வெளிநாட்டுக் குற்றவாளிகளை திருப்பியனுப்புவதில் பிரிட்டிஷ் அரசு தாமதம்

புதன், 22 அக்டோபர் 2014 (19:24 IST)
வெளிநாடுகளைச் சேர்ந்த பெருமளவிலான குற்றவாளிகளை வெளியேற்றுவதற்கு தவறிவருவதாக பிரிட்டிஷ் அரசாங்கம் மீது கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக் குற்றவாளிகளை அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பியனுப்பும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படவுள்ளதாக 2006-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
 
எனினும், 2006-ம் ஆண்டிலிருந்ததை விட அதிகளவான வெளிநாட்டுக் குற்றவாளிகள் தற்போது பிரிட்டனில் இருப்பதாக பொதுச் செலவினங்களை கண்காணிக்கின்ற தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
 
பிரிட்டனில் வாழுகின்ற வெளிநாட்டுக் குற்றவாளிகளில் 700க்கும் மேற்பட்டவர்கள் தலைமறைவாகியுள்ளதாக அந்த அமைப்பு கணக்கிட்டுள்ளது.
 
இவர்களில் கிட்டத்தட்ட 60 பேர் பொதுமக்களுக்கு மோசமான ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடியவர்கள் என்றும் தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
 
ஆனால், வெளிநாட்டுக் குற்றவாளிகள் தொடர்பில் தாம் திட்டவட்டமான அணுகுமுறையையே கையாள்வதாகவும், அவர்களை சொந்த நாடுகளுக்குத் திருப்பியனுப்பும் பணிகளை வேகப்படுத்துவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரிட்டிஷ் அரசாங்கம் கூறுகின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்