பாலியல் குற்றங்களைக் குறைக்க ரசாயன முறை ஆண்மை நீக்கம்: பாகிஸ்தான் திட்டம் பலன் தருமா?
வெள்ளி, 18 டிசம்பர் 2020 (11:55 IST)
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அமைச்சரவை பாலியல் வல்லுறவு குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரசாயன ரீதியில் ஆண்மையை நீக்கும் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இம்மாதிரியான சட்டங்கள் பாலியல் வல்லுறவு குற்றங்களை தடுத்து பெண்களை காக்குமா?
இந்த முடிவை தொடர்ந்து பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர், சமூகநல பணியாளர்கள், மற்றும் வழக்குரைஞர்களிடம் இதுகுறித்து பிபிசி பேசியது.
"அரசு கடுமையான தண்டனைகளை அறிமுகப்படுத்துவது நல்லது. ஆனால் தண்டனைகளை அறிமுகம் செய்வது மட்டும் போதாது."
இது பாலியல் வல்லுறவு குற்றத்தால் பாதிக்கப்பட்ட மகளுக்காக நீதிமன்றத்தை நாடிய தாய் ஒருவரின் கூற்று.
செப்டம்பர் மாதம் பிபிசியிடம் பேசிய அந்த தாய் அமிமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது மகளின் வழக்கு வலுவாக இல்லை என போலீசார் தன்னிடம் கூறிவருவதாக தெரிவித்தார். அமிமாவின் மகளை அவரது குடும்பத்தை சேர்ந்த ஓர் ஆண் பாலியல் வல்லுறவு செய்துள்ளார். பின் சமூகத்தில் உள்ள பிற உறுப்பினர்களிடம் அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்கவும் கோரியுள்ளார். ஆனால் அமிமா தனது மகளை அவருக்கு திருமணம் செய்து வைக்க ஒப்புக் கொள்ளவில்லை.
பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட ஆறு வயது சிறுமி ஒருவர் பிபிசியிடம் பேசியபோது இது எந்த ஒரு குறிப்பிட்ட குழுவுக்கும் எதிரான போக்கு இல்லை. சமூகத்தின் ஒட்டுமொத்த மனப்பான்மையும் இந்த விஷயத்தில் மாற வேண்டும் என்று தெரிவித்தார்.
இம்மாதிரியான கடுமையான தண்டனைகள் இதுபோன்ற குற்றங்களை குறைக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
கூட்டு பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட 24 வயது பெண் ஒருவர் தனது வழக்கின் தீர்ப்புக்காக காத்திருக்கிறார். அவரின் தந்தை இந்த வழக்குக்காக நீதிமன்றத்திற்கு வருவது தனக்கோ அல்லது தனது மகளுக்கோ எளிதானது இல்லை என்கிறார். இருப்பினும் இது ஒரு நல்ல முடிவு என்று கூறுகிறார் அவர்.
மேலும் அவர், ஒருவரை கொல்வதால் எந்த பயனும் இல்லை என்றும், உயிரோடு விட்டுவிட்டு தண்டிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்.
அரசு சாரா தொண்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் மனாசே பானு, இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 2000 குழந்தைகள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளனர் அதில் சிலர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர் என பிபிசியிடம் தெரிவித்தார்.
இம்மாதிரியான தண்டனைகள் அச்சத்தை ஏற்படுத்தும் என்று கூறும் பானு எந்த ஒரு பிரச்னைக்கும் இறுதி தீர்வு என்று ஒன்றில்லை என்கிறார். ஆண்மை என்பது இந்த சமூகம் பிடித்துக் கொண்டிருக்கும் ஒன்று. ஆனால் அதற்கு ஒரு தண்டனை என்பது நிச்சயம் வரவேண்டும் என்கிறார்.
நேற்றைய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு பேசிய தகவல் துறை அமைச்சர் ஷிப்லி ஃபராஸ், தாய் மற்றும் மகள் ஒருவரின் பாலியல் வல்லுறவு வழக்கு குறித்து பிரதமர் இம்ரான் கான் மிகவும் வருத்தமடைந்து இந்த சட்டத்தை கொண்டுவர சட்டத்துறை அமைச்சகத்தை கோரினார் என்றார்.
