சீனாவில் அடுத்தடுத்து 2 அமைச்சர்கள் நீக்கம்: அரசியல் எதிரிகளை களை எடுக்கிறாரா ஷி ஜின்பிங்?

புதன், 25 அக்டோபர் 2023 (21:17 IST)
சீனாவின் பாதுகாப்புத்துறை அமைச்சரான லி ஷங்ஃபூ பொதுவெளியில் இருந்து மறைந்து 2 மாதங்களுக்குப் பிறகு சீன அரசு அதிகாரப்பூர்வமாக அவரை பதவியிலிருந்து நீக்கியுள்ளது.
 
லி ஷங்ஃபூவை நீக்கியதற்கான காரணத்தையோ அவருக்கான மாற்று அமைச்சரையோ சீன அரசு இன்னும் அறிவிக்கவில்லை.
 
கடந்த ஜூலை மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் குவென் கேங்க் உள்பட பல மூத்த ராணுவ அதிகாரிகளை சமீபத்தில் சீன அரசு பதவி நீக்கம் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சரும் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
 
சீன அரசின் கவுன்சிலில் இருந்தும் குவென் மற்றும் லி ஆகிய இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டுள்ளனர்.
 
இவர்கள் இருவரின் பதவி நீக்கத்திற்கு சீன அரசின் மூத்த உறுப்பினர்களும் அரசின் நிலைக்குழுவும் ஒப்புதல் அளித்திருப்பதாக சீன அரசின் அதிகாரப்பூர்வ ஊடகமான சிசிடிவி தெரிவித்துள்ளது.
 
இந்த வாரம் பெய்ஜிங்கில் நடக்கவுள்ள சர்வதேச ராணுவ அதிகாரிகளின் கூட்டத்திற்கு சீன அரசு தயாராகி வரும் நிலையில் சீனாவிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் இல்லாத சூழல் தற்போது உருவாகியுள்ளது.
 
கடந்த மார்ச் மாதம்தான் பாதுகாப்புத்துறை அமைச்சராக லி நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், உபகரணங்கள் வாங்கியது மற்றும் மேம்பாடு தொடர்பாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டில் அவரிடம் விசாரணை செய்யப்பட்டதாக கடந்த மாதம் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
 
கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி பெய்ஜிங்கில் நடந்த ஆப்ரிக்க நாடுகள் உடனான பாதுகாப்பு மாநாட்டில்தான் அவர் கடைசியாக பொதுவெளியில் தோன்றினார்.
 
சீனாவின் செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட் ஏவுதள நிலையத்தில் வான்வெளி பொறியாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய ஜெனரல் லி, எந்த பிரச்சனையும் இன்றி சீன ராணுவ மற்றும் அரசியலின் அதிகார வட்டத்திற்குள் நுழைந்தார்.
 
கடந்த 2018ம் ஆண்டு, சீன ராணுவத்தின் உபகரணங்கள் மேம்பாட்டுத் துறையின் தலைவராக இருந்தார். அப்போது ரஷ்யாவிடமிருந்து போர் விமானங்கள் மற்றும் ஆயுதங்கள் வாங்கியதற்காக அமெரிக்க அரசு லி ஷங்ஃபூ மீது தடை விதித்தது. அமெரிக்க அரசு அவர் மீது விதித்த தடை அவரது வளர்ச்சிக்கான ஒரு தடையாக பார்க்கப்பட்டது.
 
கடந்த வருட ஆரம்பத்தில் சிங்கப்பூரில் நடந்த பாதுகாப்புத்துறை மாநாட்டில் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டினை சந்திக்க லி மறுத்தார்.
 
 
பதவி பறிக்கப்பட்ட வெளியுறவுத்துறை அமைச்சர் குவென் கேங்க் போலவே லி ஷங்ஃபூவும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்ன் விருப்பத்திற்குரிய அமைச்சராக இருந்தார்.
 
வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டு ஏழு மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் குவென் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.
 
குவென் பதவி நீக்கத்திற்கு எந்த காரணமும் சொல்லப்படாத நிலையில் வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் வெளியிட்ட செய்தியில் அவர் அமெரிக்காவிற்கான சீன தூதராக இருந்தபோது திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
சில காலத்திற்கு பிறகு, சீனாவின் அணுஆயுதக் கிடங்கை நிர்வகித்து வந்த குழுவின் இரண்டு தலைவர்கள் மாற்றப்பட்டனர். இது ஒரு களையெடுக்கும் நடவடிக்கையா என்ற கேள்வியையும் இந்த சம்பவம் எழுப்பியது.
 
அந்த இரண்டு தலைவர்களான, சீன ராணுவத்தின் ராக்கெட் பிரிவின் தலைவரான ஜெனரல் லி யுச்சாவ் மற்றும் அவருக்கு அடுத்தக்கட்ட தலைவரும் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு பல மாதங்கள் “காணாமல்” போயிருந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்