காசா: பிரிட்டனின் முதல் முஸ்லிம் பெண் அமைச்சர் வார்சி பதவி விலகினார்

புதன், 6 ஆகஸ்ட் 2014 (11:32 IST)
பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சகத்தின் துணை அமைச்சர், சயீதா வார்சி, காசா தாக்குதல் பிரச்சினையில் பிரிட்டிஷ் அரசின் நிலைப்பாடு தொடர்பாக பதவி விலகியுள்ளார்.

காசா பிரச்சினையில் பிரிட்டிஷ் அரசு எடுத்திருக்கும் நிலைப்பாடு "தார்மீக ரீதியில் நியாயப்படுத்த முடியாதது" என்று அவர் கூறியிருக்கிறார்.

தான் வருத்தத்துடனே பதவி விலகுவதாகவும், ஆனால்,காசா குறித்த அரசின் தற்போதைய கொள்கை, பிரிட்டனின் நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதாகத் தான் நம்புவதாகவும், வார்சி, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரனுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருக்கிறார்.

வார்சி அம்மையார்தான் , பிரிட்டிஷ் அமைச்சரவை ஒன்றில் பதவிக்கு வந்த முதல் முஸ்லிம் பெண்மணியாவார்.

அவரது பதவி விலகல் குறித்து வருத்தம் தெரிவித்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன், தனது அரசு காசாவில் தற்போதைய நிலைமை சகித்துக்கொள்ள முடியாததாகவே இருப்பதாகவும், இரு தரப்புகளும் உடனடியாக நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு உடன்படவேண்டும் என்றுமே கூறிவருவதாகவும் கூறினார்.

காசாவின் மீது இஸ்ரேலியக் குண்டுத்தாக்குதல் பற்றி போதிய அளவு கடுமையாக கேமரன் கண்டனத்தைத் தெரிவிக்கவில்லை என்று எதிர்க்கட்சியினரும், அவரது கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் விமர்சித்து வருகிறார்கள் என்று பிபிசியின் அரசியல் விவகாரச் செய்தியாளர் கூறுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்