மேலும் ரசாயன முறையில் ஆண்மை நீக்குதலை தவிர, மரண தண்டனையும் இந்த புதிய சட்டத்தில் அடங்கும் என ஷிப்லி ஃபராஸ் தெரிவித்தார்.
இந்த சட்டத்திற்கான ஒப்புதல் குறித்து பேசிய உள்துறை விவகாரத்தில் பிரதமரின் ஆலோசகரும், பாரிஸ்டருமான ஷேசாத் அக்பர், இந்த சட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வல்லுறவு குற்றத்தில் ஈடுபடுவோரை விசாரிக்கவும் தண்டிக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது. இது பிரதமரின் நேரடி பார்வையில் இருக்கும் என ட்விட்டரில் தெரிவித்தார்.
இந்த சட்டத்தில் உடனடி விசாரணை மற்றும் தண்டனைக்காக முக்கிய முடிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.
குழந்தைகள் பாதுகாப்பு நிபுணர் வலேரே கான் பிபிசியிடம், இந்த யோசனையை பாகிஸ்தான் இந்தோனீசியாவை பார்த்து எடுத்துள்ளது என்று தெரிவித்தார். மேலும் இந்த குற்றத்தில் அடிக்கடி ஈடுபடுபவர்களுக்கு இந்த தண்டை வழங்கப்படுகிறது என்று கூறும் அவர், இதில் சில நிபந்தனைகள் பின்பற்றப்பட வேண்டும் என்கிறார்.
இந்த தண்டனையை பொறுத்தவரை, மருத்துவ நிபுணர்கள், அறிவியல் அமைப்பு, என அனைத்தும் தேவை. ஏனென்றால் ஒரே ஒரு ஊசியை மட்டும் வைத்து ஒருவரை ஆண்மை இழக்க செய்ய இயலாது. இதில் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையும் அவசியம் என்கிறார் கான்.
அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் சபாஹத் சகாரியா, இது குற்றவாளிகள் தங்கள் பாலியல் ஆசைகளை குறைத்துக் கொள்ள கொடுப்பதற்கான ஒரு மருந்து என்கிறார்.
மேலும் இந்த சட்டம் அமலில் உள்ள உலக நாடுகளில், குற்றவாளிகள் தாங்களே முன்வந்து இந்த மருந்தை எடுத்துக் கொள்வதுண்டு என்கிறார்.
சபஹத்தை பொறுத்தவரை இது வெறும் பாலியல் ஆசை சார்ந்தது மட்டுமல்ல என்கிறார். டெல்லியில் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவு செய்யும் போது குற்றவாளிகள் இரும்புக் கம்பியை பயன்படுத்தினர். எனவே இம்மாதிரியாக ஆண்மை நீக்கம் செய்வது இந்த குற்றங்களை தடுக்குமா என்ற கேள்விகள் எழுகின்றன.
ஒருவரின் ஆண்மையை இழக்கச் செய்வது மனிதத்தன்மையற்ற செயல் மட்டுமல்ல, அரசமைப்புக்கு எதிரானது என்கிறார் வலேரி கான்.
மேலும் இந்த சட்டம் பாகிஸ்தானால் கையெழுத்திடப்பட்ட சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச கூட்டமைப்புக்கு எதிரனாதாகவும் உள்ளது என்கிறார் வலேரியா கான்.
பெண் உரிமை ஆர்வலர் மலிஹா சியா, தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் குற்றங்களை நிரூபிக்க கடினமாக இருக்கும் என்கிறார். "தற்போதைய சூழலில் தடயவியல் விசாரணைக்கான கட்டுப்பாடுகள் இல்லை, நவீன இயந்திரங்கள் இல்லை. விசாரணையாளர்களுக்கு மனநலரீதியான பயிற்சி இல்லை. எனவேதான் இந்த குற்றங்கள் குறையாமல் உள்ளன," என்கிறார் மலிஹா சியா.
மேலும் இம்மாதிரியான வழக்குகளில் வெளிப்படைத்தன்மையும், விரைந்து முடிக்கும் வழக்கமும் வேண்டும் என்கிறார் மலிஹா சியா.