தமிழ்நாட்டில் கொரோனா: தொழிற்சாலைகளைத் திறக்க அனுமதி தரப்பட்டு, ரத்து செய்யப்பட்டதா? நடந்தது என்ன?
புதன், 8 ஏப்ரல் 2020 (16:01 IST)
கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த தொழிற்சாலைகள் இயங்குவது குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு அதனை இரவில் திரும்பப் பெற்றது. இதற்கு என்ன காரணம்?
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது தொடர்பாக மார்ச் 23ஆம் தேதியன்று மாநில அரசு விரிவான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் எந்தெந்த அலுவலகங்கள், தொழிற்சாலைகள் இயங்கலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தன.
தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை, ரசாயனத் தொழிற்சாலைகள் உட்பட தொடர்ச்சியாக இயங்க வேண்டிய தொழிற்சாலைகள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமையன்று மாலையில், மாநில அரசு இது தொடர்பான விளக்கம் ஒன்றை வெளியிட்டது. அதன்படி, உருக்கு தொழிற்சாலை, சுத்திகரிப்புத் தொழிற்சாலை, சிமிண்ட், உரம், ரசாயனம், ஜவுளி தொழிற்சாலைகள், சர்க்கரை, கண்ணாடி, உருக்கி ஊற்றும் தொழிலகங்கள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள், பேப்பர் தொழிற்சாலைகள், டயர் தொழிற்சாலைகள், பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது.
ஏற்கனவே மூடப்பட்டிருக்கும் பல தொழிற்சாலைகளில் பராமரிப்புப் பணியில் ஈடுபட, குறைந்த அளவு தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள பொருட்களை பேக் செய்து, லேபிள் ஒட்டி ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்படும் என்றும் அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஊடகங்களில் தமிழக அரசு பல தொழிற்சாலைகளை இயக்க அனுமதி அளித்ததாக பரபரப்பாக செய்திகள் வெளியாயின. இதற்கு அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்த விளக்க அறிக்கை ரத்து செய்யப்பட்டிருப்பதாக தொழிற்துறை செயலர் உத்தரவிட்டிருந்தார்.
விளக்க அறிக்கை வெளிவந்து நான்கு மணி நேரத்திற்குள்ளாகவே அந்த அறிக்கை ரத்து செய்யப்பட்டது பல கேள்விகளை எழுப்பியது.
இது தொடர்பாக தமிழக அரசு வட்டாரங்களில் பேசியபோது, "ஏற்கனவே ரசாயனம், தோல், சர்க்கரை ஆலைகள் போன்றவை அருகில் உள்ள தொழிலாளர்களை வைத்து இயக்கிவருகின்றன. அந்தத் தொழில்துறைகளின் பட்டியல்தான் நேற்று வெளியிடப்பட்டது. மேலும் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ஆட்கள் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், புதிதாக பல தொழிற்சாலைகளை இயங்க அனுமதித்ததுபோல ஊடகங்களில் செய்திகள் வெளியாகிவிட்டன. ஆகவே அந்த விளக்க அறிக்கை ரத்துசெய்யப்பட்டுவிட்டது" என்று தெரிவித்தனர்.
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்துவந்த நிலையில், தெலங்கானா உள்ளிட்ட பல மாநில முதல்வர்கள் அந்த ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இந்த நிலையில் தொழிற்சாலைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது போன்ற விளக்க அறிக்கை ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. தொழிற்சாலைகளைத் திறந்தால், ஊழியர்கள் எப்படி பணிக்கு வருவார்கள் என்ற கேள்வியும் எழுந்தது.
இது தொடர்பாக பரபரப்பான செய்திகள் வெளியான நிலையில், அந்த விளக்க அறிக்கையை உடனடியாக ரத்துசெய்தது மாநில அரசு.