அறிவித்துள்ளதாக அந்த நாட்டை சேர்ந்த செய்தி முகமையான ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தகவலை இன்ஸ்டிடியூட் ஃபார் ட்ரான்ஸ்லேஸ்னல் மெடிசன் அண்ட் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குநர் வாடிம் டாரசோவ் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், "உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை வெற்றிகரமாக மனிதர்களிடம் பரிசோதனை செய்துள்ளோம். மாஸ்கோவில் உள்ள செச்செனோவ் அரசு மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தன்னார்வலர்களைக் கொண்டு மேற்கொண்ட இந்த பரிசோதனையில் நாங்கள் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்று தெரியவந்துள்ளது.
இந்த பரிசோதனையில் பங்கேற்ற முதல் குழுவினர் ஜூலை 15ஆம் தேதியும், இரண்டாவது குழுவினர் ஜூலை 20ஆம் தேதியும் வீடு திரும்புவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கமலே இன்ஸ்டிடியூட் ஆஃப் எபிடெமியாலஜி அண்ட் மைக்ரோபயாலஜியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய இந்த தடுப்பு மருந்தை மனிதர்களிடத்தில் பரிசோதிக்கும் பணியை கடந்த ஜூன் 18ஆம் தேதி செச்செனோவ் பல்கலைக்கழகம் தொடங்கியது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள செச்செனோவ் பல்கலைக்கழகத்தின் இயக்குநர்களில் ஒருவரான அலெக்சாண்டர் லுகாசேவ், "இந்த கட்டத்தில் நாங்கள் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்து மனிதர்களுக்குப் பாதுகாப்பானதா, இல்லையா என்பதை கண்டறிவதையே நோக்கமாக கொண்டிருந்தோம். பரிசோதனையின் முடிவில் இந்த தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த கட்டமாக இந்த தடுப்பு மருந்தை மிகப் பெரும் எண்ணிக்கையில் உற்பத்தி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து திட்டமிடப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
"பெருந்தொற்று நோயை உலகம் எதிர்கொண்டுள்ள சூழலில், செச்செனோவ் பல்கலைக்கழகம் ஒரு கல்வி நிறுவனமாக மட்டுமல்லாமல், தடுப்பு மருந்துகள் போன்ற முக்கியமான மற்றும் சிக்கலான தயாரிப்புகளை உருவாக்குவதில் பங்கேற்கக்கூடிய ஒரு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையமாகவும் செயல்பட்டது" என்று டாரசோவ் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த தடுப்பு மருந்து எப்போது விற்பனைக்கு வருமென்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், இதுகுறித்த தகவலை இந்தியாவுக்கான ரஷ்ய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இருப்பினும், இந்த தடுப்பு குறித்து உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட எந்த அமைப்பும் இதுவரை எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் என்னென்ன?
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயற்சிகள் நடந்து வந்தாலும், அவற்றில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அமெரிக்காவைச் சேர்ந்த கிலீட் சயின்சஸ், மொடேர்னா உள்ளிட்டவை முன்னணியில் உள்ளன.
இந்தியாவை பொறுத்தவரை, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணியில் ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் என்னும் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 'கோவாக்சின்' எனும் கொரோனா தடுப்பு மருந்தை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தி அதில் வெற்றிகண்டால் அதை இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15 அன்று பயன்பாட்டுக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் கூறியிருந்தது.
இதைத்தொடர்ந்து, மருத்துவ வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தடுப்பு மருந்தை இவ்வளவு குறுகிய காலகட்டத்தில் கண்டறிவது சாத்தியமில்லை என்று கேள்வி எழுப்பவே, இந்தியாவில் ஆராய்ச்சி நிலையில் உள்ள எந்த கொரோனா தடுப்பு மருந்தும் 2021ஆம் ஆண்டுக்கு முன்பு நடைமுறைக்கு வருவது சாத்தியமில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.
இந்த நிலையில், தடிப்புத் தோல் அழற்சியை / சொறி சிரங்கை குணப்படுத்தப் பயன்படும் டோலிசுமாப் என்ற மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு 'கட்டுப்படுத்தப்பட்ட அவசரகால தேவைக்காக' பயன்படுத்த இந்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.