குழந்தைகளை பெற்றுக் கொள்ள விரும்பாத சீன பெண்கள் - காரணம் என்ன?

புதன், 26 மே 2021 (11:19 IST)
சீனாவில், ஒரு தசாப்தத்திற்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1960களில் இருந்து பிறப்புகள் மிக அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது என்பதைப் காட்டுகிறது.
 
இது குடும்ப கட்டுப்பாட்டுக் கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான அழைப்புகளுக்கு வழிவகுத்துள்ளது. ஆனால் குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் ஒரே விஷயம் இந்தக் கொள்கைகள் மட்டுமே அல்ல என சீனாவில் சிலர் கூறுகின்றனர்.
 
பெய்ஜிங்கில் வசிக்கும் லிலி-க்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அவரது அம்மா தொடர்ந்து தொந்தரவு செய்யும் போதிலும், அவருக்கு விரைவில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள எந்தத் திட்டமும் இல்லை.
 
திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆன 31 வயதான இவர், குழந்தையை வளர்ப்பதில் உள்ள "தொடர் கவலைகள்" இல்லாமல் "தன் வாழ்க்கையை" வாழ விரும்புகிறார்.
 
"எனக்கு தெரிந்தவர்களில் ஒரு சிலருக்கே குழந்தைகள் உள்ளன. அப்படி இருப்பவர்களும் குழந்தையை கவனிக்க நல்ல பராமரிப்பாளரைத் தேடுவது, குழந்தைகளை சிறந்த பள்ளிகளில் சேர்ப்பது பற்றியே தொடர்ந்து சிந்திக்கிறார்கள். இது எனக்கு சோர்வைத் தருகிறது" என்கிறார் அவர்.
தனது பெயர் வெளியிடப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் பிபிசியிடம் பேசிய லிலி, தனது மகள் எப்படி உணர்கிறாள் என்பதை தன் தாய் அறிந்தால் அதிர்ந்துபோய்விடுவார் என குறிப்பிடுகிறார்.
 
ஆனால் தலைமுறைகளுக்கு இடையிலான இந்த கருத்து வேறுபாடு, குழந்தை பிறப்பின் மீது இளம் நகர்ப்புற சீனர்களின் மாறிவரும் அணுகுமுறையை பிரதிபலிக்கிறது.
 
தரவுகள் தெரிவிக்கும் உண்மை
 
கடந்த ஆண்டு சுமார் 12 மில்லியன் குழந்தைகள் பிறந்தன என்பதை இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட சீனாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு காட்டுகிறது.
 
2016ஆம் ஆண்டில் இருந்த 18 மில்லியனை ஒப்பிடும்போது இது கணிசமான சரிவு. கூடவே 1960களுக்குப் பிறகு பதிவான மிகக் குறைவான எண்ணிக்கை இது.
 
ஒட்டுமொத்த மக்கள்தொகை வளர்ந்தாலும், பல தசாப்தங்களில் இதுவே மிக மெதுவான வளர்ச்சியாகும். சீனா எதிர்பார்த்ததை விட விரைவில் மக்கள் தொகை வீழ்ச்சியை எதிர்கொள்ளக்கூடும் என்ற கவலையை இது அதிகரித்துள்ளது.
 
இளைஞர்களை விட வயதானவர்கள் அதிகம் என்கிற தலைகீழ் வயது அமைப்பு காரணமாக சுருங்கிவரும் மக்கள்தொகை சிக்கலை உருவாக்கியுள்ளது.
 
அது நிகழும்போது, எதிர்காலத்தில் வயதானவர்களை கவனித்துக்கொள்ள போதுமான ஆட்கள் இருக்க மாட்டார்கள், மேலும் உடல்நலம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான தேவையும் அதிகரிக்கும்.
 
குறைந்த கருவுறுதல் விகிதம், சீனாவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் இயல்பான விளைவுகளாகும் என்று தேசிய புள்ளிவிவர பணியகத்தின் தலைவர் நிங் ஜிஷே, அரசு விளக்கக்காட்சியில், கூறினார்.
 
நாடுகள் அதிகமாக வளர்ச்சியடையும் போது, கல்வி அல்லது பிற முன்னுரிமைகள் காரணமாக பிறப்பு விகிதங்கள் வீழ்ச்சியடையும்.
 
உதாரணமாக, ஜப்பான், தென் கொரியா போன்ற அண்டை நாடுகளில், அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள பல்வேறு அரசு ஊக்கத்தொகைகள் வழங்கப்படும் போதிலும், சமீபத்திய ஆண்டுகளில் பிறப்பு விகிதங்கள் மிகக் குறைந்த அளவுக்கு சென்றுவிட்டன.
 
கடுமையான பாலின சமச்சீரின்மை
 
ஒரு குடும்பத்தைத் தொடங்குவது பற்றி சிந்திப்பது ஒருபுறம் இருக்க, திருமணத்திற்கு ஒரு பெண்ணை கண்டுபிடிப்பதில் சிரமத்தை எதிர்கொள்ளும் ஆண்கள் மிக அதிகமாக உள்ளதால் சீனாவின் கஷ்டங்கள் தனிப்பட்டதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
 
எல்லாவற்றிற்கும் மேலாக, நாட்டில் கடுமையான பாலின சமச்சீரின்மை உள்ளது. கடந்த ஆண்டு, ஆண்களின் எண்ணிக்கை பெண்களை விட 34.9 மில்லியன் அதிகம்.
 
