கொரோனா மன அழுத்தம்: பாலியல் துணையை தேடிக் கொள்ள அறிவுறுத்தும் நெதர்லாந்து
சனி, 16 மே 2020 (10:52 IST)
கொரோனா தொற்று நோய் உலகம் முழுக்க பரவிவரும் இந்த காலகட்டத்தில், நெதர்லாந்தில் திருமணமாகாதவர்கள் மற்றும் துணையில்லாதவர்கள் (சிங்கிள்ஸ்) ஒரு சிறந்த பாலியல் துணையைக் கண்டுபிடிக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
துணையில்லாத நபர்கள் தங்களுக்கான துணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என அந்நாட்டின் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான தேசிய அமைப்பு கூறியுள்ளது.
அப்படி துணையைத் தேர்வு செய்யும்போது அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால், அவர்கள் பாலியல் உறவில் ஈடுபடக்கூடாது எனவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
துணையில்லாத நபர்களுக்கு எவ்வித பாலியல் ஆலோசனையும் அரசு தரப்பில் வழங்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்தபிறகு இந்த அறிவுறுத்தல்கள் வந்துள்ளது.
கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் நெதர்லாந்தில் லாக் டவுன் நடைமுறைகள் அமலில் உள்ளது. அண்டை நாடுகளைப் போல இங்குக் கடுமையான விதிகள் அமல்படுத்தப்படவில்லை.
சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தால் சிறிய மக்கள் கூட்டத்துக்குக் கூட அனுமதியளிக்கப்பட்டது.
''இந்த நேரத்தில் துணையில்லாதவர்கள் பாலியல் உறவில் ஈடுபட விரும்புவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. எனவே பாலியலில் ஈடுபட விரும்பும் துணையில்லாதவர்கள், கொரோனா தங்களுக்குப் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்'' என அரசு தெரிவித்துள்ளது.
சுய இன்பம்
தங்களது துணைக்கு கொரோனா தொற்று இருக்கும் பட்சத்தில், சுய இன்பம் காண்பதே சிறந்த வழி எனவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல் லாக் டவுனில் இருந்து வெளியேறும் நடவடிக்கைகளை நெதர்லாந்து எடுத்து வருகிறது. முதல் கட்டமாக மே 11-ம் தேதி முதல் நூலகங்கள், சிகை அலங்கார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் நெதர்லாந்தில் 200 பேருக்கு கொரோனா தொற்றும், 53 மரணங்களும் பதிவாகியுள்ளது. மொத்தமான 43,880 கொரோனா தொற்றும், 5,500 மரணங்களும் இதுவரை அந்நாட்டில் பதிவாகியுள்ளது.