பெங்களூரு: தலைமுடி கொட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை - கடிதத்தைக் கைப்பற்றி போலீசார் விசாரணை

திங்கள், 4 ஜூலை 2022 (13:05 IST)
(இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (04/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)

பெங்களூருவில் கல்லூரி மாணவி ஒருவர் தனக்கு தலைமுடி கொட்டுவதால் தற்கொலை செய்துகொண்டதாக, போலீசார் தெரிவித்துள்ளதாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா கந்தேகவுடன பாளையா பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மகள் காவ்யா ஸ்ரீ (வயது 22). இவர், மைசூருவில் ராகவேந்திரா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் தங்கும் விடுதி ஒன்றில் தங்கி 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். இந்த நிலையில், காவ்யாஸ்ரீக்கு தலை முடி கொட்டும் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்காக அவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துள்ளார். ஆனாலும் முடி கொட்டும் பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் காவ்யாஸ்ரீ மனமுடைந்து காணப்பட்ட நிலையில் காவியாஸ்ரீ, தங்கும் விடுதியில் தனது அறையில் தற்கொலை செய்துகொண்டதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்த நஜர்பாத் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு காவ்யாஸ்ரீ எழுதி வைத்த கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் தலைமுடி கொட்டுவதால் தற்கொலை செய்துகொண்டதாகவும், எனது சாவுக்கு வேறு யாரும் காரணவில்லை என்று எழுதி இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து நஜர்பாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தமிழ் பாட புத்தகத்தில் இடம்பெற்ற புதுக்கோட்டை மாணவி

மகாராஷ்டிரா மாநில தமிழ் பாடப் புத்தகத்தில் புதுக்கோட்டை மாணவி இடம் பிடித்திருப்பது பலரது பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளதாக, 'இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கே.ஜெயலட்சுமி. இவர் தற்போது கல்லூரி ஒன்றில் பி.ஏ. வரலாறு படித்து வருகிறார்.

இவர் புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்தபோது, அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்று நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிட தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால், அதற்கான பயணச் செலவை மாணவியே ஏற்க வேண்டும் என அந்நிறுவனம் அறிவித்திருந்தது.

இதுகுறித்து தகவல் வெளியானதைத் தொடர்ந்து பலரும் இம்மாணவிக்கு உதவி செய்தனர். மேலும், அதற்கான முழு தொகையையும் 'கிராமாலயா' என்ற தொண்டு நிறுவனம் வழங்க முன்வந்தது.

அப்போது, தனக்கு தேவையான தொகை கிடைத்துவிட்டது என்று தொண்டு நிறுவனத்தினரிடம் கூறிய மாணவியிடம், வேறு ஏதாவது உதவி தேவையெனில் கேளுங்கள் என்றதும், "எங்கள் ஊர் மக்கள் பலர் கழிப்பறை இல்லாமல் அவதிப்பட்டு வருவதால், வீட்டுக்கொரு தனிநபர் கழிப்பறை கட்டிக் கொடுங்கள்" என்று கேட்டுள்ளார்.

இதை ஏற்ற அந்த நிறுவனம், 126 வீடுகளுக்கு கழிப்பறையை கட்டிக் கொடுத்தது.

ஜெயலட்சுமியின் இத்தகைய செயல்பாடுகள் குறித்து மகாராஷ்டிராவில் உள்ள 7-ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் 'கனவு மெய்ப்படும்' எனும் தலைப்பில் 4 பக்கத்தில் ஒரு பாடம் இடம்பெற்றுள்ளது என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேரர் அமைப்புகளின் ஒன்றியம் இலங்கை ஜனாதிபதிக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டை மேலும் அராஜக நிலைக்கு ஆளாக்காமல் எதிவரும் 7ஆம் தேதிக்குள் ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என, தேரர் அமைப்புகளின் ஒன்றியம் எச்சரித்துள்ளதாக, 'வீரகேசரி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

தேரர்கள் அமைப்புகளின் ஒன்றியத்தின் 11 தேரர்கள் கைச்சாத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அக்கடிதத்தில், "ஜனாதிபதி பதவி விலகாவிட்டால், நாட்டில் இருக்கும் அனைத்து தேரர்களையும் கொழும்புக்கு அழைத்துவந்து 7 ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து பாரிய போராட்டத்தை மேற்கொள்வோம்.

நாடு எதிர்கொண்டுள்ள பிரச்னை மற்றும் அராஜக நிலைமையை சீர்செய்வதற்கு உடனடியாக செயற்படுமாறு மகாநாயக்க தேரர்கள் கூட்டாக கைச்சாத்திட்டு அனுப்பிய கடிதத்துக்கு ஆரோக்கியமான பதிலொன்றை அரசாங்கம் தெரிவிக்காத காரணத்தினால் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கின்றோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்