இது நாட்டின் கடுமையான 'ஒரு குழந்தைக் கொள்கையின்' பின்விளைவாகும். மக்கள்தொகை வளர்ச்சியைக் குறைக்க 1979ல் இந்தக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது.
 
வரலாற்று ரீதியாக சிறுமிகளை விட சிறுவர்களுக்கு சாதகமாக இருக்கும் ஒரு கலாசாரத்தில், இந்தக் கொள்கை கட்டாய கருக்கலைப்புக்கு வழிவகுத்தது. இதைத்தொடர்ந்து 1980களில் இருந்து ஆண் குழந்தைகளே மிக அதிகமாகப்பிறந்தன.
 
"இதன் காரணமாக திருமண சந்தையில், குறிப்பாக குறைந்த சமூக பொருளாதார வளங்களைக் கொண்ட ஆண்களுக்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன," என சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையைச் சேர்ந்த முனைவர் முஷெங் கூறினார்.
 
2016ஆம் ஆண்டில் இந்தக்கொள்கையை முடிவுக்குக் கொண்டுவந்த அரசு, இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள தம்பதிகளுக்கு அனுமதியளித்தது.
 
இந்த சீர்திருத்தம் கொண்டு வரப்பட்ட முதல் இரண்டாண்டுகளில் பிறப்புவிகிதம் அதிகரித்தபோதிலும், அதற்குப் பின் தொடர்ந்த சரிவை தடுத்து நிறுத்த முடியவில்லை.
 
'இந்த சூழ்நிலையில் யார் குழந்தைகளைப் பெற துணிவார்கள்?'
கல்விக்கான பண ஆதரவு அல்லது குழந்தை பராமரிப்பு வசதிகள் போன்ற குடும்ப வாழ்க்கையை ஆதரிக்கும் பிற மாற்றங்களுடன் இந்தக் கொள்கைத் தளர்வு வரவில்லை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
 
அதிகரித்துவரும் வாழ்க்கைத் தரச் செலவுகளுக்கு மத்தியில் குழந்தைகளை வளர்ப்பதற்கு பலரால் முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
 
"குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்கான மக்களின் தயக்கம் குழந்தையை வளர்ப்பதில் இல்லை, ஆனால் அதற்குப் பிறகு வருவதில் இருக்கிறது," என முஷெங் கூறினார்.
 
ஒரு நபரை எது வெற்றியாளராக்குகிறது என்கிற கருத்து சீனாவிலும் மாறிவிட்டது. குறைந்தபட்சம் பெரிய நகரங்களில் வசிப்பவர்களுக்கு இது பொருந்தும் என்கிறார் அவர்.
 
திருமணம் செய்து கொள்வது மற்றும் குழந்தைகளைப் பெறுவது போன்ற வாழ்க்கையின் பாரம்பரிய அடையாளங்களால் இது தொடர்ந்து வரையறுக்கப்படுவது இல்லை. மாறாக இது தனிப்பட்ட வளர்ச்சியைப் பற்றியதாக மாறி இருக்கிறது.
 
பாலின விதிமுறைகள் காரணமாக பெண்கள்தான் குழந்தைகளின் முதன்மை பராமரிப்பாளராக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
சீனாவில், குழந்தையின் தந்தைக்கு 14 நாட்கள் பேறுகால பணிவிடுப்பு என்ற சட்டம் இருந்தாலும்கூட, ஆண்கள் அதை எடுத்துக்கொள்வது மிகவும் அரிது. மேலும் முழு நேரமும் குழந்தைகளை தந்தைகள் கவனிப்பது ஏறக்குறைய நடைமுறையில் இல்லை என்றே சொல்லலாம்.
 
பெண்கள் குழந்தைகளைப் பெற விரும்பாததற்கு இதுபோன்ற அச்சங்களே காரணம். இது அவர்களின் தொழில் வாய்ப்பைக் குறைக்கும் என அவர்கள் நினைக்கிறார்கள் என முஷெங் கூறினார்.
 
சீன சமூக ஊடகங்களில் இந்த பிரச்னை ஒரு பரபரப்பான தலைப்பு. "ஏன் இந்த தலைமுறை இளைஞர்கள் குழந்தைகளைப் பெற விரும்பவில்லை" என்ற ஹேஷ்டேக், மைக்ரோ பிளாகிங் தளமான வெய்போவில் 440 மில்லியனுக்கும் அதிகமான முறை படிக்கப்பட்டது.
 
"உண்மை என்னவென்றால், பெண்களுக்கு நிறைய நல்ல வேலைகள் இல்லை. நல்ல வேலைகளில் உள்ள பெண்கள் அதை தக்கவைத்துக்கொள்ள எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் யார் குழந்தைகளைப் பெறத் துணிவார்கள்?" என ஒருவர் கேட்கிறார்.
 
சமீபத்திய ஆண்டுகளில் சில நகரங்கள் மகப்பேறு விடுப்பு சலுகைகளை நீட்டித்துள்ளன. பெண்களுக்கு பொதுவாக அளிக்கப்படும் 98 நாட்கள் விடுப்புக்கு அப்பாலும் அவர்கள் மேலும் விடுப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்ற சலுகை வழங்கப்பட்டிருந்தாலும், இது பணியிட பாலின பாகுபாட்டிற்கு மட்டுமே பங்களித்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
 
மார்ச் மாதத்தில், சோங்குவிங்கில் வேலைக்கு விண்ணப்பம் செய்த ஒரு பெண், தான் கர்ப்பமாகிவிட்டால் வேலையை விட்டு விலகுவதாக உத்தரவாதம் அளிக்கும்படி, ஒரு வேலை அளிப்பவரால் கட்டாயப்படுத்தப்பட்டார்.
 
நிலைமையை மாற்றியமைப்பது சாத்தியமில்லையா?
பிறப்பு கட்டுப்பாடுகள் எதிர்காலத்தில் முற்றிலும் நீக்கப்படும் என்றும் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் இது நிகழக்கூடும் என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் சில தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 
ஆனால் சீனா தனது பிறப்பு கட்டுப்பாட்டுக் கொள்கைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சிலர் அழைப்பு விடுத்துள்ளனர்.
 
"பிறப்பு தாராளமயமாக்கல் இப்போது நடக்க வேண்டும். ஏனென்றால், இப்போதும் குழந்தைகளை பெற்றுகொள்ள விருப்பம் இருந்தாலும் முடியாத நிலையில் சிலர் உள்ளனர்," என்று சீனாவின் மத்திய வங்கியின் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் இணையதளத்தில் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையில் தெரிவித்தனர்.
 
"யாருக்குமே குழந்தைகளைப் பெற விருப்பம் இல்லாதபோது அதை தாராளமயமாக்குவது பயனற்றது... எனவே நாம் தயங்கக்கூடாது."
 
ஆனால் சில வல்லுநர்கள் இதை கவனமாக செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றனர். நகரவாசிகளுக்கும் கிராமப்புற மக்களுக்கும் இடையிலான மிகப்பெரிய ஏற்றத்தாழ்வை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
பெய்ஜிங், ஷாங்காய் போன்ற வாழ்வாதார நிலை அதிகமாக உள்ள நகரங்களில் வசிக்கும் பெண்கள், பிரசவத்தை தாமதப்படுத்தவோ அல்லது தவிர்க்கவோ விரும்புவதைப் போல, கிராமப்புறங்களில் உள்ளவர்கள் இன்னும் பாரம்பரியத்தை பின்பற்றவும் பெரிய குடும்பங்களை விரும்பவும் வாய்ப்புள்ளது என அவர்கள் கூறுகிறார்கள்.
 
"நாம் கொள்கையை தளர்த்தினால், நகரங்களில் இருப்பவர்களை ஒப்பிடும்போது கிராமப்புறங்களில் உள்ளவர்கள் அதிகமாக குழந்தை பெற்றுக்கொள்ள தயாராக இருக்கக்கூடும். இதனால் பிற சிக்கல்கள் ஏற்படலாம்" என கொள்கை தொடர்புடைய ஒரு உள் நபர் ராய்ட்டர்ஸிடம் கூறினார்.
 
இது கிராமப்புற குடும்பங்களிடையே வறுமை மற்றும் வேலைவாய்ப்பு அழுத்தங்களுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரு தீர்வு என்பது இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால் சியான் ஜியான்டோங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மக்கள்தொகை நிபுணர் முனைவர் ஜியாங் குவான்பாவ், சீனாவின் மக்கள்தொகை துயரங்களை முடிவுக்குக் கொண்டுவருவது இப்போதும் சாத்தியம் என நம்புகிறார்.
 
கருவுறுதல் விகிதங்கள் குறைந்து வரும் போதிலும், அதை அதிகரிப்பது சாத்தியம்தான். ஏனென்றால் சீனர்கள் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெறுவது இப்போதும் ஒரு சமூக விதிமுறையாக தொடர்ந்து உள்ளது என்கிறார் அவர்.
 
உதாரணமாக, குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியில், குடும்பங்களை ஆதரிப்பதற்கான கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமானால் மாற்றத்திற்கான நம்பிக்கை இப்போதும் உள்ளது. "இது இன்னமும் கைமீறிப்போகவில்லை."
 
லிலி கூட தனது மனதை மாற்றிக்கொள்ளக்கூடும்.
 
"குழந்தைகள் தங்களுக்குத் தேவையானவற்றை பெறுவதற்கு போட்டி போடவேண்டிய கட்டாயம் குறைவாக இருக்கும் ஒரு சூழல் உருவானால், நான் ஒரு குழந்தையைப் பெறுவதற்கு மனரீதியாகத் தயாராக இருப்பதாகவும், மன அழுத்தம் குறைந்திருப்பதாகவும் உணரக்கூடும். இதைக் கேட்டு என் அம்மா மிகவும் மகிழ்ச்சி அடைவார்," என்று அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்